{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xn3nhx9v/", "data": {"id": "xn3nhx9v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xn3nhx9v/", "kind": "article", "headword": "சாந்தூட்டல்", "romanization": "cāntūṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.799519+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மிகுந்த நீருடன் சிமெண்டைக் கலந்து நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் கலவை, சாந்துக் கரைசல் (grout) அல்லது சிமெண்ட் பால் எனப்படுகிறது.", "body_ta": "மிகுந்த நீருடன் சிமெண்டைக் கலந்து நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் கலவை, சாந்துக் கரைசல் (grout) அல்லது சிமெண்ட் பால் எனப்படுகிறது. சில வேளைகளில் சாந்துக் கரைசலில் மணல் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அது உலரும் போது, கடினத் தன்மை கிடைக்கும். சாந்துக் கரைசல் நீர்ம நிலையில் இருப்பதால், இன்றைக்கும் எந்திரத்தின் உதவியால் அழுத்தத்துடனும், வேகத்துடனும் தேவையான இடங்களில் ஊற்றப்படுகிறது.\n\nமிகப் பெரிய கட்டுமானம், அணை, சுரங்கம் இவற்றில் உள்ள சிறு கீறல், துளை, காற்று இடைவெளிகளில் சாந்துக் கரைசல் எந்திரத்தின் உதவியால் செலுத்தப்பட்டு, நீர் புகாமல் தடுக்கவும், பளு தாங்கும் ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பெரிய அணைக்கட்டுகளிலும், கம்பி வடங்கள் செல்லும் குழாய்களிலும், இணைப்புப் பகுதிகளை அடைக்கும் நிரப்புப் பொருளாகச் சாந்துக் கரைசல் பயன்படுகிறது. சில வேளைகளில் சாந்துக் கரைசலுடன் குறிப்பிட்ட கட்டுமானத்திற்குத் தேவையான வேதிப்பொருள்களையும் சேர்ப்பதுண்டு.\n\nசாந்துக் கரைசல் உலர்ந்த பின்னர் விறைப்புத் தன்மை அடைய வேண்டும். அதே சமயம், நீர் போல் பீறிட்டு, நுண் துளைகளிலும் உட்செலுத்த வசதியாக இருக்க வேண்டும். இவ்வாறு வேலை செய்ய எளிதானது சிமெண்ட் 1 பங்கும், நீர் 10 பங்கும் சேர்ந்த சாந்துக் கரைசல் ஆகும். பெருந்துளைகள் இருக்கும் போது, சிமெண்ட் 3 பங்கும், நீர் 4 பங்கும் சேர்ந்த கரைசலைப் பயன்படுத்தலாம். அணைக்கட்டுகளிலும், சுரங்கங்களிலும் அடிமானத்தை (foundation) வலிமைப்படுத்த சாந்தூட்டல் முறை (grouting) பயன்படுகிறது. வலிமையற்ற பாறைத் தளத்தில் எந்திரங்களின் உதவியால் நீண்ட துளைகள் போடப்பட்டு, அவை வேகத்தில் செலுத்தப்படும் காற்று, நீர் ஆகியவற்றால் தூய்மைப்படுத்தப்படும். பின்னர் பாதுகாப்பான அழுத்தத்துடன் (ஒரு ச.செ.மீ. பரப்பிற்கு 0.25 கி.கி. அழுத்தம்) சாந்துக் கரைசல் எந்திரங்களின் உதவியால் உட்செலுத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. சில வேளைகளில், இதே முறையில் அணைக்கட்டுச் சுவர்கள், பழங்காலக் கட்டடங்கள் போன்றவை வலிவூட்டப்படுகின்றன.\n\nசிமெண்ட் சாந்தூட்டல் கொடுக்க, காற்று அழுத்த எந்திரம், கலவை எந்திரம், அதிர்வு அளித்துக் கொண்டே இருக்கும் தொட்டி, இறைக்கும் எந்திரம், கரைசலைத் தேவையான இடத்தில் செலுத்தும் வளையக் கூடிய குழாய் முதலியன தேவை. தொடர்ந்து நீர்க் கசிவு உள்ள துளைகளில், சிமெண்ட் சாந்தூட்டல் முறையை முதலில் பயன்படுத்த இயலாது. அவ்விடங்களில் தார், தார்க்கீல் கலந்த சாந்துக் கரைசலைச் சாந்தூட்டலுக்கு முன்னர் பயன்படுத்த வேண்டும், தார் மற்றும் தார்க் கீல் செல்லும் போது, நீராவியுடன் சேர்த்துச் செலுத்தினால் கரைசல் முழுமையான நீர்ம நிலையில் சென்றடையும்.\n\nமிகப் பெரிய துளை, பள்ளங்களை நிரப்ப, சிக்கனமாகச் சாந்தூட்டல் செய்ய, சிமெண்ட் சாந்துக் கரைசலுடன் களிமண்ணைச் சேர்க்கலாம். அக்கரைசலை மிகு அழுத்தத்தில் உட்செலுத்த வேண்டியிருக்கும். பிற வகையான சாந்தூட்டல் முறைகளைப் பயன்படுத்த முடியாத போது மட்டுமே வேதிச் சாந்தூட்டல் பயன்படுத்தப்படுகிறது. இது கடல் நீருக்கு அடியில் உள்ள கட்டுமானங்கள், அடிமானங்கள் அல்லது தொழிற்சாலைகளில் அதிக வெப்பமும், அழுத்தமும் உள்ள இடங்களில் பயன்படுகிறது. சாந்தூட்டலில் சாந்துக் கரைசல், கோந்து அல்லது பசை போன்று உருவாகிறது. மிகக் குறைந்த நேரத்தில் உலர்ந்து நிறைவடையக் கூடியது.\n\nசிறிய அளவில், சாந்தூட்டும் துப்பாக்கியின் உதவியாலும் சாந்தூட்டப்படுகிறது. மிகுந்த காற்று அழுத்தத்துடன் நீரும், சிமெண்ட்டும் இத்துப்பாக்கியினுள் செலுத்தப்படும். தேவையான இடங்களில் சிறு துளைகள் வழியே மிகு வேகத்துடன் பீறிட்டடிக் கும் முறையில் சாந்து உட்செலுத்தப்படும் முறை எளிதானது. —ஏ.எஸ்.எஸ். சேகர்"}}