{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z4aswxdj/", "data": {"id": "z4aswxdj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z4aswxdj/", "kind": "article", "headword": "செவியின் கோளாறு", "romanization": "ceviyiṉ kōḷāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.294610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தோலில் உள்ள பிளவுகள், கீறல்கள் வழியாக மயிர்க் குமிழ்களையும், செபச் சுரப்பிகளையும், ஸ்டெஃபைலோ காக்கை நுண்ணுயிரிகள் அடைந்து, கொப்புளச் செவி அழற்சியை உண்டாக்குகின்றன.", "body_ta": "தோலில் உள்ள பிளவுகள், கீறல்கள் வழியாக மயிர்க் குமிழ்களையும், செபச் சுரப்பிகளையும், ஸ்டெஃபைலோ காக்கை நுண்ணுயிரிகள் அடைந்து, கொப்புளச் செவி அழற்சியை உண்டாக்குகின்றன. செவித் துளையின் குருத்தெலும்புப் பகுதியில்தான் கொப்புளங்கள் காணப் படும்.\n\nஅறிகுறிகள். பற்கள் மற்றும் கழுத்து நோக்கிச் செல்லும் வலியால், நோயாளி துன்பமடைவார். வாயைத் திறக்க முயற்சிக்கும் போதும், சுவைக்கும் போதும், வலி மிகுதியாகிறது. துளையின் குருத்தெலும்புப் பகுதி சுருக்கமடைகிறது. செவிச் சிறு மடலையும், குருத்துப் பகுதியையும் அழுத்தினால், வலி மிகும்; நிண முடிச்சுகள் வீங்கித் தொடு வலி கொண்டுள்ளன. உடல் வெப்பம் மிகும். கேட்கும் திறன் பாதிக்கப் படுவதில்லை. இந்நோய் 5–7 நாள் நீடிக்கலாம். ஆனால், கொப்புளங்கள் மீண்டும், மீண்டும் தோன்றுகின்றன. அப்போது, நோய், பல வாரங்களுக்கு நீடிக்கும். நீரிழிவு நோய், சிறுநீரக நோய், கடும் ஆக்கச் சிதை மாற்ற நோய்கள் உள்ளவரிடம் மேற்கூறிய நிலை காணப் படும்.\n\nமருத்துவம். உலர்ந்த வெப்பம், 70 டிகிரி ஆல்கஹால் அல்லது 10% அலுமினியம் அசெட்டேட் கரைசல் ஆகியவற்றால் செறிவடைந்த குறுகிய வலைத் துணி அடைப்பானைச் செவித் துளையினுட் செலுத்துதல், குவார்ட்ஸ் விளக்கு மற்றும் சொல்லூக்ஸ் விளக்கு கொண்டு கதிர் வீச்சுச் செய்தல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.\n\nதடுப்பு முறைகளும், பராமரிப்பும். தோலின் எக்ஸ் மாவின் போது, 70 டிகிரி ஆல்கஹால் அல்லது மஞ்சள் பாதரச ஆக்சைடு களிம்பு கொண்டு செவித் துளையின் சுவர்கள் மீது பூசினால், மீண்டும், மீண்டும் நோய் ஏற்படுவது தவிர்க்கப் படுகிறது. துளைக்குள் களிம்பைச் செலுத்த. 1.5–2 செ.மீ. நீளமுள்ள பஞ்சை மழமழப்பாகச் சுற்றிப் பயன் படுத்தலாம். மருத்துவர் பரிந்துரைத்த களிம்பைப் பஞ்சின் மீது தடவி, அதைத் துளையினுட் செலுத்த வேண்டும். செலியுள்ளே 15–20 நிமிடங்களுக்குப் பஞ்சை வைத்து விட வேண்டும். பொதுப்படையான மருத்துவம் (அயச் சத்து, ஆர்செனிக், மீன் எண்ணெய், வைட்டமின் முதலியன) மிகையான கொப்புளங்களின் போது, பரிந்துரைக்கப் படும். பெனிசிலின் தசை ஊசியாகச் செலுத்தப் படலாம்.\n\nகட்டியான குறும்பி. புறச் செவித் துளையின் தோலில் உள்ள குறும்பிச் சுரப்பிகளின் மிகுதியான சுரப்பால், செவியில் மெழுகு தேங்கிக் கட்டியான குறும்பி உண்டாகிறது.\n\nஅறிகுறிகள். கட்டியான அடைபட்ட குறும்பி, செவித் துளையை முழுமையாக அடைத்து விட்டால், கேள் திறன் குறைகிறது. குளித்த பின்னரோ, தலை மயிர்க் கழுவலின் போதோ, நீர் காதினுட் செல்ல, கேள் திறன் குறைகிறது. இங்கு குறும்பி வீக்கமடைந்து, செவிக் கால்வாயை முழுமையாக அடைக்கிறது.