அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது அடங்கல் முறை எனப்படும் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து சில பதிகங்களைத் தேர்ந்து தொகுத்த ஒரு தொகுப்பு நூலாகும். இத்திரட்டு தோன்றிய காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டாகும். மூவர் தேவாரம் முழுதும் நாள்தோறும் பாராயணம் செய்யும் அருமை நினைந்து, சிவாலய முனிவர் என்பார், அடங்கல் முறையிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் இந்நூலைத் தொகுத்தார். இத்திரட்டிலுள்ள தேவாரப் பதிகங்கள் குருவடிவம், திருநீறு, பஞ்சாக்கரம், கோயில்திறம், சிவரூபம், திருவடி, அருச்சனை, அடிமை ஆகியவற்றின் உண்மைகளை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. இவற்றை நாள்தோறும். பாராயணஞ் செய்வார்க்கு, அடங்கல்முறை முழுதும் பாராயணம் செய்வோர் எய்தும் பயன் கிட்டும். இத்திரட்டு உணர்த்தும் குருவருள், வெண்ணீறு, திருவைந்தெழுத்து, கோயில், அரன் உருவு, திருவடி, அருச்சனை, தொண்டு என்னும் எட்டு நிலைகளும் சீவன்முத்தர் நிலை என்று சொல்லப்படும். இத்திரட்டின் சிறப்பினை உணர்ந்த ஆறுமுக நாவலர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், இதனோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில செய்யுட்களையும் சேர்த்து ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து திருமுறைகளிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்து ‘பஞ்ச புராணம்’ என்னும் பெயரில் சிவபெருமான் திருக்கோயிலின் ஓதுவாமூர்த்திகளால் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு உருவாகியுள்ளது. “தோடு கூற்றுப் பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா ஒன்று அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள 85 பதிகங்களையும் அவை உணர்த்தும் உண்மைகளையும் தொகுத்துக் கூறுகிறது.