{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zv7t9erz/", "data": {"id": "zv7t9erz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zv7t9erz/", "kind": "article", "headword": "இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை", "romanization": "ileyiṭṭar aṉaittulakac ceyaṟ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.542050+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை என்பது உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் விளங்கும் பண்பாட்டுச் சூழமைவுகளுக்குப் பொருந்துமாறு அமைக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனையாகும்.", "body_ta": "இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை என்பது உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் விளங்கும் பண்பாட்டுச் சூழமைவுகளுக்குப் பொருந்துமாறு அமைக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனையாகும். இச்சோதனை பல ஆண்டுகளாகப் பல இனங்களைச் சேர்ந்த மக்களிடம் கொடுக்கப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனையில் எந்தக் குறிப்பும் கொடுக்கப்படுவதில்லை. சோதனை அளிக்கப்பட்டவுடன் அதில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிந்துணர்தலும் சோதனையின் ஒரு பகுதியாகும். இச்சோதனைகளில் பல அட்டைகளும் அவை பொருந்தக் கூடிய சட்டமும் கொடுக்கப்படுகின்றன. ஆட்படுநர் அதைப்பார்த்தவுடன் சட்டத்தில் அட்டைகள் பொருந்தக் கூடிய இடங்களில் அவற்றைப் பொருத்தவேண்டும். இலெயிட்டர் அனைத்துலகச் செயற்சோதனையில் (Laiter International Performance Scale) பல பகுதிகள் கிளைச் சோதனைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. பொருத்தமான நிறங்களை இணைத்தல், பல தரப்பட்ட சாம்பல் நிற அட்டைகளை இணைத்தல், உருவங்களைப் பொருத்துதல், படங்களை இணைத்தல், சதுரக் கட்டத்திலுள்ள உருவத்தைப் பார்த்து வரைதல், இடம் நிறைவு செய்தல், எண் மதிப்பீடு, ஒற்றுமை காணல், வரிசை நிறைவு செய்தல், காற் சுவடு அடையாளம் காட்டுதல், வரிசை நினைவிலிருத்தல், சூழமைவுக்கேற்ப விலங்குகளைப் பாகுபாடு செய்தல் போன்ற சோதனைகளை இலெயிட்டர் சோதனையின் சில பகுதிகளாகக் குறிப்பிடலாம்."}}