{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z5pjhnr8/", "data": {"id": "z5pjhnr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z5pjhnr8/", "kind": "article", "headword": "உணவு", "romanization": "uṇavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.397422+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உயிர் வாழ இன்றியமையாத பொருள் உணவு.", "body_ta": "உயிர் வாழ இன்றியமையாத பொருள் உணவு. எல்லா உயிரினங்களும் உயிர் வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே, அவற்றின் நடவடிக்கைகள் அடிப்படையில் உணவுத் தேட்டத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆதி மனிதனின் முதல் தொழில் உணவுத் தேட்டமே.\n\nஉணவுத் தேட்டத்தின் வரலாறு\n\nஆதிகாலத்தில் மனிதன் இதைத்தான் உண்ணுவது என்று கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவில்லை. காடுகளிலும் திறந்த வெளிகளிலும் அலைந்து திரிந்து கிடைக்கக் கூடியவற்றையெல்லாம் உண்டான். காய்கள், கிழங்குகள், கனிகள், கொட்டைகள், இலைகள், நாய்க் குடைகள் எனக் கண்ணில் பட்ட, உண்ணக் கூடிய தாவரங்களையெல்லாம் உண்டான். இவை மட்டுமல்லாமல் நீர்நிலைகளில் கிடைத்த மீன்கள், நிலத்தில் அகப்பட்ட புழு பூச்சிகள், நண்டுகள், நத்தைகள், சிறிய விலங்குகள் ஆகியவற்றையும் உண்டான். இவை கிடைக்காதபோது செத்துக் கிடந்த விலங்குகளின் இறைச்சியையுண்டு பசியைத் தணித்துக் கொண்டான். இவை எதுவுமே கிடைக்காத போது மண்ணையும் களிமண்ணையும் கூடத் தின்றான்.\n\nகால ஓட்டத்தில் மனிதன் கல்லிலிருந்தும் மரத்திலிருந்தும் வேட்டைக் கருவிகள் செய்யக் கற்றுக் கொண்டான். அவற்றைக் கொண்டு மான், பன்றி, கரடி, காட்டெருமை முதலிய விலங்குகளைக் கொல்லவும், நீர் வாழ் உயிரினங்களை வேட்டையாடவும் முடிந்தது. தொடக்கத்தில் மனிதன், தான் வேட்டை- யாடிய விலங்குகளைப் பச்சையாகவே உண்டான். நாளடைவில் நெருப்பை உண்டாக்கும் வழியை அறிந்ததும், விலங்குகளின் இறைச்சியை நெருப்பில் இட்டு வாட்டி உண்ணக் கற்றுக் கொண்டான். எப்படிப் பானை செய்வது என்ற கலையை அறிந்து கொண்டதும், தான் தேடிய உணவுப் பொருள்களைக் கொதிக்க வைத்து அல்லது வேக வைத்து உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டான். இவற்றால் அவனுக்கு உணவைச் சுவையாக்கி உண்ண முடிந்தது.\n\nதொடக்கத்தில் தனியாக வேட்டையாடி வந்த மனிதன் வேட்டைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மற்றவர்களுடன் சேர்ந்து பெரிய விலங்குகளையும் விலங்குக் கூட்டங்களையும் வேட்டையாடத் தொடங்கினான். இதனால், மக்கள் ஒரு கூட்டமாக வாழும் முறை ஏற்பட்டது. இவ்வாறு கூட்டமாக வாழத் தொடங்கிய மக்கள் காட்டு விலங்குகளில் சிலவற்றைப் பிடித்துப் பழக்கி வளர்க்கத் தொடங்கினார்கள். ஆடு மாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் முதலிய விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்குகளாக ஆக்கிக் கொண்டார்கள். இவ்விலங்குகளை அவற்றின் இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்த்தார்கள். நீர்நிலையோரங்களில் மீன்கள் கிடைக்காதபோது வீட்டு விலங்குகளின் தோலினால் படகுகள் செய்து, அவற்றைக் கொண்டு நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். இதற்காக வலைகளைப் பின்னிக் கொண்டார்கள்.\n\nமக்கள் கி.மு. 