\n\nமருத்துவம். குறும்பியை அகற்றி, நோயாளியைக் கேட்கச் செய்ய, வெப்பமான (37°C) நீரை 100 செ.மீ. ஊசி மூலம் காதினுள் பாய்ச்சலாம்.\n\nநீர் பாய்ச்சல் முறை கொண்டு, கட்டியான குறும்பியை அகற்றச் செவிலியர்களைப் பணிக்கலாம். துளைச் சுவரின் பின் புற, மேற்புறச் சுவர் வழியாகச் செலுத்தப் பட்ட நீர்த் தாரை, செவிப் பறைப் படலத்தையும், துளையின் சுவர்களையும் கழுவுகிறது. நீர்ப் பாய்ச்சல் சரியாகச் செய்யப் படாவிடில், நீர்த் தாரை நேரடியாகச் செவிப் பறைப் படலத்தின் மீது செலுத்தப் படுகிறது. இதனால், வலி உண்டாகிப் படலம் சேதமடைவதுடன், குறும்பியும் முழுமையாக வெளிப் படுவதில்லை.\n\nநீர்ப் பாய்ச்சலிலேயே அடைக்கப் பட்ட குறும்பியை அகற்றி விட முடியாது. அந்நிலையில், 2–3 நாளுக்குக் காரச் சொட்டுகளை உட்சொட்டிட்டு, மெழுகை மென்மையடையச் செய்ய வேண்டும். குறும்பி வீக்கமடைவதால், கேட்பது தற்காலிகமாகக் குறையலாம். செவியிலிருந்து முன்னரே சீழ் வெளிப்பட்டிருந்தால், நீர்ப் பாய்ச்சல் தேவையில்லை.\n\nசெவியில் வேற்றுப் பொருள்கள். விளையாடும் போது, வேற்றுப் பொருள்களைக் காதில் செருகும் நிலை 2–8 வயது குழந்தைகளிடம் காணப் படலாம். செவியிலுள்ள பொருள் எந்த விதமான உணர்வுகளையும் உண்டாக்குவதில்லை. சில போது, அனிச்சை இருமல் உண்டாகும் அல்லது கேட்கும் திறன் குறையலாம். செவியிலிருந்து பொருள்களை அகற்றத் தவறான முறையைக் கையாண்டால், பின் வரும் விளைவுகள் நேருகின்றன. புறச் செவித் துளையின் அழற்சி, சில போது செவிப் படலம் கிழிந்து விடல், நடுச் செவியின் கடும் அழற்சி ஆகியன ஏற்படும். செவிக்குள் பூச்சி நுழைந்தால், துளைச் சுவர் வழியாக ஊர்ந்து சென்று, செவிப் பறைப் படலத்தை அடைந்து, தாங்க முடியாத அரிப்பு, செவியில் சடக்கென்ற ஒலி ஆகியவற்றை உண்டாக்கும்.\n\nமருத்துவம். செவித் துளையினுள் வெப்ப நீர்ப் பாய்ச்சல் மூலம், இப்பொருள்கள் அகற்றப் படுகின்றன. வெப்பமான கிளிசரின் மற்றும் வாசலைன் எண்ணெய், சூட எண்ணெய், சாராயம் ஆகியவற்றின் சில சொட்டுகளை உட்சொட்டிடுவதன் மூலம், செவியின் உள்ளேயுள்ள பூச்சியைக் கொன்று விடலாம். அயற் பொருளை அகற்ற முடியாவிடில், நேரடிப் பார்வையின் மூலம், மருத்துவர் ஒரு மொட்டையான அல்லது கூர்மையான கொக்கி கொண்டு, அகற்றி விடலாம் (சில போது உணர்வகற்று முறை கையாளப் படுகிறது). வட்டமான பொருளைச் சாமணம் கொண்டு அகற்ற முயலக் கூடாது. ஏனெனில், அது வழுக்கி, துளையின் ஆழ்ந்த பகுதிகளுக்குச் செல்லக் கூடும்.\n\nஉப்பக் கூடிய தன்மை கொண்ட பட்டாணிக் கடலை போன்ற பொருள்களை, அதன் நீர் அடக்கத்தை அகற்றும் முறையில், முதலில் செவிக் கால்வாய்க்குள் 96 டிகிரி ஆல்கஹாலின் வெப்பக் கரைசலை உட்சொட்டிட வேண்டும். செவியிலிருந்து பொருள்களை அகற்றுவதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் செவிலியர் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். செவிக்கான ஊசி, வெப்பமான 3% போரிக் அமிலக் கரைசல், கொக்கிகள், வளைந்த சாமணங்கள், தொற்றற்ற பஞ்சு முதலியன இன்றியமையாதவை. இதற்கு முன், பொருளை அகற்ற முயற்சி செய்யப் படாவிடில், நீர் பாய்ச்சல் முறை கொண்டு பொருளை அகற்ற வேண்டும். சிறந்த வல்லுநரே, கருவிகள் கொண்டு பொருள்களை அகற்ற முயல வேண்டும்.