{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xg56zc6c/", "data": {"id": "xg56zc6c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xg56zc6c/", "kind": "article", "headword": "உத்தரகாண்டம்", "romanization": "uttarakāṇṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.585257+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தரகாண்டம் என்பது இராமாயணத்தில் இராவண வதம் முடிந்து அயோத்தியில் இராமன் முடிசூடிய பின்னர், நடந்த நிகழ்ச்சிகளை விளங்க எடுத்துக் கூறும் நூலாகும்.", "body_ta": "உத்தரகாண்டம் என்பது இராமாயணத்தில் இராவண வதம் முடிந்து அயோத்தியில் இராமன் முடிசூடிய பின்னர், நடந்த நிகழ்ச்சிகளை விளங்க எடுத்துக் கூறும் நூலாகும். இது கடவுள் வணக்கம், மெய்ப்பொருள் வணக்கம், அவையடக்கம், நூல் என்னும் அமைப்புடன் காணப்படுகிறது. கடவுள் வணக்கப் பாடல் இராமாவதாரத்துக்கு விளக்கம் தருவதாகவும், மெய்ப்பொருள் வணக்கம் பரம்பொருளை வணங்குவதாகவும் அமைந்துள்ளன. நூலுள் இடம்பெறும் படலங்கள், பாடல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை பதிப்பிற்குப் பதிப்பு வேறுபடுறது.\n\nஇராமாயண உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகவே நெடுங்காலமாகக் கருதப்பெற்று வந்தபோதிலும், அதனை இயற்றியவர் யார் என்பதில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதுகாறும் வெளிவந்துள்ள உத்தரகாண்டப் பதிப்புகளில் அத்நூலாசிரியர் பெயர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும், ‘மகாகவி ஒட்டக்கூத்தர்’ என்றும் இடம்பெற்றுள்ளமை அறியலாம். இலக்கிய உலகில் அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், சிறப்புப் பெயரகராதி போன்ற நூல்கள் ஒட்டக்கூத்தரே உத்தரகாண்டம் பாடினார் என்று குறிப்பிடுகின்றன. புலவர் புராணத்தில் இக்கருத்து செய்யுள் வடிவம் பெற்றுள்ளது. ‘இராமாயணத்தில் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் பாடினதென்பது உலகப்பிரசித்தம்’ என்பர் ‘கம்பநாடார்’ என்னும் நூலின் ஆசிரியர் செல்வக் கேசவராய முதலியார். பெரும்பாலான இலக்கிய வரலாற்று ஆசிரியர் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.\n\n‘செங்குந்தர் பிரபந்தத் திரட்டு’ என்னும் தொகுப்பு நூலின் ஆராய்ச்சியுரையில் மு. இராகவையங்கார் ‘இராமாயண உத்தரகாண்டம் கூத்தராற் பாடப்பட்டதென்பதற்குக் கன்ன பரம்பரை தவிர வேறு தக்க ஆதரவொன்றும் இதுவரை கிடைத்திலது’ என்ற கருத்தினோடு, கம்பருடன் இகலி நின்ற வாணியன் நாதன் என்பானே உத்தரகாண்டம் பாடியிருக்கலாம் என்ற கருத்தையும் உடன் கூறியுள்ளார். இவ்வாய்வாளர், ‘பூணி லாவும்’ எனத் தொடங்கும் சோழமண்டல சதகச் செய்யுளில் ‘கழலபயன் சபையிற் பயிலுத் தரகாண்டம், வாணிதாதன் அரங்கேற்ற வைத்தார் சோழ மண்டலமே’ என்று இடம்பெறும் ஈற்றடிகளைக் காட்டாகக் காட்டுவர். வாணியன்தாதன் என்னுஞ் சொல்லே மருவி வாணிதாதன் ஆயிற்று என்பது ஆய்வாளர் கருத்தாகும். வாணிதாதன் என்னுஞ் சொல் சில பதிப்புகளில் வாணிதாசன் என இடம்பெறுவது கொண்டு, கலைமகள் அருள்பெற்ற ஒட்டக்கூத்தரே வாணிதாசன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று கூறுவாரும் உண்டு. ‘கம்பர் பாடியது பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலுள்ள ஆறு காண்டங்களே என்பதும் பின்வந்த காண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினார் என்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனது அவைக் களத்தே அரங்கேற்றப்பட்டது என்பதும் சோழ மண்டல சதகப் பாடலால் தெளிவாகின்றன’ என்று ரா. இராகவையங்கார் கருத்துரைப்பர்.