8000–ஆம் ஆண்டளவில், தம் உணவுக்காகப் பயிர்களை வளர்க்கும் முறையைக் கற்றுக் கொண்டார்கள். காய்கனி, கிழங்குகள் ஆகியவற்றைத் தேடி அலைவதை விடுத்து, இவற்றைத் தாமே பயிரிடக் கற்றுக் கொண்டார்கள். இதன் வழியாக எழுந்த வேளாண்மை அவர்களுக்கு உணவு கிடைக்கும் உறுதியை அளித்தது. ஒரே இடத்தில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழும் நிலையையும் உருவாக்கியது. வேளாண்மை முறை நிலைபெற்றுச் செப்பமடைந்ததும், தானியங்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்களாக அமைந்தன. வேளாண்மை ஏற்பட்ட இக்கால கட்டத்திலும் இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் ஆடுமாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் முதலிய விலங்குகளை வளர்க்கும் நிலை நீடித்தது.\n\nதங்களுடைய செய்தொழிலில் வெற்றி ஏற்படவும், பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் வேண்டி மக்கள் மிகுந்த சமயச் சடங்குகளை மேற்கொண்டார்கள். நல்ல விளைச்சல் உண்டாக நிலம், கதிரவன் மழை, ஆறுகள் ஆகியவற்றை வேண்டிக் கொண்டு பூசனை, பலி முதலிய சடங்குகளை மேற்கொண்டார்கள். அவ்வாறே தம் கால்நடைச் செல்வம் பெருகவும் பல வகைச் சடங்குகளை மேற்கொண்டார்கள். தம் வேண்டுதல் நிறைவேறியதும் திருவிழாக்கள் நடத்தித் தம் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.\n\nஉணவு மூலாதாரங்கள்\n\nஇன்றும் மக்கள் தம் உணவைப் பெரிதும் தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டு மூலாதாரங்களிலிருந்தே பெறுகிறார்கள். இவற்றில் மக்கள் உண்ணும் உணவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தாவரங்களிலிருந்தே கிடைக்கிறது. ஆசுத்திரேலியா (Australia), ஐரோப்பா, வட அமெரிக்கா முதலிய கண்டங்களிலும், தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் மக்கள் மிகுதியான இறைச்சியை உண்ணுகிறார்கள். ஆயினும், அவ்விடங்களில் கூட மக்கள் தம் உணவில் பாதிக்கு மேல் தாவரங்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுகிறார்கள்.\n\nதாவரங்களிலிருந்து பலவிதமான உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை: (1) தானியங்கள், (2) காய்கனிகள், தானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை: அரிசி, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வாற்கோதுமை (Barley), ஓட்சு (Oats) முதலியன. பயறு வகைகளும் தானியங்களே. உலக மக்களின் உணவின் பெரும்பகுதியைத் தானியங்களே அளிக்கின்றன. உலக மக்களில் பாதிப் பேர் கோதுமை, வாற்கோதுமை, சோளம், ஓட்சு ஆகியவற்றை உண்கிறார்கள். மீதிப்பேர் அரிசி உண்டு வாழ்கிறார்கள். வட அமெரிக்கரின் உணவில் மூன்றில் ஒரு பங்கைக் கோதுமை முதலிய தானியங்கள் அளிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் உணவில் பாதிக்கு மேல் தானியங்கள் இடம் பெறுகின்றன. ஆசியாவில் பெரும்பகுதியினர் அரிசியையே உண்கின்றனர். இந்தியா, தென் சீனா, சப்பான், தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளின் உணவில் பெரும் பகுதி அரிசியே.\n\nதாவரங்களிலிருந்து தானியங்கள், காய்கனிகள், மட்டுமன்றி, கொட்டைகள், கடலைகள், மசாலாப் பொருள்கள் (Spices), நாய்க்குடை, சர்க்கரை, எண்ணெய் முதலிய உணவுப் பொருள்களும் கிடைக்கின்றன. காப்பி, தேநீர், கோகோ (Coco) போன்றவையும் தாவரங்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. விலங்குகளிலிருந்து இறைச்சி, முட்டை, பால் பொருள்கள் முதலியவை கிடைக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளை விட வளர்ச்சியுற்ற நாடுகளில்தான் இறைச்சி மிகுதியாக உண்ணப்படுகிறது.\n\nஇறைச்சிகளுள் மக்களால் மிகுதியாக உண்ணப்படுபவை மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் ஆட்டிறைச்சியுமே ஆகும். அமெரிக்காவிலும், கனடாவிலும் மக்கள் விரும்பி உண்பவை இந்த இறைச்சிகளேயாகும். ஆசுத்திரேலியாவிலும், அர்செண்டைனாவிலும் மாட்டிறைச்சி பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. மேற்கண்ட விலங்குகளின் இறைச்சி மட்டுமன்றிக் கோழி, வாத்து, வான்கோழி, புறா முதலிய பறவைகளின் இறைச்சியையும் உண்கின்றனர். சில நாடுகளில் கரிபூ என்ற கலைமான் வகையையும், குதிரை, குரங்கு, முதலை, புலி, முயல், நாய் முதலிய விலங்குகளையும் அடித்து உண்ணுவதுண்டு. இவற்றுடன் பாம்பு, ஆமை, எறும்பு, ஈசல், வெட்டுக் கிளி, நத்தை, தேனீக் கூட்டுப் புழுக்கள் ஆகியவற்றையும் உண்பதுண்டு. மீன், நீண்ட கடற்கரையுடைய நாடுகளிலும் தீவுகளிலும் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சிப்பிகளும் கூட உண்ணப்படுவதுண்டு.