கண்டுவ மகரிசியின் மகன். தம் மாமன் கூறியபடி குபேரனைக் காணச் செல்ல, வழியில் ஒரு பெண் இவரை மயக்கினாள். மயங்காது, ஒழுக்கம் காத்து ஊர் திரும்பி, வதான்ய முனிவர் மகளை மணந்தார். அம்முனிவரிடம் மறை முதலியவற்றைக் கற்றுணர்ந்தார். வேதப் புலமையில் தம் தந்தையாரை வென்றவர். திருமால், நான்முகன், உரோமரிசி முதலியோர் வந்து இவரிடம் தத்தம் வாழ்நாள் அளவு கேட்டுச் சென்றனர். இவர் இயமுனைக் கரையில் தவம் புரித்தார். அங்கு நீராடவந்த மாந்தாதாவின் பெண்கள் இவரது அழகில் மயங்கி இவரை மணந்தனர். பின், இவரது கோணலைக் கண்டு மறுத்தனர். அதனால், சினங்கொண்ட இவர் அப்பெண்களைக் கனிகளாகுமாறு சபித்தார். அநேகபத்தர் என்னும் இருடி, பல பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்தார். பாடங் கேட்குங்கால் உறங்கிய ஒரு மாணவனைச் சினந்தார். அப்பொழுது மனைவியின் கருப்பத்திலிருந்த குழந்தை, இரவு பகலின்றி ஓதினால் உறக்கம் வராதா? என்று வினவிற்று. அதனைக் கேட்டுச் சினந்த ஆசிரியர், ‘நீ பிறந்து பூமியை அடையும்போது எட்டுக் கோணலாக அமைவாயாக’ என்று சாபமிட்டார். அக்குழந்தையே பிற்காலத்தில் அட்டகோணமகரிசி என வழங்கப்பெற்றது. புத்தரொருவரொடு வாதிட்டபோது உதவியமையால் மகிழ்ச்சியுற்ற தந்தை, இவரைச் சாமங்க ஆற்றில் முழுகச் செய்து இவர்தம் கோணலை அகற்றினார். ஒரு பிரமன் இறந்தால் உடம்பு முழுதும் முடியுடைய உரோமரிசியின் ஒரு முடி உதிரும் என்றும், மூன்றரைக் கோடி பிரமர் இறந்தால் இவரது ஆயுள் முடியும் என்றும், அப்போது அட்டகோண மகரிசிக்கு ஒரு கோணல் நிமிரும் என்றும் கூறப்பட்டுள்ளது.த.கோ.