\n\nஉத்தரகாண்டத்தில் இடம்பெறும் அகச்சான்றுகள் வாயிலாக இந்நூலாசிரியர் குறித்தும், நூலின் சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலாசிரியர் அவர் காலத்துச் சிறந்து விளங்கிய சைவ வைணவ சமயங்கள் இணக்கமுற வாழ்தல் வேண்டும் என்னும் பேருள்ளம் கொண்டவர். சிவபெருமானை, ‘மலரோனுஞ் செந்தாமரைக் கண் திருமாலும் ஆனாய் போற்றி, சிவ போற்றி’ எனப் போற்றும் போற்றியுரையிலும், திருமாலைச் ‘சிவன் அயனாகி அலகிலா விளையாட்டாடுவாய் அகண்ட மாயினாய் யாருனை யறிவார்’ எனப் பாராட்டும் பாராட்டுரையிலும் புலவரின் சமயப் பொதுநோக்கு விளக்கமுறுகிறது.\n\nபுலவர் எழுதிச் செல்லும் கருத்துகளும், இலக்கியத் தொடர்களும் அவர்தம் பன்னூற் புலமையை எடுத்துக் காட்டுவனவாகும். ‘கமலம் ஒத்த சரணப் பெருவிரலால் ஒல்கி நின்று நிலங்கீறி’, ‘ஆலகாலம் அமிழ்தாக அடக்கி வைத்த மணிமிடற்றன்’, ‘மற்றவரையெல்லாம் களம்படக் கொன்று’ போன்ற தொடர்கள் முறையே அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை முதலாய இலக்கியங்களை நினைவூட்டுகின்றன. ‘ஒருதலையா னின்னாது காமமென உன்னான்’, ‘மானத்தாற் கவரிமாக்கள் சாதலைக் கண்டு தேனாய்த் தளர்ந்தொரு மயிருக்காக’ என்னும் தொடர்கள் திருக்குறளை நினைவூட்டுவன. உத்தர காண்டத்தைப் பயில்வார் அந்நூலாசிரியர் கம்பராமாயண நூற்பயிற்சி மிக்கார் என்பதை உய்த்துணரலாம். ‘அண்ணலும் அவனியிற் பிறந்த மங்கையும் மாறிக் கண்வலைப்பட்டு மனங்களின் மாறினர் புகுந்து’, ‘ஏதமுறு பழியூட்டி இப்பிறப்பில் எனையொழிய மாதரையென் மனத்தாலுந் தொடேனென்று வரந்தந்த காதலை’, ‘அருத்தி மாதவத்துக்கு இப்போது அழிவொன்றுமிலையே,’ ‘தாயுரை தலைமேற் கொண்டு’ போன்ற தொடர்கள் கம்பராமாயணத்தை நினைவூட்டுகின்றன. தேவர்கள் வைகுந்தம் சென்று திருமாலைக் கண்டு துதிக்கும் பாடல்கள் யாவுமே ‘யாருனை யறிவார்’ என்னும் மகுடத்தைக் கொண்டன. இப்பகுதி கம்பராமாயணத்தில் யுத்தகாண்டம் நாகபாசப்படலம் (பாடல்கள் 251—261) ‘யாரிவ் வதிரேக மாயையறிவார்’ என்றுள்ள பகுதியை அப்படியே அடியொற்றிச் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.\n\nபாடல்களை அடுக்கிச் சொல்வது இந்நூலாசிரியர் போக்காகக் காணப்படுகிறது. இலக்குவன் சீதையைக் கானகத்தே விட்டுத் திரும்பியபோது அவள் தன் நிலையை எண்ணி வருந்தி ‘விதியேயோ விதியேயோ’ எனக் கதறும் பாடல்கள், சூர்ப்பணகை அரற்றும்போது ‘அண்ணாவோ அண்ணாவோ’ என அரற்றிய பாடல்களின் நடையை ஒத்துள்ளன. வருணனையைக் கூறுமிடத்துப் பல பாடல்களைக் குளகமாகக் கொண்டு முடிப்பதும் இந்நூலாசிரியர் இயல்பாகும்.\n\nபலவகையான சிறந்த உவமைகளைக் கையாண்டு கருத்து விளக்கம் தருவது புலவரின் சிறப்பியல்பாகும். ‘தூய ஞானச் சுடர்விளக்குத் தோன்றத் தோன்ற நில்லாத மாயை யெனவும், அறத்தினெதிர் மண்டும் வினைமண் டிலமெனவும்’ தத்துவக் கருத்துகளை உவமையாக்குதல், ‘வெஞ்சினம் உருக் கொண்டன்ன’ ‘வஞ்சமில்லா யோகியர்தம் மனம்போலத் தெளிந்து, மங்கையர்தம் நெஞ்சுபோல் மிக ஆழ்ந்து’ என நுண்பொருள்களை உவமையாக்குதல், ‘நீரொழியப் பால் நுகரும் அன்னம் போல்’ ‘செவியில் கனல் காய் நாராசம் நுழைந்தென’, ‘கன்றிழந்த பசுப் போல்’ என மரபாகப் பழகிய உவமைகளைக் கையாளுதல், ‘அரம்பைக் களிமேவு ஊசியின்’ ‘பூனை வாய் அகப்பட்ட கிளிபோல’ எனப் பழமொழிகளை உவமையாக்குதல், ‘உறுதுயரால் நரகத்தினிடையே கிடந்தழுந்தி நடுங்கும் உயிர்போல் நடுங்குவரால்’ என நம்பிக்கையை உவமையாக்கல் போன்றன இந்நூலுள் இடம்பெற்றுள்ளன.