உட்சுடாக்கு ஆணை என்பது இங்கிலாந்தில் இரண்டாம் என்றி (Henry II) மன்னன் காடுகள் பற்றியும் அங்குக் கிடைக்கும் மான் இறைச்சி பற்றியும் உட்சுடாக்கு (Woodstock) என்றுமிடத்தில் பேராயர்கள் (Archbishops), ஆயர்கள் (Bishops), ஆங்கிலப் பிரபுக்கள் (Lords) ஆகியோர் ஆலோசனையையும் ஒப்புதலையும் பெற்று விடுத்த ஆணையாகும். சட்டம் மக்களுக்கு உரியதாக இருப்பதால், மக்களைக் கலந்து கொண்டு மன்னன் சட்டத்தை உருவாக்குதல் வேண்டும் என்றும் கொள்கை உருவாயிற்று. பிராங்கிசுப் பேரரசை (Frankish Empire) கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் ஆண்ட மெரோவிஞ்சியக் குல மன்னர்கள் (Kings of Merovingian Dynasty) இக்கொள்கையினைப் பின்பற்றினர். அவர்கள் ஆணைகளை விடுத்தபோது நாட்டிலுள்ள முதன்மை வாய்ந்த குடிமக்கள், ஆயர்கள், பிரபுக்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே அவற்றை விடுப்பதாக அறிவித்தனர். இக்கொள்கை கி.பி. 9–ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இதனால், அனைத்து மக்கள் சார்பாகவும் வெளியிடப்படுவதே சட்டம்; அது செல்லுபடியாவதற்கு மக்களின் ஒப்புதல் மிகவும் இன்றியமையாதது என்னும் கருத்துத் தோன்றியது. இங்கு ஒப்புதல் என்பது மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தல் என்று பொருள்படாது; அவர்கள் மன்னர் விடுக்கும் ஆணைகளை ஏற்றுக் கொள்கின்றனர் என்றே பொருள்படும். பிராங்கிசுப் பேரரசை ஆண்ட கரோலிஞ்சியக் குல (Carolingian Dynasty) மன்னன் சார்லமே (Charlemagne) சட்டமோ ஆணையோ விடுத்த போது தம் நாட்டு ஆயர்கள், மடாலயத் தலைவர்கள் (Abbots), பிரபுக்கள், குடிமக்கள் ஆகியோர் ஆலோசனையின்படி அதை விடுப்பதாகவும் அதனால் குடிமக்கள் அனைவரும் அதற்கு மதிப்புக் கொடுத்தல் வேண்டும் என்றும் கூறினான். குடிமக்கள் அனைவரும் மன்னனுடைய ஆணைக்குக் கட்டுப்படுதல் வேண்டும் என்னும் நோக்கத்திலேயே, இரண்டாம் என்றி மன்னனும் உட்சுடாக்கு ஆணையை விடுத்தபோது குடிமக்கள், பிரபுக்கள், ஆயர்கள் ஆகிய அனைவரின் ஒப்புதலையும் பெற்று அதனை விடுப்பதாக அறிவித்தான். இதனால், இவ்வாணை அரசியல் சிறப்புப் பெற்றுள்ளது. துணை நூல் Sabine, G.H., A History of Political Theory, Oxford & I B H Publishing Co., Calcutta, 1961.