{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z9u5bcq8/", "data": {"id": "z9u5bcq8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z9u5bcq8/", "kind": "article", "headword": "இலாக்கு, சான்", "romanization": "ilākku, cāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.198667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மேலை நாடுகளின் மெய்ப் பொருளியலில் குறிப்பிடத்தக்க அனுபவ வழிக் கொள்கையாளர், இலாகு, சான் (poche, pohn) ஆவார்.", "body_ta": "மேலை நாடுகளின் மெய்ப் பொருளியலில் குறிப்பிடத்தக்க அனுபவ வழிக் கொள்கையாளர், இலாகு, சான் (poche, pohn) ஆவார். இவர் இங்கிலாத்தில் முதலாம் சார்லசு அரசரின் காலத்தில் கி.பி. 1632–ஆம் ஆண்டு ஆகசுட்டு 29–ஆம் நாள் இரிங்குடன் சோமர் செட்சைர் (Wrington, Somer Setshire) என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெரும் நிலக்கிழாரும் இராணுவத்தில் பணியாற்றியவரும் ஆவார்.\n\nஇவர் தமது உயர் தரக் கல்வியை வெசுட்டுமினிசுட்டர் (West Minister) பள்ளியில் பயின்று, பின்பு கி.பி. 1652–ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.\n\nஇவர் மருத்துவம், மெய்ப்பொருளியல், கல்வி, அறிவு ஆராய்ச்சியியல், அரசியல், சமூகவியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவராக விளங்கினார். தமது இளங்கலைப் பட்டப்படிப்பை மருத்துவவியலில் பெற்று மருத்துவராகச் சிலகாலம் பணியாற்றினார். சில மருத்துவ அறிஞர்களின் அறிவுரைகளை மருத்துவப் பணிப்பயிற்சிக்காகக் கேட்டறிந்தார்.\n\nஇரண்டாம் சார்லசு அரசர் காலத்தில் இலாக்கு சான் (Locke, John) ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றதோடு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கி.பி. 1668–ஆம் ஆண்டு இயற்கை அறிவை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n\nஇவர் அறிவியல், மருத்துவ இயல் தொடர்பான நூல்களை வெளியிட்டுள்ளார்; கி.பி. 1689–ஆம் ஆண்டு ஆலந்து (Hollend) நாட்டிலிருந்து இங்கிலாந்திற்குத் திரும்பி வந்து, தமது கடைசிக் காலத்தில் எழுத்துப்பணியில் ஈடுபட்டு, அரசியல், சமயம், அறிவு ஆராய்ச்சியியல், மெய்ப்பொருளியல் ஆகியவை தொடர்பான கருத்துகளை மக்களுக்கும். அசாரங்கத்திற்கும் நல்கி வந்துள்ளார். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கது. ‘மனிதனது அறிவாற்றல் குறித்த கட்டுரை’ (Essay Concerning Human Understanding) ஆகும்.\n\nசமயக் கருத்துகள் (Ideas on Religion)\n\nஇலாக்கு சான் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். கடுந்தூய்மைக் கட்சியாளர் கோட்பாடு என்பது கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவு. கி.பி. 1695–ஆம் ஆண்டு சமய நம்பிக்கையின் கருத்துகள் பல சமயங்களோடு ஒப்பிடப்பட்டு, வேறுபடுகையில் கடுந்தூய்மைக் கட்சியாளர்களின் கருத்துகள் (Puritanism) புதியனவாகக் காணப்பட்டன. கிறித்தவ சமய நூலான விவிலியத்தில் (Bible) கூறிய கருத்துகளுக்கு வேறானது ஏதும் இல்லை என்று மக்களிடத்துப் போதித்து வந்துள்ளனர் சம காலத்திய கிறித்தவ அறிஞர்கள். கிறித்தவச் சமயம் என்பது புரியாத சமயம் அன்று. அது தெளிவானது என்றும், வரையறை செய்யப்பட்ட கட்டுக்கோப்புக்குள் இயங்கும் மனிதர், தம்மால் செயற்படக் கூடிய எல்லைக்குள் மட்டுமே செயற்படுவர்; அதற்கு அப்பாலுள்ள செயல்களை மீறிச் செயற்படுவோர் மனிதர் அல்லர் என்றும் இவர் குறிப்பிட்டார்.