\n\nநடுச் செவியின் கடும் அழற்சி. இது குழந்தைகளிடம் பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. கேட்கும் குழல் வழியாகச் செவிப் பறைப் படலம் பாதிக்கப் படுவதால், நடுச் செவி அழற்சி தோன்றுகிறது. அரிய நிலைகளில், சேதமடைந்து, செவிப் பறைப் படலத்தின் வழியாக நடுச் செவிக்குள் தொற்று பரவுகிறது.\n\nஅறிகுறிகள். பொதுப்படையான உடல் நலக் குறைவு, உடல் வெப்ப உயர்வு, கேட்கும் திறன் குறைவு, செவியில் மட்டுமல்லாமல், மாஸ்ட்டாய்டு புடைப்பிலும் வலி, தலைவலி ஆகியவை இந்நோயில் தோன்றுகின்றன. செவியில் காணப்படும் குத்து வலி தாங்க முடியாமல் இருப்பதால், அவசர மருத்துவத்திற்கு வல்லுநர் உதவி தேவை. கார்பால் கிளிசரின் சொட்டுகளை இடுவதால், வலி குறைகிறது. அசெட்டைல் சாலிசிலிக் அமிலம், அமிடோபைரின், நுண்ணுயிர் எதிர் உயிர் மருந்துகள் ஆகியவற்றையும் பயன் படுத்தலாம்.\n\nசெவியிலிருந்து வெளிப்பாடு தோன்றினால், சொட்டிடுதலை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில், ஈரமான சீழ் கொண்ட சூழ்நிலையில் கார்பாலிக் அமிலம் தோல் மற்றும் செவிப் பறைப் படலத்தை அரித்து விடலாம். செவியிலிருந்து வெளிப்பாடு கண்டவுடனே, கார்பால் கிளிசரைன் சொட்டு இடுவதை நிறுத்தி விட வேண்டும். தேவையிருந்தால், மயக்க மருந்துகளும், தூக்க மருந்துகளும் தரப் படலாம். இரண்டு, மூன்று நாளில் முன்னேற்றம் எதுவும் இன்றி, உடல் வெப்பம் மிகையாக இருந்தால், துளையிடல் முறையைக் கையாளுவதன் மூலம் சீழ் வெளிப்படுவதுடன், சிக்கல்கள் உண்டாவதும் தவிர்க்கப் படும். அனைத்து வகையான நடுச் செவி அழற்சிகளிலும், குருதி நாளச் சொட்டு மருந்துகள் இடப் பட வேண்டும்.\n\nநடுச் செவியின் நாட்பட்ட சீழ் அழற்சி. முறையான மருத்துவம் செய்யப் படாத நடுச் செவியின் கடும் அழற்சி, நாட்பட்ட வகையாக மாறலாம். மூக்குக் குழிவிலுள்ள நாட்பட்ட அழற்சி நிகழ்வுகளும், மூக்கு மேல் தொண்டையின் நிகழ்வுகளும், இதற்குக் காரணமாகின்றன. நாட்பட்ட சளி கொண்ட நடுச் செவி அழற்சியில் இரண்டு வகைகள் உள. செவி அழற்சி, செவிப் பறைப் படலத்தின் நடுத் துளையுடன் கூடியது. செவிப் பறைப் படலத்தின் விளிம்பில் துளையுடன் கூடிய செவி அழற்சியில், நடுச் செவியின் எலும்புச் சுவர்கள் பாதிக்கப் படுகின்றன.\n\nஅறிகுறிகள். நடுச் செவியின் நாட்பட்ட சீழ் கொண்ட அழற்சியில் பின் வருவன காணப் படுகின்றன. அவை: செவிப் பறைப் படலத்தில் நிலையான துளை, செவியிலிருந்து விட்டு விட்டோ, இடை விடாமலோ, சீழ் வெளிப் படல், கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளமை, நடுச் செவியின் சிலேட்டுமப் படலம் பெருமளவில் பாதிக்கப் பட்ட போது, வெளிப்பாடு சீதச் சீழுடன் உள்ளமை, எலும்புத் திசு பாதிக்கப் படுவதால், சிதைவு ஏற்படல் ஆகியன. சிதைவு நிலையில் செவியிலிருந்து வெளிப் படுவது கெடு நாற்றத்துடன் உள்ளது. இவ்வகைச் செவி அழற்சியில் முக நரம்புச் செயலிழப்பு, எலும்புச் சார்ந்த சீழ் நிலை போன்ற சிக்கல்கள் தோன்றலாம்.\n\nமருத்துவம். நாட்பட்ட சீழ் கொண்ட செவி அழற்சியைப் பராமரிப்பதில், பஞ்சு சுற்றப் பட்ட துழாவி கொண்டு, செவியைத் தூய்மை செய்தல், போரிக் கரைசல் மற்றும் சாலிசிலிக் ஆல்கஹால். ஃபியூரசில்லின் கரைசல் ஆகியவற்றை உட்சொட்டிடல், போரிக் அமில அல்லது சர்பனிலைடு தூளைச் செவியினுட் தூவல் ஆகியவை அடங்கும். வாரத்தில் ஓரிரு முறை உப்புக் கரைசலைச் செவியினுட் பாய்ச்சுதல் செவிப் பறைப் படலத்தின் துளைகளுக்குப் பயனளிக்கும். காண்க, காது வலி. —அ. கதிரேசன்"}}