இருதலைக் கொள்ளி வாதம்
irutalaik koḷḷi vātam
வழக்காடுவதில் இருதலைக் கொள்ளி வாதம் (Dilemma) என்பது ஒருமுறை, காண்கிற வழிகள் இரண்டுமே கேடு விளைவிப்பின், ‘இருதலைக் கொள்ளியின் இடைப்பட்டது போல’ என்று பொதுவாகக் கூறுவர்.
வழக்காடுவதில் இருதலைக் கொள்ளி வாதம் (Dilemma) என்பது ஒருமுறை, காண்கிற வழிகள் இரண்டுமே கேடு விளைவிப்பின், ‘இருதலைக் கொள்ளியின் இடைப்பட்டது போல’ என்று பொதுவாகக் கூறுவர். அவை நூல்களில் துணிபொருளுரையின் (Major Premise) எந்த வழியிலும் கேடு விளைக்கும் கருத்துகளிருப்பின், அத்துணிபொருளுரை இருதலைக் கொள்ளி வாதம் எனப்படும். இவ்வாதம் சொற்போரில் வெற்றி குறித்து நிகழ்வதாகும்.
இது தனியானது அல்லது சிக்கலில்லாதது (Simple) என்றும், பலபகுதிகளடங்கியது அல்லது சிக்கலானது (Complex) என்றும் இரு வகைப்படும்.
தனியான துணிபொருளுரைக்கண் வரும் காரணங்கள் இரண்டுமோ அல்லது காரியங்கள் இரண்டுமோ ஒன்றாயிருக்கும். பல பகுதிகள் அடங்கியதில் காரணங்களும் காரியங்களும் வெவ்வேறாக இருக்கும். தனியான தன்மையின் வாயிலாகத் துணியப்படும் சித்தாந்தம் நிரபேட்சை எனப்படும். பல பகுதிகளின் வாயிலாக அறியப்படும் சித்தாந்தம் விகற்பம் எனப்படும்.
துணிபொருளுரையால் கூறப்பட்ட பக்கப் பொருளுரையும் (Minor Premise) சித்தாந்தமும் உண்மை எனத் துணியுமாயின் அது ஆக்கமுறை (Constructive) எனப்படும். பக்கப் பொருள் காரியங்களை மறுக்க, சித்தாந்தம் காரணங்களை மறுக்குமாயின் அது அழிவுமுறை (Destructive) எனப்படும்.
சிக்கல் இல்லாத இருதலைக் கொள்ளி நிலையும், சிக்கலுள்ள இருதலைக் கொள்ளி நிலையும் ஆக்க முறை, அழிவு முறை என்னும் இரண்டோடும் உறழ்ந்தால், இருதலைக் கொள்ளிவாதம் நான்கு வகையாக அமையும்.
சிக்கல் இல்லாத ஆக்க முறை
ஒரு மனிதன் தன் தீர்ப்பின்படி நடந்தாலும் பிறர் கருத்துப்படி நடந்தாலும் குற்றம் சுமத்தப்படுவான். எப்படி நடந்தாலும் அவன் குற்றம் சுமத்தப்படுவான்.
சிக்கல் இல்லாத அழிவு முறை
நான் என்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின் என்னுடைய மாணவர்களை உடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆசிரியன் ஒருவன் தன்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின், புத்தகம் எழுத வேண்டும். அவன் மாணவர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கவும் வேண்டும். அவ்வாறாயின் புத்தகம் எழுதமுடியாது. எனவே அவன்தன் திட்டத்தைச் செயற்படுத்த முடியாது.
சிக்கலில் ஆக்க முறை
புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருந்தால் மேம்பட்டனவாக இருக்கும். திருக்குறளுடன் பொருத்தமின்றி இருந்தால் கேடு விளைவிப்பனவாக இருக்கும். புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருக்கும் அல்லது பொருத்தமின்றி இருக்கும். எனவே அவை மேம்பட்டனவாக இருக்கும் அல்லது கேடு விளைவிப்பனவாக இருக்கும்.
சிக்கலில் அழிவு முறை
ஒருவன் தலைவன் கட்டளைக்குப் பணிவான் என்றால் கடமையைச் செய்வான். அவன் அறிவாளியாக இருந்தால் அவனுக்குப் புரியும். ஆனால், அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிய மாட்டான்; அவனுக்கு ஒன்றும் புரியாது. எனவே, அவன் கடமையைச் செய்யமாட்டான். மேலும் அவன் அறிவாளியும் அல்லன்.
