இவ்வரிசையில் காணப் படும் இனங்கள் நாடா போன்ற உடலமைப்புடைய டீனோபோர்கள் ஆகும். செஸ்டீடா (cestida) இனங்கள், உணர் நீட்சிகளைக் கொண்டுள்ளமையால், சுரணைக் கொம்புகள் (tentaculates) என்று பெயர் பெறுகின்றன. உடலின் மேற்பரப்பில், இரண்டு முதன்மையான சுரணைக் கொம்புகள் உறைகளால் மூடப் பட்டுள்ளன. அவற்றிலுள்ள வரிப் பள்ளங்களில், எண்ணற்ற உணர் நீட்சிகள் காணப் படுகின்றன. இவ்வரிசை முழுதும் கடல் வாழ் டீனோபோர் இனங்களைக் கொண்டதாகும். இவை டீனோபோரா (ctenophora) தொகுதியைச் சார்ந்தவை. பெரும்பாலும் நீரின் மேற்பரப்பில் வாழ்பவை. இருப்பினும், ஒரு சில இனங்கள் ஊர்ந்து செல்வன. ஒளி ஊடுருவும் தன்மை பெற்ற பெரும்பாலான இனங்கள் காணப் படுகின்றன. இவற்றில் ஒரு சில சிறந்த நிறங்களைச் கொண்டுள்ளன. இவற்றின் இளவுயிரிகள் இரு பக்க ஆரச் சமச் சீர் அமைப்பை (biradial symmetrical) வளர்ச்சி நிலைகளில் வெளிப் படுத்துகின்றன. பொதுத் தன்மைகள். இவ்வரிசையில் உள்ள இனங்களை, இவற்றிற்கு முன்னுள்ள குழியுடலிகளான (coelenterates) ஹைட்ரோசோவா, ஆந்தோ சோவா போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, பெரும்பாலும் அனைத்து இனங்களும் நீரின் மேற்பரப்பில் காணப் படுவனவேயாகும். இருப்பினும், டீனோபோராக்களில் ஓர் இனம் கூடக் காலனி வாழ்க்கை முறையைக் கொள்ளவில்லை. இவற்றின் உடல் உறுதிக்காக உள்ளீட்டுச் சட்டங்கள் அமையவில்லை. உணர்க் கொம்புகளின் அமைப்பும், கால்வாய் மண்டலத்தின் அமைப்பும் மிகுந்த வேறுபாடுகளுடன் வெவ்வேறு இனங்களில் காணப் படுகின்றன. எ-டு: செஸ்டஸ் வெனிரிஸ். செஸ்டஸ் வெனிரிஸ். தட்டையாகவும், நீளமாகவும் அமைந்துள்ள இவை சில இனங்களில் 1.5 மீ. வரை நீண்டுள்ளன. இவற்றின் உடல், பக்கவாட்டில் இரு புறமும் நன்கு ஒடுக்கப் பட்டுள்ளது. எனவே, இவ்வினங்களின் அமைப்பு ஓரு நாடா போன்று காணப் படும். உடலில் காணப்படும் நீந்தும் தகடுகளின் அமைப்பு அலை அலையாக இவை வளைவதற்கு உதவுகிறது. உடல் அமைப்பில் நீந்தும் தகடுகள் நான்கும், உடலில் மேற்புற விளிம்பை ஒட்டிக் காணப் படுகின்றன. இவற்றின் முதன்மையான உணர் நீட்சிகளின் அடிப் பரப்பு பெரிதாகவுள்ளது. இவற்றை உறைகள் மூடியுள்ளன. மிகுதியான சிறு உணர் நீட்சிகள் வரிப் பள்ளங்களிலிருந்து தோன்றுகின்றன. இவை வாய்ப் பகுதியின் முழு நீளத்திற்கும் பரவியுள்ளன. இவற்றின் இளவுயிரிகள் சைப்பிடுகள் போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. பொருளாதாரச் சிறப்பு. டீனோபோர்கள் முக்கியமான உயிரிகளாகும். உலகின் அனைத்துக் கடற் பரப்பிலும் இவை காணப்படுகின்றன. ஆங்காங்கே பெருமளவிற்குக் கூட்டம் கூட்டமாகக் காணப் படும். சில பேரினங்களின் செயல், கடல் நீரின் உப்புத் தன்மையை மாற்றக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. பெருமளவிற்கு மிதவை உயிரிகளை (planktons) உணவாகக் கொள்வதன் மூலம், மிதவை உயிரிகளின் சம நிலையிலும், மீன் வளத் துறையிலும் இவை இன்றியமையாதவையாகின்றன. —ந. இராமலிங்கம் —கி. வாசுதேவன்