{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wgwwp6fk/", "data": {"id": "wgwwp6fk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wgwwp6fk/", "kind": "article", "headword": "நைட்ரஜன் சுழற்சி", "romanization": "naiṭrajaṉ cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.959282+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இயற்கை மற்றும் வேதி முறைகளால், காற்றிலுள்ள நைட்ரஜன் நிலைப் படுத்தப் பட்டுக் கனிம, கரிம நைட்ரஜன் சேர்மங்களாக மாறி, மாறி மாற்றம் அடைவதை இது குறிக்கிறது.", "body_ta": "இயற்கை மற்றும் வேதி முறைகளால், காற்றிலுள்ள நைட்ரஜன் நிலைப் படுத்தப் பட்டுக் கனிம, கரிம நைட்ரஜன் சேர்மங்களாக மாறி, மாறி மாற்றம் அடைவதை இது குறிக்கிறது. காற்றிலுள்ள நைட்ரஜன் நிலைப் படுத்தப் படுவதால், அதன் அளவு குறையும்; அப்போது நிலைப் படுத்தப் பட்ட நைட்ரஜன் சேர்மங்கள், உயிர் மற்றும் வேதி மாற்றங்களால் சிதைவடைந்து, நைட்ரஜன் வளிமம் வெளிப் படும். இதனால், வெளிப் படும் நைட்ரஜன் காற்றில் கலக்கிறது. இதனால், காற்றில் நைட்ரஜனின் அளவு மாற்றமடையாமல், ஒரே சம நிலையில் உள்ளது. இவ்வாறு, நைட்ரஜன் அடையும் பல விதச் சுழற்சி மாற்றங்களுக்கு நைட்ரஜன் சுழற்சி (nitrogen cycle) என்று பெயர். இதில் அம்மோனியாவாக்கம் (ammonification), அம்மோனியா உட்கவர்வு (ammonia assimilation), நைட்ரோ ஏற்றம் (nitrification), நைட்ரேட் உட்கவர்வு (nitrate assimilation), நைட்ரஜன் நிலைப் படுத்தல், நைட்ரஜன் வெளிப் படுத்தல் ஆகிய முறைகள் அடங்கும்.\n\nஇயற்கையில் நைட்ரஜன் பல்வேறு கனிமச் சேர்மங்களாகவும் (N₂, N₂O, NH₃, NO₂, NO₃) கரிமச் சேர்மங்களாகவும் .(அமினோ அமிலங்கள், நியூக்ளியோடைடுகள், அமினோ சர்க்கரைகள், வைட்டமின்கள்) உள்ளன. இவ்வுலகில் நிகழும் தொடர்ச்சியான உயிர், வேதி மாற்றங்களால், நைட்ரஜன் சேர்மங்கள் ஒரு வடிவிலிருந்து வேறொன்றாக மாறிக் கொண்டே உள்ளன. இந்தப் பரிமாற்றங்கள் மண்ணில் சத்துக் குறைபாட்டையும், மண் கேடுறுவதையும் தடுக்கின்றன. படத்தில் மண்–நீர் நிலையில் நைட்ரஜன் சேர்மங்களின் பொதுவான பரிமாற்றங்கள் காட்டப் பட்டுள்ளன. இதில் காட்டப் பட்டுள்ள பொதுவான வினைகளை விடச் சிக்கலான நிகழ்வுகள் நடக்கின்றன.\n\nநைட்ரஜன் சுழற்சி. இயற்கை மற்றும் வேதி மாற்றங்களால் உருவாக்கப் படும் நைட்ரஜன் சேர்மங்களின் சிறு பகுதி நைட்ரஜனை விடுவிக்கும் பாக்ட்டீரியாக்களால் வெளியேற்றப் படுகிறது. இவ்வாறு வெளியேற்றப் படும் நைட்ரஜன் வளிமம் காற்றில் கலக்கிறது. கனிம நைட்ரஜன் சேர்மங்களின் பெரும் பகுதி தாவரங்களில் வேர்கள் மூலம் உள்ளேற்கப் படுகிறது. தாவரங்களில் நிகழும் உயிர் வேதி மாற்றங்களால், அவை நைட்ரஜனைப் பெற்றுள்ள கரிமச் சேர்மங்களாக மாற்றப் படுகின்றன. இவற்றுள் புரதங்கள் என்பவை சிறப்பானவை.\n\nமனித வளர்ச்சிக்குப் புரதங்கள் இன்றியமையாதவை. தாவரப் புரதங்களை விலங்கினங்கள் உட்கொண்டு வளரும் போது, அவற்றுள் நிகழும் உயிர் வேதி வினைகளால் மாற்றமடைந்து, வேறு பல கரிமச் சேர்மங்களாகின்றன. விலங்கினங்களின் கழிவுப் பொருள்களில் நைட்ரஜன் கரிமச் சேர்மங்கள் உள்ளன. அவை மண்ணில் சேர்கின்றன. விலங்குகளும், தாவரங்களும் இறந்த பின் புவியின் மேல் நைட்ரஜன் சேர்மங்கள் எஞ்சியுள்ளன.\n\nஇவ்வாறு, மண்ணில் சேரும் நைட்ரஜன் சேர்மங்களின் ஒரு பகுதி அம்மோனியாவாக்கும் பாக்ட்டீரியாக்களால் எளிதில் நீரில் கரையக் கூடிய அம்மோனியச் சேர்மங்களாக மாற்றமடையும். இந்த அம்மோனியாவின் ஒரு பகுதி தாவரங்களால், உணவுப் பொருளாக உட்கொள்ளப் படுகிறது. கரிம நைட்ரஜன் சேர்மங்களின் மற்றொரு பகுதி நைட்ரஜனை விடுவிக்கும் பாக்ட்டீரியாக்களால், வினையுற்று நைட்ரஜன் வெளியேற்றப் படுகிறது. இது காற்றில் கலக்கிறது. அம்மோனியா உப்புகள் ஒரு பகுதியும், நைட்ரஜனை வெளியேற்றும் பாக்டீரியாக்களால் வினையுற்று, நைட்ரஜன் வெளியேற்றம் நிகழ்கிறது.\n\nநுண்ணுயிரிகள் நைட்ரஜன் சேர்மங்களைச் சிதை வடையச் செய்ய, மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நைட்ரஜன் மூலமாக, அவற்றைப் பயன் படுத்தல் அதாவது, அம்மோனியாவாக மாற்றமடையச் செய்தல்;\n\n2. சில நைட்ரஜன் சேர்மங்களை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தல், சான்றாக NH₃ஐ NO₂ ஆக ஆக்சிஜனேற்றம் செய்தல் மற்றும் NO₂ என்பது NO₃ என்பதாக மாற்றமடைதல்;\n\n3. ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் அல்லது தேவைக்குக் குறைவாக கிடைக்கும் நிலைகளில், சில நைட்ரஜன் சேர்மங்களைக் (NO₃) கடை நிலை எலெக்ட்ரான் ஏற்பிகளாகப் (electron acceptors) பயன் படுத்தல் ஆகியன. மேற்குறிப்பிடப் பட்ட இம்மூன்று வளர் விதை மாற்ற நிலைகளும், நைட்ரஜன் சுழற்சியின் பல்வேறு வழிகளை உள்ளடக்கி உள்ளன. —த. தெய்வீகன் —வ. சீனுவாசன்"}}