{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zubx68ba/", "data": {"id": "zubx68ba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zubx68ba/", "kind": "article", "headword": "அசரீரி", "romanization": "acarīri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.885262+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசரீரி என்பது உடலற்றது என்று பொருள்படும்.", "body_ta": "அசரீரி என்பது உடலற்றது என்று பொருள்படும். அசரீரி பேசுவதாகப் பல இடங்களில் வழங்கப்படுகிறது. இது ஆகாயவாணி (வானொலி) எனவும், அறக்கடவுள் எனவும், தரும தேவதை எனவும் வழங்கப்படும். திருக்குறள் அரங்கேறியபோது அதற்குச் சங்கப் புலவர்கள் பலர் சாற்றுக்கவிகள் பாடினர் என்றும் அவற்றின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்றும் கூறப்படுகிறது. அரங்கேற்றத்தின் போது எல்லோருக்கும் முற்பட்டு அறக்கடவுள் ‘திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு, உருத்தகு நற்பலகை யொக்க, இருக்க உருத்திர சன்மர் எனவுரைத்து வானில், ஒருக்கவோ என்றதோர் சொல்’ என்னும் பாடலைப் பாடியதாகவும் வழங்குகிறது.\n\nஇப்பாடல் திருவள்ளுவமாலையின் முதற் பாடலாக உள்ளது. யாண்டும் நிறைந்துள்ள அறக்கடவுள் தக்காரின் தகுதியறிந்து அவர்கட்கு நிகழப் போகும் நன்மை தீமைகளைப் பிறர் வாக்கிற் பொருத்தி நின்று உரைக்கிறது என்பது சான்றோர் துணிபு. உருவமுடைய பிறர் வாக்கிலிருந்து அவ்வுரை வெளிவரினும், ஆண்டு அறக்கடவுள் அமைந்து நிற்றல் கருதி அது அசரீரி என வழங்கலாயிற்று. சில இடங்களில் பிறர் வாயிலிருந்து சொற்கள் புறப்படாமல் விண்ணிலிருந்து உண்டாதலும் உண்டு. அதனால் தான் ஆகாயவாணி எனவும் பெயர் வழங்குகிறது. த.கோ."}}