{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x4x22pfm/", "data": {"id": "x4x22pfm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x4x22pfm/", "kind": "article", "headword": "உகந்த அளவு நிறுவனம்", "romanization": "ukanta aḷavu niṟuvaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.828959+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தொழிலமைப்புகளில் நிறுவனம் என்பது வரையறுக்கப்பட்ட முறையில் தொழில்நுட்ப விதிகளுக்கேற்ப உற்பத்திக் காரணிகளை உற்பத்திப்பொருளாக மாற்றுவதாகும்.", "body_ta": "தொழிலமைப்புகளில் நிறுவனம் என்பது வரையறுக்கப்பட்ட முறையில் தொழில்நுட்ப விதிகளுக்கேற்ப உற்பத்திக் காரணிகளை உற்பத்திப்பொருளாக மாற்றுவதாகும். அத்தகைய நிறுவனம் பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் நுட்ப அலகாகும். பலவகைத் தொழில் நிறுவனங்களுள் உகந்த அளவு நிறுவனம் (Optimum Firm) மிகச் சிறப்புடையது. உகந்த அளவு தொழில் நிறுவனத்தை அறிந்து கொள்ள, பலவகைத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் முறைகளை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அவை: (1) நிறைவுப் போட்டி (Perfect Competition) நிறுவனம், (2) முற்றுரிமை (Monopoly) நிறுவனம், நிறை குறைப் போட்டி (Imperfect Competition) நிறுவனம் முதலியன.\n\nதொழில் நிறுவனங்கள் அங்காடியில் நிலவும் சூழ்நிலைக்கேற்பத் தங்கள் பொருள்களின் விலையை வரையறுக்கின்றன. முற்றுரிமை அங்காடிவில் ஒரே ஓர் உற்பத்தியாளரே இருப்பர். அவர் அந்தப் பொருளின் அளிப்பைக் கட்டுப்படுத்துவதால், அதன் விலையையும் வரையறுப்பர். எ–டு: இரயில்வே போக்குவரத்து மைய அரசின் முற்றுரிமை பெற்ற நிறுவனமாக இருப்பதால் அரசு விரும்பியபடி கட்டண மாற்றங்களைச் செய்கிறது.\n\nநிறைவுப் போட்டி அங்காடியில் பல தொழில் நிறுவனங்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அவை தடையின்றி உற்பத்தியில் ஈடுபடவும் உற்பத்தியை நிறுத்தவும் இயலும். எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. இச்சூழ்நிலையில் ஒரே விலைதான் நிலவ முடியும். எனவே, அவ்விலை வரையறையின் மூலம் உச்ச ஆதாயம் பெற உற்பத்தியளவை மாற்றியமைத்துக் கொள்கின்றன. முற்றுரிமை அங்காடியில் உச்ச ஆதாயம் பெற விலையை மாற்ற முடியும். இவ்விரண்டு வகையான அங்காடிகளிலும் வாங்குபவர்களை இழுப்பதற்கென விற்பனைச் செலவு எழாது. நடைமுறையில் பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் இவ்விரண்டு அங்காடிகளுக்குமிடையே அதாவது, நிறைகுறைப் போட்டி அல்லது முற்றுரிமைப் போட்டிச் சூழ்நிலையில் செயற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வாங்குபவர்களைக் கவரப் பண்டத்தின் தன்மையில் மாற்றங்களை உருவாக்குவது மட்டுமன்றி, விளம்பரம், பரிசுப் பொருள்கள் வழங்குதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.\n\nஇவ்வாறு பல்வேறுபட்ட தொழில் நிறுவனங்கள் உச்ச ஆதாயத்தையடையும் குறிக்கோளுடன் செயற்படுகின்றன. இக்குறிக்கோளை அடையும் நிலை ஒரு நிறுவனத்தின் சமநிலை (Equilibrium) எனக் கருதப்படுகிறது. அதாவது, வரையறுக்கப்பட்ட விலையில் உற்பத்தியளவை மிகையாக்க அல்லது குறைக்க நோக்கமற்றதாக அந்த நிறுவனம் செயற்பட வேண்டும். ஆதாயம் மொத்த வருவாய்க்கும் மொத்தச் செலவுக்குமிடையே உள்ள வேறுபாட்டிலிருந்து பெறப்படுகிறது. உச்ச ஆதாயத்தைக் கணக்கிடப் பல்வேறுபட்ட உற்பத்தி அளவுகளில் ஆதாயத்தை ஆய்வு செய்யுங்கால் உச்ச ஆதாயத்தில் இறுதிநிலைச் செலவு அந்நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்க்குச் சமமாக இருக்கும் என்பது பெறப்படுகிறது. இறுதிநிலைச் செலவு இறுதிப் பண்டத்தின் விற்பனையிலிருந்து பெறுகிற வருவாய் ஆகும். இறுதிநிலை வருவாய் இறுதிநிலைச் செலவைவிட அதிகமாக இருப்பின் உற்பத்தியை மிகுதிப்படுத்துவதன் மூலம் ஆதாயத்தை மிகையாக்க இயலும். இறுதிநிலை வருவாய் இறுதி நிலைச் செலவைவிடக் குறைவாக இருப்பின், உற்பத்தியைக் குறைப்பதன் மூலமே ஆதாயத்தை மிகுதியாக்க இயலும். இறுதிநிலை வருவாய் = இறுதி நிலைச் செலவு என்ற நிலையில் நிறுவனத்தின் ஆதாயம் உகந்த அளவாக இருக்க வேண்டுமென்பதன்று. இவ்விதி நிருவாகத்தை வழிநடத்தும் கருவியே. நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளவும் அதனைச் சுருக்கமான முறையில் கூறவும் இச்சமன்பாடு உதவி செய்கிறது. இதுவே பொருளாதாரத் திறன் கண்ணோட்டத்தில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றும் நிறுவனம்.