\n\nதெய்விக அருள் நிகழ்ச்சியின் அமைப்பு இயேசு கிறித்துவினால் ஏற்படுத்தப்பட்டது. மனிதன் கடவுளால் வரையறை செய்யப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், அறநெறி ஒழுக்கங்களுக்கு உட்பட்டும் நன்முறையில் வாழ வேண்டும் என்று நீதி வாசகங்களையும் பேருரைகளையும் இயேசு கிறித்து வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்கள் பின்பற்ற வேண்டும் என இயேசு கிறித்து குறிப்பிட்டதை இலாக்கு சான் வெளிப்படுத்தினார்.\n\nஇயற்கைச் சட்டம் எல்லாக் கூறுகளிலும் அமைந்துள்ள கடவுளின் சட்டத்துடன் பொருந்தியுள்ளது. மனிதன் கடவுளின் உயர் நிலையை அடையப் பகுத்தறிவின் வாயிலாக முயற்சி செய்துள்ளான்.\n\nஇலாக்கு சான் கி.பி. 1664–ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் (Oxford University) ஒழுக்க நெறிமுறைக் கண்காணிப்பாளராக இருக்கையில், இயற்கையின் விதிமுறைகளைப் பற்றி விரிவுரையாற்றினார். இவ்விரிவுரைகள் 1954–ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டன. தனி மனிதனின் தன்னுரிமைப் பாதுகாப்பும், சுதந்திர முறையான வரையறையும் இயற்கைச் சட்டத்தில் உள்ளன. இச்சட்டம் கடவுளின் விழைவாற்றலிலிருந்து அளக்கப்படுகின்றது என்று கருதினார்.\n\nமனிதனுடைய பகுத்தறிவுத் தன்மையும், மனிதத்தன்மையும் இயற்கைச் சட்டத்திற்கு இணங்கச் செயற்பட்டு வருகின்றன. இவ்வியற்கைச் சட்டத்தை யாவராலும் மீறுதல் இயலாது. இவ்வியற்கைச் சட்டம் நியையான ஒன்று. இயற்கைச் சட்டம் கடவுளால் அமைக்கப்பட்டது; அற ஒழுக்க நெறிப் பண்பு நடைமுறையுடன் கூடிய ஒன்று.\n\nகல்விக் கருத்து\n\nஇலாக்கு சான் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை கொண்டவராவர். கல்வியில் மொழியின் உபயோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், மொழி முக்கியமான பங்கை வகிக்கிறது. மொழியின் அமைப்பு மொழி அறிவியல் அறிவுக்குக் கருவியாகப் பயன்படுகிறது; இம்மொழியை மற்ற எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. மொழிப் பகுப்பாய்வு சிறந்த ஒன்றாகும். இதன் வாயிலாகச் சொல்லின் விளக்கத்தை அறிதல், மொழியின் பயன்பாடு, மொழியின் பயனற்ற கருத்துகள் இவை எனக் கருதுதல் அனைத்தும் எளிதாக அறிய முடியும்.\n\nஅற ஒழுக்கநெறிகள் கொண்டவர்களாகக் குழந்தைகளை ஒழுகச் செய்தல், குழந்தைகளின் திட்ட முறை, வாழ்க்கையின் வளர்ச்சிமுறை, சுகாதாரத்தைப் பற்றிய விளையாட்டுச் செயல்கள், குழந்தை உடல் அமைப்பின் நிலைமாற்றம், குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய கருத்துகள் கொண்ட ஒரு நூலைத் தம் நண்பரின் வாயிலாக கி.பி. 