\n\nபொதுவாக முட்டைகளுள் கோழி முட்டையும் வாத்து முட்டையும் உண்ணப்படுவதுண்டு. சில நாடுகளில் ஈமு, கடற்பறவை, பெங்குயின் (Penguin), நெருப்புக்கோழி ஆகிய பறவைகளின் முட்டைகளும், ஆமை, முதலை முதலிய ஊர்வனவற்றின் முட்டைகளும் உண்ணப்படுகின்றன.\n\nபாலும் பாலிலிருந்து பெறப்படும் தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பொருள்களும் உணவாக அமைகின்றன. மிக அதிகமாகப் பயன்படும் பால் பசுவின் பால், ஐரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளில் பசுக்களே மக்கள் அருந்தும் பாலில் பெரும் பகுதியைத் தருகின்றன. பிற நாடுகளில் பல்வேறு பாலூட்டி விலங்குகள் பால் தருகின்றன. பிரான்சு (France), துருக்கி, இத்தாலி, கிரீசு (Greece) ஆகிய நாட்டினர் ஆட்டின்பாலை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இலாப்லாந்திலும் பிற வட ஐரோப்பிய நாடுகளிலும் கலைமானின் (Reindeer) பாலைப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, பாகிசுத்தான், எகிப்து, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளில் எருமைப் பால் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. திபேத்து, மங்கோலியா ஆகிய நாடுகளில் கவரி எருமை (Yak), குதிரை ஆகியவற்றின் பால் பயன்படுத்தப்படுகிறது. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள சில வனப் பழங்குடிகள் ஒட்டகப் பாலை அருந்துகிறார்கள். சிலி, ஈக்குவடார், பெரு, பொலிவியா முதலிய தென் அமெரிக்க நாடுகளில் இலாமா என்ற விலங்கின் பாலைக் குழந்தைகளுக்குத் தருகிறார்கள்.\n\nஉணவில் உள்ள சத்துகள்\n\nஉடல் இயங்கவும், வணர்ச்சியடையவும், நலமாக இருக்கவும் உடலுக்குச் சக்தி வேண்டும். உடலில் உள்ள இழைமங்கள் (Tissues) வலுவாக அமைய வேண்டும். அவை வலுவிழந்து தேயும் பட்சத்தில் அவை புதுப்பிக்கப்பட வேண்டும். உடலில் நிகழும் செயற்பாங்குகள் ஒழுங்குற அமைய வேண்டும். இக்காரியங்களுக்காகவே உடலுக்குச் சில பொருள்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய பொருள்கள் உணவுச் சத்துகள் எனப்படும். அவற்றின் இரசாயன அமைப்புப்படி, அவை (1) புரதம் (Protein), (2) கரிநீரகி (Carbohydrate), (3) கொழுப்பு, (4) வைட்டமின்கள், (5) உலோகத் தாதுப் பொருள்கள் (Minerals) (6) தண்ணீர் என வகைப்படுத்தப்படுகின்றன.\n\nஉணவுச் சத்துகளில் புரதங்கள் தசை வளர்க்கும் சத்துகள். இவை கரி (Carbon), உயிரகம் (Oxygen), நீரகம் (Hydrogen), வெடியம் (Nitrogen) ஆகிய தனிமங்களால் ஆனவை. சில புரதச் சத்துகளில் கந்தகமும், வேறு சில புரதச் சத்துகளில் எரிமமும் இருக்கின்றன. புரதச் சத்துகள் உயிரின் உறைவிடமாகிய ஊன்மம் (Protoplasm) என்ற உயிர்ப் பொருளின் முக்கிய பாகமாக இருக்கின்றன. புரதச் சத்துகளில் அமினோ அமிலங்கள் என்ற அமிலங்கள் உள்ளன. அமினோ அமிலங்களில் சில உயிர் வாழ்வதற்கும், உடல் வளர்ச்சிக்கும் பயன்படுகின்றன. அத்தகைய அமினோ அமிலங்களைக் கொண்ட புரதங்களை முதல் தரப் புரதங்கள் என்பர். அவை பால், முட்டை, இறைச்சி முதலிய உணவுப் பொருள்களில் உள்ளன. வேறு சில அமினோ அமிலங்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமே பயன்பட்டு, உடல் வளர்ச்சிக்குப் பயன்படுவதில்லை. அத்தகைய அமினோ அமிலங்களைக் கொண்ட புரதங்களை இரண்டாந்தரப் புரதங்கள் என்பர். அவை தானியங்களிலும் பயறுகளிலும் பருப்புகளிலும் கடலைகளிலும் அதிகமாக உள்ளன.