\n\nஉத்தரகாண்டப் பாடல்கள் பொதுவான நடையில் அமைந்துள்ளமை காணலாம். அவை பழகு தமிழ்ப் பாவலரின் பாக்கள் என்பதனை உணர்த்தும். ‘உங்களுக்கும் உம்புத்திர பௌத்திரர்க்கும்’ ‘ஓதவோதப் போதங் கெட்டு அபோதமானது ஓங்கியதே’, ‘எம்பெருமான் உரைத்தது எமக்கு இதமல்லாமல் அகிதமாமோ’, ‘மாதா குலத்தின் வழிநின்றும் பத்தாவாக வசீகரித்து’ என்பன போல இந்நூற் பாடல்கள் வடமொழிக் கலப்பு நடையினவாய்க் காணப்படுகின்றன. இராவணன் ‘தசக்கிரீவன்’ என்றும், இராமன் ‘தசரதராமன்’ என்றும் பலவிடங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். ‘வெய்யாள் ஏவக் காடணைந்த கருங்களிறு’ ‘இன்று போய் நாளை வாவென்று இயம்பிய இறைவன்’ என்று முன்னிகழ்ந்த நிகழ்ச்சிகள் அடிப்படையில் இராமன் சுட்டப்படுகிறான்.\n\nஉத்தரகாண்டம் முன்னைய காண்டங்களின் விளக்கமாகவும் அமைகிறது. ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலத்தில் இடம்பெறும் ‘பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி’ எனத் தொடங்கும் பாடல் சூர்ப்பணகை இராமனிடம் தன்னைத் தெரிவிப்பதைக் குறிப்பதாகும். பிரமன் புதல்வன் புலத்தியன்; புலத்தியன் மகன் விச்சிரவசு; விச்சிரவசு மகள் சூர்ப்பணகை, இக்குலமுறைக் கொடிவழி அடிப்படையில் சூர்ப்பணகை ‘பூவிலோன் புதல்வன் மைந்தன் மகள்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். உத்தரகாண்டத்து இடம்பெறும் புலத்தியப் படலம், இராவணன் பிறப்புப் படலம் ஆகியவற்றை அறிந்திருந்தாலன்றி இல்விளக்கம் விளங்க வாய்ப்பில்லை. ‘முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவனான செங்கையோன்’ என்றது குபேரனை. இவனைப் பற்றியும் இவன் சிவன் தோழன் என்பது பற்றியும் இராவணன் பிறப்புப் படலத்தால்தான் அறிய முடியும், ‘திக்கின் மாவெலாம் தொலைத்தான்’ இராவணன் என்பது திக்குவிசயப் படலத்தால் அறியப்படுகிறது.\n\nஉலகியற் கருத்துகள், அறக் கருத்துகள், அரச நீதிக் கருத்துகள் பல இந்நூலுள் பரந்து கிடக்கின்றன. ‘பெண்பெறுகை தனைப்போலப் பெரிய துயர் தானுண்டோ?’ என மயன் கூறும் உலகியற் கூற்று எல்லோரும் எக்காலத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்க பேருண்மையாகும். ‘அறம் வழுவாமல் பார்த்துச் செய்வ செய்; பழிபடு காரியஞ் செய்யேல்’ என்று குபேரன் இராவணனுக்குக் கூறும் அறம், புலவர் உலகோர்க்குக் கூறும் அறமாகும். ‘முறை செய்தல் இராச தன்மம்’ என மன்னர்க்கு நீதி சுட்டுவர். குடிக்காப்புச் செய்யாத அரசரை ‘மூடர்’ என்றும், அறம் பிறழ்ந்து மறஞ் செய்யும் மன்னரைப் ‘பாவியர்’ என்றும் கடிந்துரைப்பர்.\n\nஉத்தரகாண்டம் மேற்கண்ட பல சிறப்புகளைக் கொண்ட பெட்டகமாகத் திகழ்கிறது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உத்தரகாண்டத்துள் இடம் பெறும் ‘மக்கள் இழந்த இடும்பையினும்’ எனத் தொடங்கும் அவலவுணர்ச்சிப் பாடலைத் தம் உரை மேற்கோளாகக் காட்டியுள்ளமை இந்நூலின் பெருஞ்சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இரா.செ."}}