{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wef8ckst/", "data": {"id": "wef8ckst", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wef8ckst/", "kind": "article", "headword": "நெர்ன்ஸ்ட், வால்தர் ஹெர்மான்", "romanization": "nerṉsṭ, vāltar hermāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.169159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் சிறந்த அறிவியலாராவார்; நவீன இயற்பிய–வேதியியல் பிரிவிற்கு அடி கோலியவர்களில் இவரும் ஒருவர்.", "body_ta": "ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் சிறந்த அறிவியலாராவார்; நவீன இயற்பிய–வேதியியல் பிரிவிற்கு அடி கோலியவர்களில் இவரும் ஒருவர். வால்தர் ஹெர்மான் நெர்ன்ஸ்ட் (Walther Hermann Nernst) 1864ஆம் ஆண்டு பிரிசென் என்னும் இடத்தில் ஜுன் திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். நெர்ன்ஸ்ட் உருவாக்கிய வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி 1920 ஆம் ஆண்டின் வேதியியலுக்குரிய நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக அமைந்தது. தனிச் சுழி வெப்ப நிலைக்கு மேல் அனைத்துப் பருப்பொருளும் (matter) ஒழுங்கற்ற இயக்கத்தைக் கொண்டவையாக, அனைத்து ஆற்றலையும் இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.\n\nஜூரிச், கிராஸ் (ஆஸ்திரியா), ஊர்ஸ்பெர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்ற பின்னர், 1887ஆம் ஆண்டு வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட் என்னும் வேதியலாரின் கீழ் ஆய்வு உதவியாளராகச்சேர்ந்தார். ஆஸ்ட்வால்ட் ஜேக்கோபஸ் வாண்ட் ஹாஃப் மற்றும் சுவாண்ட்டே அர்ரேனியஸ் ஆகியோருடன் இணைந்து, இயற்பிய வேதியியல் பிரிவில் சிறப்பான பங்காற்றிக் கொண்டிருந்தார். 1890இல் காட்டின்ஜன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. 1905ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1924–1933இல் அங்கிருந்த ஆய்வு இயற்பியல் கழகத்தின் (experimental physics) இயக்குநராகப் பணியாற்றினார். இவர்தம் ஆய்வுகளுள் கால்வனோ மின் கலங்கள் பற்றிய கோட்பாடு, வேதிச் சம நிலையின் வெப்ப இயக்கம், உயர் வெப்ப நிலையில் ஆவிகளின் பண்புகள், குறைந்த வெப்ப நிலையில் திண்மங்களின் பண்புகள், ஒளி வேதியியலின் வினை வழி முறை ஆகியன அடங்கும். இவை தொழிலகப் பயன் மிக்கவை.\n\nநெர்ன்ஸ்ட் பயனுறு அறிவியலிலும், சிறப்பான ஈடுபாடு கொண்டிருந்தார். மேம்படுத்தப் பட்ட மின் விளக்கையும், மின்னணுத் தத்துவத்தில் செயற் படும் பியானோவையும் இவர் கண்டு பிடித்தார். கோட்பாட்டு வேதியியலில் (theoretical chemistry) இவர் எழுதிய நூல் 1893ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. இவர் தம் வாழ்நாளின் இறுதி நாள்களில், வான் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகளையே மேற்கொண்டார். நெர்ன்ஸ்ட் ஜெர்மெனியில் முஸ்கவ் என்னும் இடத்தில் 1941ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் காலமானார். —த. தெய்வீகன்"}}