\n\nகரிநீரகிகள் மாச்சத்துகள் ஆகும். இவை கரி, உயிரகம், நீரகம், ஆகிய தனிமங்களால் ஆனவை. உடலுக்கு வேண்டிய சக்தியைக் கரிநீரகிகள் கொடுக்கின்றன. தானியங்களிலும் கிழங்குகளிலும் (குறிப்பாக, உருளைக் கிழங்கிலும் சர்க்கரை வள்ளிக் கிழங்கிலும்) பருப்புகளிலும் கொட்டைகளிலும் சர்க்கரையிலும் கரிநீரகிகள் அதிகமாக உள்ளன.\n\nகொழுப்புகளில் மேற்கண்ட தனிமங்கள் இருப்பினும், அவற்றில் கரிநீரகிகளில் இருக்கிற அளவுக்கு உயிரகம் கிடையாது. கொழுப்புகள் சக்தியைத் தருவதுடன், உடலின் வெப்பம் குறையாமல் இருக்கவும், மேனி வளமாக இருக்கவும், உடலின் உறுப்புகள் நலமாக இருக்கவும் உதவுகின்றன. இறைச்சியிலும் மீனிலும் முட்டையிலும் பாலிலும் பால் பொருள்களிலும் எண்ணெய்களிலும் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு ஏனைய கொழுப்புகளைப் போலல்லாமல் A.D. ஊட்டச் சத்துகள் (Vitamins) நிறைந்ததாயும், எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.\n\nஊட்டச்சத்துக்களில் இருபதுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவை உடல்நலத்திற்கும் வளர்ச்சிக்கும் துணையாய் இருக்கின்றன. பால், காய்கறிகள், பழங்கள், தக்காளி, கீரை, முட்டை, முழுத் தானியங்கள், முளை கட்டிய பயறுகள், மீன், வெண்ணெய், நெய், ஈரல் ஆகிய பல உணவுகளில் அவை வெவ்வேறு அளவுகளில் பரவிக் கிடைக்கின்றன. பாலில் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊட்டச் சத்துகள் அனைத்தும் உள்ளன.\n\nஉலோகத் தாதுப் பொருள்கள் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலுவூட்டுவன. அவை உடலின் பல நீர்களையும் தத்தம் இயல்பு மாறாமல் இருக்கும்படி காத்துக் கண்காணிக்கின்றன. உலோகத் தாதுப் பொருள்களுள் சுண்ணாம்புச் சத்தும் (Calcium), இரும்புச் சத்தும் செம்புச் சத்தும் கந்தகமும் எரிமமும் முக்கியமானவை. பால், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகிய உணவுகளில் உலோகத் தாதுப் பொருள்கள் நிறைய உள்ளன. பாலில் தான் மிகுதியான உலோகத் தாதுப் பொருள்கள் உள்ளன.\n\nஉணவில் உள்ள தண்ணீர் மேற்கண்ட உணவுச் சத்துகளைக் கரைத்து உயிரணுக்களுக்குக் (Cells) கிடைக்குமாறு உதவுகிறது. கழிவுப் பொருள்கள் உடலிலிருந்து வெளியேறவும் தண்ணீர் உதவுகிறது.\n\nஇச்சத்துகளன்றி, உணவில் நார்ப் பொருளும் (fibre) உள்ளது. இது உணவும் கழிவுப்பொருள்களும் குடலில் அசைந்து செல்வதற்கு உதவியாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், தவிடு, தண்டு வகைகள் ஆகியவற்றில் நார்ப்பொருள் கிடைக்கிறது.\n\nஇயற்கையில் எந்த ஓர் உணவிலும் இச்சத்துகள் அனைத்தையும் ஒருங்கே காணமுடியாது, ஆகவே, நாம் எல்லாவிதமான உணவுப்பொருள்களும் கலந்த சீருணவை உண்ணுவது இன்றியமையாதது. அதன் மூலம் எல்லாச் சத்துகளையும் மக்கள் போதிய அளவில் பெறலாம்.\n\nஉணவுச் சத்துக்கள் பயன்படுத்தப்படும் விதம்\n\nமேற்கண்ட உணவுச் சத்துக்களை உடல் மூன்று வழிகளில் பயன்படுத்துகிறது. முதலாவதாக, உடல் தனக்கு வேண்டிய சக்தியைத் தயாரிக்கச் சில உணவுச் சத்துகளைப் பயன்படுத்துகிறது. உடலின் எல்லா உறுப்புகளும் செயற்படச் சக்தி வேண்டும். இப்படி உடம்பின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தேவைப்படும் சக்தியைத் தயாரிக்க உணவில் உள்ள கரிநீரகிகளும் கொழுப்புகளும் உதவுகின்றன.\n\nசெரிமானத்தின்போது உணவில் உள்ள கரிநீரகிகள் எளிமையான சர்க்கரைகளாக உருமாறுகின்றன. கொழுப்புச் சத்துகள், கொழுப்பு அமிலங்கள், கரிநீர்ப்பாகு (Glycerol) என்ற இரு பொருள்களாகப் பிரிகின்றன. இந்த மூன்று பொருள்களும் உடலின் உயிரணுக்களில் எரிதலால் சக்தி (வெப்பச் சக்தி) வெளிப்படுகிறது. அந்தச் சக்தி உடலின் ஒவ்வொரு வேலைக்கும் பயன்படுகிறது. அந்தச் சக்தியின் காரணமாகவே உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளும் செயல் மண்டலங்களும் (Systems) செயற்பட முடிகின்றன. மேலும், உணவுச் சத்துகள் உயிரணுக்களில் எரியும்போது ஏற்படும் வெப்பம் உடலின் வெப்ப நிலை சீராக, 98.6° F (37° C) அளவில் இருக்கும் வண்ணம் உதவுகிறது. இந்த வெப்பம் இல்லாமல் உடல் ஒழுங்காக இயங்க முடியாது.\n\nஇரண்டாவதாக, உடலில் உள்ள எலும்புகள், பற்கள், தசைகள், பிற இழைமங்கள் தொடர்ந்த உபயோகத்தின் காரணமாகத் தேயும். அப்படித் தேயும்போது அவற்றைச் சரி செய்து புதுப்பித்தாலொழிய உடல் வளர்ச்சியடையவோ இயல்பாகச் செயற்படவோ இயலாது. மேலும், முற்றிலும் தேய்ந்த இழைமங்களுக்குப் பதிலாகப் புதிய இழைமங்களும் உருவாக்கப்படுவது இன்றியமையாதது. இக்காரியங்களுக்காக உடல் உணவில் உள்ள புரதச் சத்துகளைப் பயன்படுத்துகிறது. இழைமங்கள் புரதப் பொருள்களைக் கொண்டவை. அவை தேய்கிற போது புரதப் பொருள்களைக் கொண்டுதான் அவைகள் புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் படுகின்றன.\n\nஉலோகத் தாதுப் பொருள்களும் உடல் இழைமங்கள் வலுவாக அமைய உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, சுண்ணாம்புச் சத்து, எரிமம் முதலியவை எலும்புகளும் பற்களும் உறுதியாக இருக்க உதவுகின்றன.\n\nமூன்றாவதாக, உடல் தன்னிடம் நிகழும் பலவிதமான செயற்பாங்குகள் ஒழுங்குற அமைய உணவுச் சத்துகளைப் பயன்படுத்துகிறது. இக்காரியத்திற்கு உணவில் உள்ள புரதச் சத்துகள் பெரிதும் பயன்படுகின்றன. உடலில் உணவு செரிக்கவும், சக்தி (வெப்பச் சக்தி) தயாராகவும், இழைமங்கள் வலுப்படுவதற்குத் தேவையான புரதப் பொருள்கள் உருவாகவும் சுரப்பி நீர் (Enzymes) என்ற புரதப் பொருள்கள் உதவுகின்றன. உடலில் நிகழும் இரசாயனச் செயல்களை நொதிப்பிகள் (Hormones) என்ற புரதப் பொருள்கள் ஒழுங்குபடுத்துகின்றன. அவை நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடல் நலத்தைப் பாதுகாப்பவை. நோய் எதிர்ப்புப் பொருள்கள் (Antibodies) புரதப் பொருள்கள். உடல் இந்த எல்லாப் புரதப் பொருள்களையும் உணவில் உள்ள புரதச் சத்துகளில் கிடைக்கும் அமினோ அமிலங்களிலிருந்து தயாரிக்கிறது.\n\nஉலோகத் தாதுப் பொருள்களும் ஊட்டச்சத்துகளும் கூட உடலில் நிகழும் பல செயற்பாங்குகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. மற்றைய உணவுச் சத்துகளைப் போல அல்லாமல், இவை உணவுச் செரிமானத்தின்போது நேரே இரத்த ஓட்டத்தில் சென்று கலக்கின்றன.\n\nஉலோகத் தாதுப் பொருள்கள் பலவிதமான பணிகளைப் புரிகின்றன. எடுத்துக்காட்டாக, இரும்புச் சத்தும் செம்புச் சத்தும் சிவப்பு இரத்த அணுக்கள் வலுவாக அமைய உதவுகின்றன. உவர்மமும் (Sodium), பிற உலோகத் தாதுப் பொருள்களும் உடலின் இழைமங்களில் இருக்கும் நீரின் அளவு மாறாமல் இருக்கும் படிபார்த்துக் கொள்ளுகின்றன. சுண்ணாம்புச் சத்து காயம் பட்ட இடத்தில் இரத்தம் உறையத் துணை புரிகிறது.\n\nஉலோகத் தாதுப் பொருள்களைப்போல வைட்டமின்களும் பலவிதமான பணிகளைப் புரிகின்றன. ஊட்டச்சத்து A இரவில் பார்க்கவும், உறுதியான எலும்புகள், ஆரோக்கியமான பற்கள், வலிமையான தோல் ஆகியவை அமையவும் உதவுகின்றது. பலவிதமான B ஊட்டச்சத்துகள் உடலில் கரிநீரகிகள், கொழுப்புகள், புரதச் சத்துகள் ஆகியவை எரிந்து அதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி தயாராக உதவுகிறது. ஊட்டச்சத்து C உடல் உறுப்புகள் வலிமை பெறவும், எலும்புகளும் பற்களும் உறுதிப்படவும் உதவுகின்றது. ஊட்டச்சத்து D உடல் உணவில் உள்ள சுண்ணாம்புச் சத்தையும், எரிமத்தையும் (Phosphorous) பயன்படுத்த உதவுகிறது.\n\nபொதுவாக ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கும், வளர்ச்சிக்கும், நோயை எதிர்க்கக் கூடிய வலிமைக்கும் பெருந்துணையாய் இருக்கின்றன. ஆகவே, உண்ணும் உணவில் வைட்டமின்கள் போதிய அளவில் இருக்க வேண்டும். அவை குறைந்தால் நோய்கள் உண்டாகும். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து C குறைந்தால் சொறிநோய் உண்டாகும். வைட்டமின் D குறைந்தால் கணைச்சூடு உண்டாகும்.\n\nஉணவு வேறுபாடு\n\nஉடல் இயங்கவும் வளர்ச்சியடையவும் நலமாக இருக்கவும் பல வகையான உணவுகள் தேவைப்படுவதால், மக்கள் ஒரே விதமான உணவுகளை உண்ணுவதில்லை. அவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, சில நாடுகளில் மிகுதியாக இறைச்சியை உண்ணுகிறார்கள். வேறு சில நாடுகளில் மீனை மிகுதியாக உண்ணுகிறார்கள். சில நாடுகளில் சைவ உணவு மட்டுமே உண்ணப்படுகிறது. சில நாடுகளில் சில உணவுகள் விரும்பி உண்ணப்படுகின்றன. ஆனால், அவை பிற நாடுகளில் விலக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் பசிபிக்குத் தீவுகளிலும் மக்கள் நாயின் இறைச்சியை உண்ணுகிறார்கள். ஆனால், வடஅமெரிக்காவில் நாயின் இறைச்சியை யாரும் உண்ணுவதில்லை. பெரு நாட்டு இந்தியர்கள் கினியா பன்றி இறைச்சியை விரும்பி உண்பார்கள். ஆனால், வட அமெரிக்காவில் அது அருவருப்பாகக் கருதப்படுகிறது.\n\nஉணவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுவதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் இருக்கின்றன. அவை: (1) புவியியல் காரணங்கள். (2) பொருளாதாரக் காரணங்கள், (3) சமயக் காரணங்கள், (4) வழக்கங்கள்.\n\nபுவியியல் காரணங்கள்\n\nவாழும் நிலத்தின் அமைவிடம், தட்ப வெப்ப நிலை, அங்கு நிலவும் புறச் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு நாட்டு மக்களின் உணவுப் பழக்கம் அமையக் கூடும். தீவுகளில் அல்லது நீண்ட கடற்கரையுடைய நாடுகளில் வாழும் மக்களின் உணவு பெரும்பாலும் கடல் வாழ் உயிரினங்களாக இருக்கும். நார்வே, சுவீடன், தென்மார்க்கு, பின்லாந்து, சப்பான் ஆகிய நாடுகளில் மீனே மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. காரணம், இந்நாடுகள் கடலை ஒட்டி இருப்பதால் மீன்பிடித்தல் தொழில் இங்கே முக்கியமான தொழிலாக அமைய முடிகிறது. ஆசுத்திரேலியா, அர்செண்டைனா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகளில் மாட்டிறைச்சி பெரிதும் உண்ணப்படுகிறது. இதற்குக் காரணம் இந்நாடுகளில் மாடுகள் மேய்ப்பதற்கு ஏற்பப் பரந்த சமவெளிப் புல்வெளிகள் மிகுதியாக இருப்பதுதான். வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆண்டு முழுவதும் காய்கறிகளும் பழங்களும் விளைவிக்க முடியும். ஆகவே, அவர்கள் உணவில் காய்கறிகளும் பழங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால், குளிர்ப் பகுதிகளில் வாழும் மக்கள் குறைந்த காலந் தான் உணவுப் பயிர்களை விளைவிக்க முடியும். ஆகவே, அவர்கள் உணவில் தானியங்களும் காய்கறிகளும் குறைவாகவும், இறைச்சி, மீன் முதலியன மிகுதியாகவும் இருக்கும். வறண்ட நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மக்காச்சோளம் போன்ற தானியங்களை விளைவித்து உண்ணுகிறார்கள். மழை வளம் நிரம்பிய செழிப்பான பகுதிகளில் வாழும் மக்கள் அரிசி விளைவித்து உண்ணுகிறார்கள்.\n\nஆனால், இப்போது போக்குவரத்துச் சாதனங்கள், செய்தித் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை பெருகியுள்ளதால் ஒரு நிலப் பகுதி மக்கள் பிற நிலப் பகுதி மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் தம்மிடையே உணவுப் பரிமாற்றம் வைத்துக் கொள்ள முடிகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு புறச் சூழ்நிலையில் வளரும் உணவுப் பயிர்கள் பிற சூழ்நிலையிலும் வளரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n\nபொருளாதாரக் காரணங்கள்\n\nபொதுவாக ஒரு நாட்டு மக்கள் உண்ணும் உணவின் வகை, அளவு ஆகியவை அவர்களுடைய நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து அமைகிறது. மிக்க வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் பல வகையான உணவுகளையும் சத்து நிரம்பிய உணவையும் உண்ண முடிகிறது. அவர்களுடைய உணவில் தானியங்கள், காய் கனிகள் ஆகியவற்றுடன் இறைச்சி, முட்டை, பால் பொருள்கள் முதலிய உணவுப் பொருள்களும் இடம் பெறுகின்றன. இதன் காரணமாக அவர்களுடைய உணவு சத்து நிரம்பியதாக, வளமானதாக இருக்கிறது.