{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xnntbs8k/", "data": {"id": "xnntbs8k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xnntbs8k/", "kind": "article", "headword": "சிறுநீரகக் காச நோய்", "romanization": "ciṟunīrakak kāca nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.306406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குருதி நாளங்கள் அல்லது நிண நீர் நாளங்கள் வழியாகக் காச நுண்ணுயிரிகள் உடலெங்கும் பரவிப் பிற உறுப்புகளையும் பாதிக்கின்றன.", "body_ta": "குருதி நாளங்கள் அல்லது நிண நீர் நாளங்கள் வழியாகக் காச நுண்ணுயிரிகள் உடலெங்கும் பரவிப் பிற உறுப்புகளையும் பாதிக்கின்றன. சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, அதைச் சிறுநீரகக் காச நோய் (renal tuberculosis) என்பர். ஆகவே சிறுநீரகங்கள், காச நுண்ணுயிரிகளால் நேரடியாகத் தாக்கப்படுவதில்லை; குருதி நாளங்கள் அல்லது நிண நாளங்கள் வழியாகவே பாதிப்படைகின்றன.\n\nசிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, அதன் விளைவாகச் சிறுநீரகக் குழல், சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் புற வழி, விந்தகம் ஆகியவையும் பெண்களில் பிறப்பு உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி சிறுநீர் பிரிதல், சிறுநீர் கழிக்கும் போது, தொடக்கத்திலோ, இறுதியிலோ வலி, சிறுநீரில் குருதி, வலி, எடை இழப்பு, சிறுநீரில் மாற்றங்கள். கையால் தொட்டுப் பார்க்கும் அளவுக்குச் சிறுநீரக வீக்கம், பிறப்புறுப்பு பாதிக்கப்படல் என்பன சிறுநீரகக் காச நோய் அறிகுறிகளாகும்.\n\nபிணிக்கூறு ஆய்வுகள்சிறுநீர் ஆய்வு. அமில நிலையும், சீழும், அல்புமினும், குருதிச் சிவப்பு அணுக்களும் சிறுநீரில் காணப்படும்.\n\nநுண்ணுயிரியல் ஆய்வு. சீல் நீல்சன் முறைப்படியோ, லோவன்ஸ்டீன் ஜென்சன் வளர்கள முறைப்படியோ ஆய்ந்தால், சிறுநீரில் காச நுண்ணுயிரிகளைக் காணலாம். முதல் முறையில் 10 நிமிடங்களிலும், அடுத்த முறையில் 6 வாரங்களிலும் ஆய்வு முடிவுகளைக் காணலாம். சிக்கலான நேரத்தில், ஆய்வு செய்ய வேண்டிய சிறுநீரைச் சீமைப் பெருச்சாளிக்குள் செலுத்தி, ஆறு வாரங்களுக்குப் பின் ஆய்வு செய்தால், முடிவுகள் தெரியும், மார்பு, வயிறு ஆகியவற்றின் எக்ஸ் கதிர்ப் படங்கள் எடுத்து, நுரையீரல் காச நோயைக் கண்டுபிடிக்கலாம். வயிற்றுப் படம் மூலம், பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களில் கால்சிய உப்புகள் படிந்திருப்பதைக் காணலாம்.\n\nசிவப்பணுக்கள் படியும் விகிதத்தைக் (E. S. R.) கணக்கிட வேண்டும். சளி ஆய்வு மிகவும் இன்றியமையாதது. சிறுநீர்ப் பை உள்நோக்கி (cystoscopy) கொண்டும் ஆய்வு செய்ய வேண்டும். சிறுநீர்ப் பிணிக் கூறாய்வும், சிரை வழி நீரக வரைவும் தேவைப்படும்.\n\nபிணிக் கூறாய்வில் (biopsy) சிறுநீரகம் மிலியரி நிலையில் அல்லது ரணக் குழி நிலையில் இருப்பது தெரிய வரும். சிறுநீரக அரும்புகள் (papillae) பாதிக்கப்பட்டிருக்கலாம். குழிகளும் (calyx) பெய்குழல் விரிவுகளும் (pelvis) சிதைந்து காணப்படும். கூம்புகளின் அடியில் மஞ்சள் நிறப் பொருள்கள் காணப்படும். பல்வேறு வடிவங்கள் கொண்ட ரணக் குழிவுகளும், புண்ணுடன் விரிவடைந்த பெய்குழல் விரிவுகளும் காணப்படுகின்றன. கால்சியப் பொருள் படிந்த சிறுநீரகப் பகுதிகளும் காணப்- படலாம். சிறுநீரகக் காச நோய் இருப்பதாக முடிவு செய்தால், காச நோய் எதிர் மருந்துகளான ஸ்ட்ரெப்ட்டோமைசின், ரிபோமைசின், INH ஆகியவற்றை உடனடியாக 12—18 மாதங்களுக்குக் கொடுக்க வேண்டும். ரிபோமைசின் மருந்துகள் கொடுக்கும் போது, இக்கால வரையறை மிகவும் குறையலாம். காச நோய் எதிர் மருந்துகளால் சீரடையாத சிறுநீரகங்களை அறுவை மூலம் அகற்றி விடலாம். —அ. கதிரேசன்"}}