சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியினால் வெளியிடப் பெற்றது. இச்சாசனம் அய்கொளேயில் உள்ள மேகுடி என்னும் சமணக் கோயிலின் சுவரில் இருக்கிறது; செய்யுள் வடிவில் வடமொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனத்தில் 17 வரிகளில் 37 செய்யுள்கள் உள்ளன. இக்கல்வெட்டை முதன்முதலில் பிளீட்டு (Fleet) என்பவர் இண்டியன் ஆண்டிகுவரி (Indian Antiquary) எனும் நூலில் பதிப்பித்தார். பின்னர் டாக்டர் கில்கார்ன் என்பவர் மறுபதிப்பை ‘எபிகிராபிகா இண்டிகா’ ஆறாம் தொகுதியில் வெளியிட்டார். இச்சாசனம் மேலைச் சாளுக்கியர்களின் வரலாற்றைத் தெளிவாக அறிதற்குரிய சிறந்த சான்றாகும். இரண்டாம் புலிகேசிக்கு முன்னர் ஆண்ட சாளுக்கிய அரசர்களின் மரபுவழிப் பட்டியலை இது தருகிறது. சாளுக்கிய அரசர்கள் செயசிம்மன், இரணரங்கா, முதலாம் புலிகேசி, கீர்த்திவர்மன், மங்கலேசன், இரண்டாம் புலிகேசி ஆகியோர் அடுத்தடுத்துப் பட்டமேற்று அரசாண்டதையும் அவர்களுடைய வெற்றிகளையும் இச்சாசனம் தெளிவுபடக் கூறுகிறது. இக்கல்வெட்டு வாசகத்தை இயற்றியவர் இரவி கீர்த்தி ஆவார். இச்சானத்தின் 37–ஆம் செய்யுளில் இவர்தாம் காளிதாசரையும் பாரவியையும் நன்கு அறிந்தவர் என்று பகர்கின்றார். இக்கல்வெட்டின் நடை காளிதாசரின் இரகுவம்சம், குமாரசம்பவம் போன்ற நூல்களிலுள்ள செய்யுள் நடையினை ஒத்துள்ளது. அலகாபாத்துக் கற்றூண் சாசனத்திற்கு இணையானதாக இக்கல்வெட்டுக் கருதப்படுகிறது. இந்திய ய வரலாற்றில், காலக் கணிப்பிற்கு இச்சாசனம் முக்கியமானது. முதன் முதலில் இக்கல்வெட்டில்தான் சக ஆண்டும், கலி ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. சக ஆண்டு 556 என்றும் கலி ஆண்டு 3735 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலம் இக்கல்வெட்டு, கி.பி. 634 அல்லது 635–ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று அறியலாம். மேலும் கலி ஆண்டு 3735 என்ற குறிப்பிலிருந்து மாபாரதப்போர் நடைபெற்ற காலத்தைக் கி.மு. 3101 என அறுதி செய்யலாம்.