1693–ஆம் ஆண்டு எழுதி வெளியிடச் செய்தார். கல்வியினைப் பற்றிய எண்ணங்கள் (Some Thoughts on Education) என்ற நூலும் இவரால் எழுதப்பட்டது. ஒழுக்கம் இயற்கைச் சட்டம் ஆகியவை கல்வியின் கருத்துகளில் முக்கியமானவை. சமூகவியல், அரசியல், தத்துவம் ஆகியவற்றின் அமைப்பில் கல்வியின் கருத்தை அமைத்துள்ளார். இவர் கல்வியின் கருத்துகளுக்கு முதன்மை தாராமல் கல்வி கற்பதன் முறைகள், ஒழுக்க நெறியின் அடிப்படைகள் முதலியனவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்.\n\nஅறிவு ஆராய்ச்சியியல் கொள்கை (Theory of Knowledge)\n\nபுலன் கடந்த மெய்ப்பொருளியலில் தோன்றும் பொருள்களைப் பற்றி விளக்குமிடத்து ஒவ்வொரு பொருளும் இரண்டு வகையான குணங்களைப் பெற்றுள்ளது. ஒன்று முதல் தரமானது (Primary Qualities); மற்றொன்று இரண்டாம் தரமானது (Secondary Qualities), பொருளின் முதல் தரமான குணங்கள் எண் (Number), பரப்பு (Extension), உருவம் (Shape), இயக்கம் (Motion) முதலியன. இரண்டாம் தரமான குணங்கள் நிறம் (Colour), சுவை (Taste), மணம் (Smell), ஒலி (Sound) முதலியன. ஆக ஒவ்வொரு பொருளிலும் இரு வகையான தன்மைகள் உள்ளன என்றார். தொடக்க காலத்தில் மனிதனது மூளை வெறும் எழுத்தில்லாப் பட்டிகை (Tabularasa) போன்றது. எண்ணங்கள் புலன்களின் வாயிலாகவும் சிந்தனைகளின் வாயிலாகவும் மனத்தினுள் பதிவாகின்றன.\n\nமக்களின் எண்ணங்கள் அனைத்திற்கும் பிறப்பிடமாக விளங்குவது அனுபவமேயாகும்; அனுபவத்தின் வாயிலாக அறிவு உண்டாகிறது; தோன்றக் கூடிய எல்லா எண்ணங்களும் (Ideas) அனு- பவத்தால் பெறப்படுகின்றன. சிந்தனைகளின் வாயிலாகப் பெறப்படும் எண்ணங்கள் அகக் காட்சி (Introspection) எனச் சொல்லப்படுகின்றன. புலன்களின் வாயிலாகப் பெறப்படும் அறிவுகள் புலக்காட்சி எனக் குறிக்கப்படுகின்றன. நினைவு கூர்தல், ஒப்புமை காணுதல் ஆகியவை உள் மனத்தின்கண் எழுபவை ஆகும். நிறம், ஒலி, மணம், எண், பரப்பு, வடிவம், நிலை, இயக்கம் ஆகியவை புலன்களில் எழுபவையாகும் என அறிவு ஆராய்ச்சி மொழியியலில் இவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஅரசியல் கருத்துகள்\n\nஅரசு அமைப்பு முறையில் தனிமனிதனின் உரிமைகள் காக்கப் பெற வேண்டும். இவர்தம் அரசியல் கருத்துகள் ஆப்சு தாமசு (Hobbes Thomas) என்பவரின் அரசியல் கருத்துக்கு முரண்பட்டிருந்தன. இவர்தம் அரசியல் கருத்துகள் அக்காலத்தில் எழுந்த இயக்கங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. அரசியல் சமுதாய ஒப்பந்த அமைப்பில் மக்களின் தெய்விக உரிமையியலின் கருத்தை இவர் எதிர்த்தார். மனிதர்களின் தன்னுரிமையாட்சியும், அவர்களுடைய உரிமைகளும் இயற்கைச் சட்டத்தின் விதிகளால் பாதுகாக்கப்படுகின்றன; மனிதன் இயற்கையிலேயே ஒழுக்க நெறிகள் கொண்டவன்; அரசு நிருவாகம் (Executive), நீதித்துறை (Justice), சட்டசபை (Legislative) ஆகிய அமைப்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்; மக்கள் இயற்கைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும்; இச்சட்டமே தலையானது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇவ்வாறு அரசியல், தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்த இவர் கி.பி. 1704–ஆம் ஆண்டு அக்டோபர் 28–ஆம் நாள் ஓட்டிசு (Oates) என்னுமிடத்தில் காலமானார்."}}