{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x4gkm6dx/", "data": {"id": "x4gkm6dx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x4gkm6dx/", "kind": "article", "headword": "அசிட்டால்டிஹைடு", "romanization": "aciṭṭālṭihaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.753534+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acetaldehyde):[குறியீடு CH3 CHO.] ஆல்டிஹைடு இனத்தில் இரண்டாவது.", "body_ta": "(Acetaldehyde):[குறியீடு CH3 CHO.] ஆல்டிஹைடு இனத்தில் இரண்டாவது. சர்க்கரை வகைகள் ஆல்கஹால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிஹைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு. தொழில் முறையில் அசிட்டால்டிஹைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்கஹாலுக்கு ஹைடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். ரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம். அசிட்டால்டிஹைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21°). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124° கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH3 CHO)3 மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது. இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிஹைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன.\n\nஅசிட்டால்டிஹைடிலிருந்து செயற்கை ரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது."}}