இருதலைக் கொள்ளி வாதம் தவறு எனல்
இவ்வாதங்களைக் காளையோடு ஒப்பிட்டு, அதன்கண் தோன்றும் இருதலைக் கொள்ளி வாதத்தை அதன் கொம்புகளாகக் கூறுவர். காளையை அடக்க நினைப்பவர் இரு கொம்புகளைப் பிடித்து அடக்குவதுபோல், இவ்விரு கருத்துகளையும் மறுத்துக் கூறுவதைக் ‘கொம்பு பிடித்து அடக்கல்’ என்று கூறுவர். எடுத்துக்காட்டாக மணமாகாதவன் தன்னைப் பேணுவாரின்றி வருந்துதலும், மணமானவன் மனைவியைக் காப்பாற்றத் துன்புறுதலும் உலக நடைமுறைக்குப் பொருந்துமாறில்லை. இங்குக் காரணங்களை மேற்கொண்டு காரியம் தொடராமை கூறி வாதியை மறுக்கிறோம்.
இருதலைக்கொள்ளி வாதத்திற்குரிய விகற்பக் காரணங்கள் சில குறைந்து இருக்க, அவை வாயிலாக வாதியை வெல்வது ‘கொம்புகளிடைத் தப்பித்துக் கொள்ளுதல்’ என வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, அதிகமாகப் படித்தால் உறக்கம் கெட்டு உடல் நலம் குன்றும். படிக்காமலிருந்தால் தேர்ச்சியுண்டாகாது ஒன்று. முயன்று படித்தல்: மற்றொன்று, படிப்பைக் கவிடல், இவை இரண்டும் தீர்ந்த காரணங்கள் எனப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காரணம் அளவாகப் படித்தல். அளவான படிப்பால் உடல் நலமும் குன்றாது. தேர்ச்சியும் உண்டாகும்.
இந்த வாத முடிவிற்கு முரண்பட்ட முடிவைக் கொண்ட வேறு வாதத்தைக் காட்டுவது நிராகரணம் (Rebuttal) என்று கூறப்படும்.
இரு திறத்தினரும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற் போன்று, தத்தம் ஆதாரத்தை மாற்றிக் கொள்வர். எடுத்துக்காட்டாக, அரசியலில் புகுந்தவர்கள் அறவழியில் நடந்தால் அவர்களை மக்கள் வெறுப்பர்; அறவழி தவறினால் அவர்களைத் தெய்வம் வெறுக்கும்; எனவே வெறுப்புண்டாவது திண்ணம். அதனால், அரசியலில் புகவேண்டா என்பது ஒரு கருத்து. அரசியலில் புகுந்தவர் நீதியுடன் நடந்தால் தெய்வம் வெறுக்காது; தவறினால் மக்கள் வெறுக்க மாட்டார்கள்; அதனால் அரசியலில் புகலாம் என்பது மற்றொரு கருத்து. இங்கு இரு திறத்தாரும் வெறுப்பு என்ற ஒரே ஆதாரக் கொள்கையைத் தத்தம் கட்சியை வெற்றியடையச் செய்யத் திறமையாகக் கடவுள் வெறுப்பு, மக்கள் வெறுப்பு என்ற இரண்டையும் மாற்றுகின்றனர். ஆனால், சரியான முடிவு வர ஒரு வாதத்தில் ஒரு திட்டத்தைக் கையாளுதல் இன்றியமையாததாகும்.
மேற்கூறிய குற்றங்களை நீக்கித் தூய துணிபொருளுரைகளால் உய்த்துணர் முறைகளுக்குட்பட்டு வாதித்தால் உண்மையான முடிவு பெறலாம்.
இருதலைக் கொள்ளி வாதத்தை முற்றிலும் தவறு எனக் கருதலாகாது. தவறுகள் இதனைக் கையாளும் திறத்தால்தான் உண்டாகின்றன. எனவே, இதுவும் ஏனை வாத வகைகளை நோக்கக் குறைபாடுடையது அன்று.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 198)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/27ynjxnw/
தமிழ்“இருதலைக் கொள்ளி வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/27ynjxnw/APA
Oliyon Research. (2026). இருதலைக் கொள்ளி வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/27ynjxnw/MLA
"இருதலைக் கொள்ளி வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/27ynjxnw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment