அரசியலில் ஆன்மீகம்
araciyalil āṉmīkam
அரசியலில் ஆன்மீகம் என்பது இக்காலத்தில் கருத்திற் கொள்ள வேண்டியதோர் அரசியற் கருத்தாகும்.
அரசியலில் ஆன்மீகம் என்பது இக்காலத்தில் கருத்திற் கொள்ள வேண்டியதோர் அரசியற் கருத்தாகும். அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பைக் காட்டுவது அரசியல் ஆன்மீகமாகும். “அரசு என்பது இயற்கையானது. இது மனிதத் தேவைகளிலிருந்து உருவாகி, மனித நல்வாழ்விற்காக நீடித்துள்ளது. எனவே அரசு இன்றி நல்வாழ்வு அமையாது. மனித நலத்திற்கும் முழுமை வாழ்விற்கும் இன்றியமையாத சிறப்புகள் அனைத்தையும் மனிதனுக்கு எட்டும்படி செய்கிற நிறுவனந்தான் அரசு” என்பது பண்டைய கிரேக்க அரசியல் அறிஞர்களின் கருத்து. சாக்ரட்டீசு, பிளேட்டோ ஆகியவர்கள் அரசியல் அறிவுக்கு வித்திட்ட கிரேக்க அறிஞர்கள் ஆவார்கள். இவர்கள் தத்துவஞானிகளுமாவர்; இகம், பரம் என மனித வாழ்வைத் தனித்தனியே பிரித்து அதனைச் சின்னாபின்னப்படுத்தி வன்முறை செய்யாதவர்கள். ஆகவே இவர்களது அரசியல் சிந்தனையில் ஆன்மீகம் என்பது அச்சாணியாக இருக்கும். இவர்கள் கூறும் சிறப்பு (Virtue) என்பது சமூக, அரசியலும், ஆன்மீகப் பொருளும் ஒருங்கே அடங்கிய ஒரு சொல்லாகும். இவர்களுக்குப் பின்வந்த அரிசுடாட்டில் பகுப்பாய்வு முறையைப் பின்பற்றி அரசியலையும், ஒழுக்கக் கூறுகளையும் தனித்தனியாக்க முனைந்து ஓரளவு வெற்றியும் கண்டார். கிரேக்கருக்குப்பின், உரோமானியரது அரசியல் சிந்தனையில் சட்டத்திற்கே சிறப்பான இடம் அளிக்கப்பட்டாலும் தெய்வீகச் சட்டம் எனும் அடிப்படைக் கருத்து மிகவும் வலியுறுத்தப்பட்டது.
ஆன்மா என்பதிலும், அது நிலைத்ததன்மை கொண்டது என்பதிலும், உண்மை, புனிதம், கடவுள், தத்துவம், சிறப்பு ஆகிய கருத்துக்களுடன் பின்னிப்பிணைந்து செல்லும் கிரேக்க சிந்தனைக்குப் பிறகு, இடைக்காலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் சிந்தனை என்பது, பெரும்பாலும் சமயம் சார்ந்த அரசியல் சிந்தனையாக மாறியது. திருச்சபையாளர் கருத்தில், அரசு என்பது மனித முழுமை வாழ்விற்குத் தேவையான நிறுவனம் என்பது ஒப்புக் கொள்ளப்படாது, அது பாவத்தின் கூலியாகத் தேவைப்படுகிற, ஆனால் கேடான ஒரு நிறுவனமாகத் தோற்றமளித்தது. ஆன்மீக நிலையிலிருந்து தவறி வீழ்ந்து சிறப்புகளை இழந்து தவித்துப் பாவத்தின் பயனாக அல்லற்படுகிறவர்களைத் தண்டிக்கும் நிறுவனமாக அரசும், அதற்கு நல்வழி காட்டி மனிதர்களின் நகரத்திலிருந்து, கடவுளின் நகரத்திற்கு மாந்தர்களை இட்டுச் செல்லும் நிறுவனமாகத் திருச்சபையும் கருதப்பட்டன. பண்டைய இந்திய அரசியல் சிந்தனையிலும் இதே கருத்தைக் காணலாம். ஆன்மீக நிலையிலிருந்த பொற்காலத்திலிருந்து தவறி வீழ்ந்து அச்சமே நிலவும் சூழ்நிலையில் வாடும் மக்களைக் காக்க அரசன் தோன்றினான். இதுவும் கடவுள் செயல் என்பது அங்குக் கூறப்படுகிறது. கிரேக்கச் சிந்தனையில் ஆன்மீகப் பொருள் புதைந்த சிறப்பு என்னும் சொல், பண்டைய இந்திய அரசியல் சிந்தனையில் ‘தருமம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. ஆட்சியின் நோக்கமும் பயனும் தருமமே. இடைக் காலத்திற்குப் பின் மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பாவில் ஆன்மீகம் என்பது, அரசியலிலிருந்து பிரிந்தது. இதற்கு முதல் முயற்சி செய்தவர் மாக்கியவல்லி, சமயம், ஒழுக்க நெறிகள் ஆகியவை அரசியலுக்குத் துணையானவை. இவை அரசியல் நோக்கத்திற்காகவே பயன்படக் கூடியவை என்னும் இவர்தம் வாதம் பெரும் அரசியல் ஆராய்ச்சியைத் தோற்றுவித்தது. இயற்கையானது, ஆன்மீகச் சிறப்பை நல்குவது எனும் கருத்துக்கள் மறைந்து, அரசு என்பது, ஒப்பந்தத்தின் வழியாக உருவானது என்று ஆப்சு (Hobbes), இலாக்கு (Locke), உரூசோ (Rousseau) போன்ற அறிஞர்கள் கருதினார்கள். அரசு மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவல்ல, பெருக்கவல்ல இயந்திரம் என்று பெந்தாம் (Bentham) போன்றவர்கள் கருதினார்கள். இவர்கள் கருத்தில் அரசியலில் ஆன்மீகத்திற்கு மிகுதியான இடமில்லை. எகல் (Hegel), கான்ட்டு (Kant) ஆகிய செருமானிய அரசியல் அறிஞர்களே, அரசியலில் மீண்டும் ஆன்மீகத்தை ஒருங்கிணைத்தனர். உலக ஆன்மா எனும் கருத்தை வலியுறுத்தும் எல் (Ell) என்பவர் அரசு என்பது, பூவுலகில் இறைவனின் தோற்றம் என்று குறிப்பிடுகின்றார். ஆன்மீகத்தையும் அரசையும் ஒன்றாக இணைத்த புரட்சிக்குப் பின், அரசியலில் பரம் சார்ந்த கருத்துக்கள் இடம் பெறுவது குறைந்து, இகவாழ்வு நலனும் நாட்டமும் மிகுந்தன. காரல் மார்க்சின் (Karl Marx) கருத்து, இத்தகைய போக்கிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கும் காரல் மார்க்சின் கருத்துகள், ஆன்மீகச் சிந்தனையை அரசியலிலிருந்து அடியோடு விளக்கியது இயற்கையே; ஏனெனில் அரசு என்பது, வருக்கப் போராட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டு, வருக்கப் போராட்டத்தை நிலைநிறுத்தி நீடிக்கச் செய்வது என்பது இவர்தம் கூற்று.
அரசியலில் மீண்டும் ஆன்மீகத்திற்கு இடமளித்து, இரண்டும் ஒருங்கிணையச் செய்ய முற்பட்ட அறிஞர்களுள், இருபதாம் நூற்றாண்டில் காந்தி அடிகள் தலையாய இடம் பெறுகிறார். சமயம் எனும் போர்வையிலிருந்து அரசியல், ஆன்மீகம் இரண்டையும் பிரித்தெடுத்து, நன்னெறியின் அடிப்படையில் இரண்டினையும் காந்தியடிகள் ஒருங்கிணைத்தார். விடுதலை, உரிமைகள், கடமைகள், சமுதாயம், தன்னைத் தானே ஆட்சி செய்து கொள்வது போன்ற பலவும், அரசியலில் ஆன்மீகம் இணைந்த கருத்துகளாக, அவர் எழுத்திலும் சொல்லிலும் வாழ்விலும் காணப்படுகின்றன. கடவுள், உண்மை, அன்பு ஆகியவற்றை ஒன்றாகக் காணும் அவர் வன்முறை தவிர்த்த அறச் சமுதாயத்தை ஆன்மீக அடிப்படையில் அமைக்க முற்பட்டார். அவரது குறிக்கோட் சமுதாயம், அறச்சமுதாயமாகவும் ஆன்மீகச் சமுதாயமாகவும் விளங்கியது. ஆனால் அதன் இறுதி, அரசு வடிவம் கொண்டதன்று. இன்று காணும் அதிகார அரசு என்பது, ஆன்மீகச் சமுதாயத்தில் தனக்கு இடமில்லாமல் மனறந்து ஒழிந்துவிடும் என்பது காந்தியடிகள் நம்பிக்கை. காந்தியடிகளின் பொருளாதாரக் கொள்கைகளும் கூட இத்தகைய ஆன்மீக அடிப்படையிலேயே அமைந்துள்ளன. பொதுவாக இன்று அமைந்துள்ள சமயம் சார்ந்த அரசுகளுக்கும் சமயச் சார்பற்ற அரசுகளுக்கும் எச்சரிக்கையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ள காந்தியம், அரசியலில் ஆன்மீகம் இடம் பெற வேண்டியுள்ளதை வலியுறுத்துகிறது எனலாம்.சி.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 716)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/288s89bu/
தமிழ்“அரசியலில் ஆன்மீகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/288s89bu/APA
Oliyon Research. (2026). அரசியலில் ஆன்மீகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/288s89bu/MLA
"அரசியலில் ஆன்மீகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/288s89bu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment