{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zq9pa9np/", "data": {"id": "zq9pa9np", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zq9pa9np/", "kind": "article", "headword": "உயிர் ஒலிகள்", "romanization": "uyir olikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.217048+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நுரையீரலிலிருந்து வெளி வரும் காற்று மிடற்றின் முயற்சியால் வாயின் வழியாக எவ்விதத் தடையும் இன்றி வெளிப்படும் நிலையில் உயிரொலிகள் (Vowels) பிறக்கின்றன.", "body_ta": "நுரையீரலிலிருந்து வெளி வரும் காற்று மிடற்றின் முயற்சியால் வாயின் வழியாக எவ்விதத் தடையும் இன்றி வெளிப்படும் நிலையில் உயிரொலிகள் (Vowels) பிறக்கின்றன. இவை பிறக்கும்போது பின்னண்ணம் மேலெழுந்து நின்று மூக்குவழியைத் தடுத்து நிற்கும். உயிரொலிகள் பெரும்பாலும் குரல்வளை நாண்களில் (Vocal cards) அதிர்வினை உருவாக்கிப் பிறப்பதால் அலை ஒலிப்புடை (Voiced) ஒலியன்களே.\n\nஅ, இ, உ என்னும் மூன்று உயிரொலிகளை அடிப்படை ஒலிகளாகக் கொண்டு இம்மூன்றின் பிறப்பிடங்களை ஒரு முக்கோணத்தின் மூலைகளுக்கு ஒப்பிட்டு, அதனை உயிர்முக்கோணமாக (Vowel triangle) அறிஞர் கருதுவர். தானியேல் சோன்சு (Daniel Jones) உயிரொலிகளின் இடங்களை எட்டு அடிப்படை உயிரொலிகளை (Cardinal vowels) ஆதாரமாகக் கொண்டு விளக்கினார். மெய்யொலிகளைவிட உயிரொலிகளே இசைமை (Sonority) உடையனவாக இருப்பதால் அசையில் (Syllable) எப்போதும் உயிரொலிகளே அசை முடியில் (Peak) இடம்பெறும். எனவேதான் உயிரொலிகளின் அடிப்படையில் அசைகள் கணக்கிடப்படுகின்றன.\n\nஉயிரொலிகளை அவை பிறக்கும் நிலையில் நாவின் நீட்சி, நாவின் உயரம், இதழின் நிலையிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்தலுண்டு.\n\nநுனிநாவின் முன்னண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் முன்னுயிர்கள் (Front vowels) எனவும், கடைநாவின் மெல்லண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் பின்னுயிர்கள் (Back vowels) எனவும். இடைநாவின் வல்லண்ணத்தினை நோக்கிய நீட்சியின் காரணமாகப் பிறக்கும் உயிர்கள் நடுவுயிர்கள் (Centre vowels) எனவும் நாவின் நீட்சியினை அடிப்படையாகக் கொண்டு உயிரொலிகள் வகைப்படுத்தப் பெறும்.\n\nநாவின் உயரத்தினை அடிப்படையாகக் கொண்டு உயிரொலிகள் உயர் உயிர்கள் (High vowels) எனவும், இடை உயிர்கள் (Mid vowels) எனவும், கீழ் உயிர்கள் (Low vowels) எனவும் பகுக்கப் பெறும். இதழின் நிலையிட அடிப்படையில் அனைத்து உயிரொலிகளையும் இதழ்குவி உயிர்கள் (Rounded vowels) எனவும், இதழ்குவியா உயிர்கள் (Unrounded vowels) எனவும் பாகுபாடு செய்யப் பெறும். உயிர்கள் பிறக்கும்போது இதழ்குவியப் பெறுமானால் அவை இதழ்குவி உயிர்கள் எனவும், இதழ்குவியப் பெறாதிருக்குமாயின் அவை இதழ்குவியா உயிர்கள் எனவும் கட்டப்பெறும்.\n\nமேலும் உயிரொலிகளை விறைப்புயிர்கள் (Tense vowels) எனவும், நெகிழ்வுயிர்கள் (Lax vowels) எனவும் பகுக்கலாம். இதழ், நா முதலிய ஒலிப்பு உறுப்புகள் விறைப்பாக இருக்கும் நிலையில் பிறக்கும் உயிர்கள் விறைப்புயிர்கள் எனவும், ஒலிப்பு உறுப்புக்கள் நெகிழ்ச்சி பெற்றுப் பிறக்கும் உயிர்கள் நெகிழ்வு உயிர்கள் எனவும் கருதப்பெறும். தமிழில் குறில் உயிர்கள் ஒலித்தற்கு அருமையாக இருப்பதால் அவை விறைப்புயிர்கள் எனவும் நெடில் உயிர்கள் எளிமையாக இருப்பதால் அவை நெகிழ்வுயிர்கள் எனவும் கருதப்பெறுகின்றன. குறில் உயிர்கள் ஒரு மாத்திரை அளவினை உடையன எனவும், நெடில் உயிர்கள் இரண்டு மாத்திரை அளவினை உடையன எனவும் மரபிலக்கணங்கள் சுட்டுகின்றன.\n\nஉயிரொலிகள் பிறக்கும்போது பின்னண்ணம் மூக்கின் வழியாகக் காற்றுச் செல்லாதபடி தடுத்து நிற்கும். இப்பின்னண்ணம் சிலபோழ்து தாழ்ந்து நிற்கும் நிலையில் காற்றின் ஒருபகுதி வாய்வழியாகவும் மற்றொரு பகுதி மூக்கின் வழியாகவும் செல்லும். இந்நிலையில் பிறக்கும் உயிரொலிகள் மூக்கினச்சாயல் பெற்ற உயிர்கள் (Nasalised vowels) எனப்படும். இன்னமும் நாக்கு அண்ணத்தினை நோக்கி வளையும் நிலையில் பிறக்கும் உயிர்கள் நாவளை உயிர்கள் (Retroflex vowels) எனப்படும். ஏ.ஆ.\n\nதுணை நூல்கள்\n\nBloch, B. and Trager, G.L., Outline of Linguistic Analysis, Linguistic Socicty of Americs, Baltimore, 1942.\n\nChomsky, N. and Halle, M., The Sound Pattern of English, Harper & Row, 1968."}}