\n\nபெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் மக்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. கிடைக்கின்ற உணவும் சத்து நிரம்பியதாக இருப்பதில்லை. இறைச்சி, முட்டை, பால் பொருள்கள் முதலியன அந்நாட்டு மக்களுக்கு விலையுயர்ந்தவையாக இருப்பதால், அவற்றை வாங்கியுண்ண அவர்களுடைய பொருளாதார நிலை இடந்தருவதில்லை.\n\nசமய காரணங்கள்\n\nபல மதங்களில் உணவு சம்பந்தமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்து சமயம் மாட்டிறைச்சியை அனுமதிப்பதில்லை. சில இந்துக் குழுக்களில் எந்தவிதமான இறைச்சியும் அனுமதிக்கப்படுவதில்லை. இசுலாமிய சமயத்திலும் வைதிக சமயத்திலும் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. சமணமும், புத்த சமயமும் புலால் உணவைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஏழாம் நாள் பிறப்பு (Seventh-day Adventist) என்ற கிறித்தவத் திருச்சபை தன்னுடைய உறுப்பினர்களை எந்த இறைச்சியையும் தொடலாகாது என்று வற்புறுத்துகிறது. சமயக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அந்தந்தச் சமய மக்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை விலக்கி, அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ணுகிறார்கள்.\n\nவழக்கங்கள்\n\nவழக்கங்களின் அடிப்படையில் கூட மக்களின் உணவு வரையறுக்கப்படுகிறது. பல நாடுகளில் சில உணவு வகைகளே பெரிதும் உண்ணப்படுகின்றன. இதற்குக் காரணம் அவை மரபு வழி அமைந்த உணவுகள் என்பது தான். மரபு வழி அமையாத உணவுகள் வெறுத்து ஒதுக்கப்படுவதுண்டு.\n\nஅமெரிக்க மக்களுக்கு உரொட்டித்துண்டு, இறைச்சி, காய் கறிகள், பாலாடைக் கட்டி ஆகியவையும், பாலும், ஆரஞ்சுப் பழச்சாறும் முதன்மையான உணவு. ஆங்கிலேயரும் ஆசுத்திரேலியரும் மாவு, பால், முட்டைக் கரு முதலியவற்றைச் சேர்த்துப் பிசைந்து நெருப்பிலிட்டு வாட்டித் தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிட்டை வறுக்கப்பட்ட மாட்டிறைச்சியுடன் சேர்த்து உண்ணுகிறார்கள். இத்தாலியருக்குக் கோதுமை மாவு, முட்டைக்கரு ஆகியவற்றுடன் செய்யப்படும் குழல் பண்ணியங்கள் முதன்மையான உணவு. அவர்கள் இவற்றைத் தக்காளிக் கூட்டுச் சாற்றில் (Sauce) தோய்த்து உண்ணுகிறார்கள். பிரான்சில் உரொட்டியும், கூட்டுச் சாறும், மாவுக் கூழும் முக்கியமான உணவுகள், செருமானியர் உணவில் பொதுவாக மசாலா கலந்த, கொத்தப்பட்ட மாட்டிறைச்சி, உருளைக் கிழங்கு அடை, முட்டைக் கோசு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இசுபானியர் (Spanesh) அரிசி, கோழிக்கறி, காய்கறிகள், குங்குமப்பூ, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துத் தளதளவென்று நீரில் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பாலா (Paella) என்ற உணவை விரும்பிச் சாப்பிடுகின்றனர். கிரீசு மக்களுக்கு அரைக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டிக்கறி, முட்டைக் கத்திரிச் செடியின் பழம், தக்காளிக் கூட்டுச் சாறு, பாலாடைக் கட்டி இவற்றுடன் சேர்த்துச் செய்யப்பட்ட மூசாகா (Moussaka) என்ற உணவு விருப்பமான உணவு. அங்கேரிய மக்களுக்கு மாட்டிறைச்சி, கன்றிறைச்சி, காய்கறிகள், ‘பாப்ரிகா’, என்ற மசாலாப் பொருள் ஆகியவற்றைக் கலந்து நீரில் வேக வைத்து வதக்கித் தயாரிக்கப்படும் கலாசு (Goulash) என்பதுதான் சிறந்த உணவு. இசுகாண்டிநேவிய மக்கள், உரொட்டி பாலாடைக் கட்டி, கெர்- ரிங்கு (Herring) என்ற கடல்மீன், மற்ற மீன்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறார்கள். சோவியத்து மக்கள் விரும்பியுண்பது பாலாடைக் கட்டி பொதிந்திருக்கும் பிளினி (Blini) என்ற அடை. இதனுடன் கெர்ரிங்கு மீன், உப்பிட்டு உலர்த்திய பெரிய மீன் முட்டைகள், பார்ச்சு (Borsch) என்ற பீட்ரூட்டுச் சாறு (Soup) ஆகியவற்றைச் சேர்த்து உண்ணுகிறார்கள். மத்திய ஆசிய நாடுகளில் கோதுமை மாவில் பிசைந்த பிட்டா உரொட்டி என்ற உரொட்டிதான் முக்கியமான உணவு. இசுரேலில் பிட்டா உரொட்டியுடன், நன்றாக அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி, ‘சிக்-பீ’ என்ற பயறு, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் பெலபெல் (Fellafel) என்ற பண்டத்தையும் சேர்த்து உண்ணுகிறார்கள். மெக்சிகோவில் மக்காச் சோள மாவினால் செய்யப்படும் அடை போன்ற தார்டீலா (Tortilla) என்ற உரொட்டிதான் முதன்மையான உணவு. இந்தியாவிலும் தென் சீனாவிலும் சப்பானிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரிசிதான் முதன்மையான உணவு. இந்தியர்கள் அரிசிச் சோற்றில் குழம்பு சேர்த்து உண்ணுகிறார்கள். சப்பானியர் அரிசிச் சோற்றுடன் உறைப்பில்லாத குழம்பு, வறுத்த காய்கறித் துண்டுகள், இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கலந்து உண்ணுகிறார்கள். வட, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் செமோலினா என்ற தானிய மாவை வேக வைத்துத் தயாரிக்கப்படும் கூசுகூசு (Couscous) என்ற மாவு உணவே முதன்மையான உணவாகும். இதனுடன் மசாலாப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கடலைகள், இனிப்புப் பொருள்கள் ஆகியவற்றையும் சேர்த்து உண்ணுகிறார்கள்.\n\nஉண்ணுகிற வேளைகளும் வழக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன. பெரும்பாலான நாடுகளில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை மட்டுமே உணவு உண்ணப்படுகிறது. வழக்கத்தின் அடிப்படையில் இது அமைகிறது. இப்பொழுது மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் காப்பி அல்லது தேநீருடன் கூடிய மாலைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது.\n\nஉணவு உண்ணும் விதம் கூட வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் மக்கள் தட்டில் உணவை வைத்துக் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றால் உணவை எடுத்து உண்ணுகிறார்கள். இந்தியர் தட்டில் அல்லது இலையில் உணவு பரிமாறப்பட, அதைக் கைகளால் எடுத்து உண்ணுகின்றனர். சீனாவிலும் சப்பானிலும் மாவுருண்டையினை மக்கள் குச்சிகளால் எடுத்து உண்ணுகிறார்கள்.\n\nஇக்கால உணவு முறை\n\nவளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தாங்களாகவே உணவு உற்பத்தி செய்து தம் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவு உற்பத்திக்கென்றே ஒரு தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலில் உணவுகள் சுகாதாரமான முறையில் பக்குவப்படுத்தப்பட்டு, தகரக்கலத்தில் (tin), அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இறைச்சி, மீன் கூட இவ்விதம் பக்குவப்படுத்தப்பட்டுத் தகரக்கலத்தில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. புதிய அறிவியல் வளர்ச்சியின் காரணமாகச் செயற்கை உணவுகளும் புழக்கத்திற்கு வத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கை முட்டைகளுக்கு மாற்றாகச் செயற்கை (Synthetic) உணவுப் பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. சி.என்.ந."}}