{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/znne4qxh/", "data": {"id": "znne4qxh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/znne4qxh/", "kind": "article", "headword": "இலாசரசு", "romanization": "ilācaracu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.293251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த இந்தியக் கிறித்தவராவார்.", "body_ta": "தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த இந்தியக் கிறித்தவராவார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கிறித்தவச் சமயக் கோட்பாடுகள் அடிப்படையில் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார். இலாசரசின் மொழிப் பணிகளுள் இவர்தம் நன்னூல் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு, மாணவர்க்காக எழுதப்பட்ட ‘தமிழ் இலக்கணம்’ ஆகியலை குறிப்பிடத்தக்கன.\n\nபாயிரம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் முப்பகுதிகளைக் கொண்ட நன்னூலில் பாயிரத்தைப் பவர் (Rev. H. Bower, D.D.) என்பவர் மொழி பெயர்த்தார். எழுத்து, சொல்லதிகாரங்களை இலாசரசு மொழிபெயர்த்தார். இந்நூலின் முன்னுரையில் இலாசரசு தம்மைச், ‘சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பட்டதாரி’ (A Tamil Graduate of the Madras University) என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் முதற் பதிப்பு 1878–இல் சென்னைக் கோபார்ட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1884–இல் வெளிவந்துள்ளதாக அறியப்படுகிறது. பவரின் நன்னூல் பாயிர ஆங்கிலமொழி பெயர்ப்பை 1972–இல் வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் இலாசரசின் எழுத்து, சொல்லதிகாரங்கள் கொண்ட மொழிபெயர்ப்பை 1977-இல் வெளியிட்டது. இந்நன்னூல் மொழிபெயர்ப்புக்கு டாக்டர் போப்பும் டாக்டர் கால்டுவெலும் மதிப்புரைகள் தந்துள்ளனர்.\n\nஇலாசரசின் வழிகாட்டியாகத் திகழும் டாக்டர் துரூ (Rev. W.H. Drew) திருக்குறளில் முதல் 63 அதிகாரங்களை ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். இறுதி 70 அதிகாரங்களை இயாசரசு மொழி பெயர்த்து உதவியுள்ளார். டாக்டர் துரூவின் மொழிபெயர்ப்பு அடங்கிய திருக்குறளின் முதற்பகுதி 1840–ஆம் ஆண்டிலும், இரண்டாம் பகுதி 1852–ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. பின்னர் இவ்விருவரின் திருக்குறள் ஆங்கில உரைநடை மொழிபெயர்ப்பை டாக்டர் போப்பின் மொழிபெயர்ப்போடு சேர்த்துக் கழகம் வெளியிட்டுள்ளது.\n\nஇலாசரசு நன்னூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழி இலக்கணத்தை ஆங்கில விளக்கங்களுடன் எளிய–இனிய நடையில் எழுதியுள்ளார். இந்நூல் பள்ளி, கல்லூரி மாணவர்க்காகவே எழுதப்பட்டது என்ற குறிப்பையும் ஆசிரியர் கூறுகிறார். இந்நூல் 1878–இல் சென்னை அடிசன் அண்டு கம்பெனியரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.\n\nமேற்கண்ட நூல்கள் தவிர, தமிழ்ப் பழமொழிகளின் அகராதித் தொகுப்பும் இவர் பணிகளுள் சிறப்பிடத்தைப் பெறுகிறது. பல திங்கள் ஏடுகளில் இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தம்முடைய நூல்களுக்கு இவர் எழுதியுள்ள முகவுரைகளின் அடியில், ‘L.M. Institution, Madras’ என்னும் முகவரி காணப்படுவது அறியத்தக்கது.\n\n19–20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த இப்பெருமகனார் 1925–ஆம் ஆண்டு காலமானார்.ஆர்.செ."}}