\n\nஅங்காடியில் வரையறுக்கப்பட்ட விலை நுகர்வோருக்கு நன்மை பயப்பதாக அமைவது அங்காடியில் நிலவும் போட்டியின் தன்மையைப் பொறுத்தது. நிறைவுப் போட்டியில் விலை ஆடம்சுமித்தின் காணமுடியாத சக்தியின் (Invisible hand) மூலம் அதாவது, அங்காடித் தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் நிலையில் முடிவு செய்யப்படுகிறது. நிறுவனங்களுக்கிடையே பண்டத்தின் விலை (சராசரி வருவாய்) மாறாதிருப்பதால் விலை இறுதிநிலை வருவாய்க்குச் சமமாக உள்ளது.\n\nகுறுகிய காலத்தில் நிறைவுப் போட்டி நிறுவனம் ஆதாயத்தையோ இயல்பு ஆதாயத்தையோ இழப்பையோ அடையலாம். ஆனால், நீண்டகாலத்தில் புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையில், எல்லா நிறுவனங்களும் சமநிலையை அடைய இயல்பு ஆதாயத்தையே பெறமுடியும். ஏனெனில், குறுகிய காலத்தில் இயல்பு ஆதாயத்தை விட ஆதாயம் மிகுதியாகப் பெறும் பொழுது, புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதால் உற்பத்திக் காரணிகளின் விலை மிகுதியாவதாலும் பண்டத்தின் அளிப்பு மிகுதியாவதாலும் முறையே உற்பத்திச் செலவு கூடும்; விலை குறையும். இவ்வாறாகத் தடையற்ற நுழைவின் காரணமாக மிகுதியான ஆதாயம் களைந்தெறியப்படுகிறது. சாதகமான சூழ்நிலை காரணமாகவே நிறுவனம் தற்காலிகமாக ஆதாயம் பெற முடியும். குறுகிய காலத்தில் இழப்பு நிகழும்போது, நிறுவனங்கள் வெளியேறுவதால் அளிப்புக் குறைந்து விலை உயர்ந்து செலவிற்குச் சமமாகும்.\n\nநீண்ட கால நிறைவுப் போட்டியில் ஆதாயமிருக்காது. சமநிலையில் ஆதாயம் உச்சமாக இருக்கும் எனக் கருதப்படுகிற சூழ்நிலையில் ஆதாயம் இல்லையெனவும் கருதலாம். இவ்விரு முரண்பட்ட கருத்துகளும் புரிந்துகொள்ள வேண்டியனவாகும். அதாவது, சமநிலையில் உச்ச ஆதாயம் வெறுமையாக (Zero) இருந்தாலும், அது இழப்பை விட மேலானதாகும். அவ்வாறின்றி இழப்பாக இருந்தாலும் அது உண்மையாக இருக்கும். அங்காடி நடவடிக்கைகள் காரணமாக நிறைவுப் போட்டி நிறுவனங்கள் நீண்டகாலத்தில் சமநிலையில் மிகக்குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் அதிகத் திறமை வாய்ந்தனவாக இருக்கும். இவ்வாறாக உண்மைச் செலவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உயர் உகந்த அளவு நிறுவனங்கள் எனச் சொல்லப்படுகின்றன.\n\nஉகந்த அளவு நிறுவனத்தின் அளவு தொழில்களுக்குத் தொழில் மாறுபட்டிருக்கும். வேளாண்மைத் துறையில் இது சிறியதாகவும் பேரளவுத் தொழில்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரியதாகவும் இருக்கும். எனவே, குறிப்பிட்ட அளவில் உற்பத்தி பெருகும்பொழுது சராசரிச் செலவு குறையும். பேரளவுச் சிக்கனமுறை காரணமாக அதன் பின்னர்ச் சராசரிச் செலவு மிகும். இவ்வாறாக நிறைவுப் போட்டியில் எல்லா நிறுவனங்களும் உகந்த அளவு நிறுவனமாக இருக்கும்.\n\nநிறைவுப் போட்டி தவிர்ந்த பிற சூழ்நிலைகளில் நிறுவனத்தின் உற்பத்தி எல்லோருக்கும் உகந்த அளவாக இருப்பதில்லை. அது உற்பத்தியாளருக்கு மட்டுமே உகந்ததாகவும் நுகர்வோரிடமிருந்து அதிக விலைபெறும் நிறுவனமாகவும் திகழ்கிறது. பிற நிறுவனங்கள் நீண்ட காலச் சமநிலையில் இயல்பு ஆதாயத்தை அடையும் சூழ்நிலையில் அது உச்சமாக இருக்குங்கால், சராசரிச் செலவு உண்மையானதாக இருப்ப-\n\nபடம்–1 நிறைவுப்போட்டியின் நிறுவனம்\n\nதில்லை (படம்–2) அதனால் இத்தகைய நிறுவனம் திறமைக்குறைவாகச் செயற்படுவதாகக் கருதமுடியாது. என்.மா.\n\nதுணை நூல்கள்\n\nBain, J.S., Price Theory, John Wiley and Sons, New York, 1948.\n\nNorman, F., Kelser, Introductory Economics, John Wiley and Sons, New York, 1963.\n\nKovisto, W.A., Principles and Problems of Modern Economics, Asia Publishing House, London, 1957.\n\nPaul, A., Samuelson, Economics – An Introductory Analysis, Mc Graw Hill Book Company, New York, 1961."}}