{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wcznrdj4/", "data": {"id": "wcznrdj4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wcznrdj4/", "kind": "article", "headword": "அங்காடி அமைப்பு", "romanization": "aṅkāṭi amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.561571+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தேவையின் நிறைவு, அங்காடியில் நிகழும் பண்டமாற்றினால் ஏற்படுகிறது.", "body_ta": "தேவையின் நிறைவு, அங்காடியில் நிகழும் பண்டமாற்றினால் ஏற்படுகிறது. தேவையான எல்லாப் பண்டங்களையும் பணிகளையும் (Goods and Services) எவரும் தாமாகவே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. தம்மிடம் மிகுந்துள்ளதை விலைக்கு விற்று, அதற்குப் பதிலாகத் தமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதன் அடிப்படையில் நிகழும் செயல்களின் அமைப்பு அங்காடி (Market) என்பதாகும். இங்குப் பண்டமாற்று அல்லது பண்டம் விற்றல் – வாங்கல் என்பனவற்றி்ற்கு மாற்றுக் கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. பண்டத்திற்குப் பண்டம் நேரடியாக மாற்றிக் கொள்ளும் பண்டமாற்றுமுறை (Barter System) பணம் பழக்கத்திற்கு வாராத பழங்காலத்தில் இருந்து வந்தது. இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் பொருள்களை வாங்கவும் விற்கவும் பணம் மாற்றுக் கருவியாக அமைந்து, பணப்பொருளாதாரம் (Money Economics) நடைமுறையில் உள்ளது. இம்முறைப்படி பண்டங்கள், பணிகளின் மதிப்பு, பணத்தைத் துணைக் கருவியாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. மக்களின் பல்வேறுபட்ட தேவை நிறைவேற்றத்திற்கும் நல்வாழ்வுக்கும் அங்காடிகள் அமைந்துள்ளன.\n\nபற்றாக்குறை, பண்டங்களுக்கும் பணிகளுக்கும் மதிப்பைத் தருகிறது. எவை தடையின்றிக் கிடைக்கின்றனவோ அவற்றிற்கு விலை கொடுப்பதில்லை. காற்றும் தண்ணீரும் இலவசமாகக் கிடைப்பதால் அவை அங்காடியில் விற்பனைக்கு வருவதில்லை. அங்காடியில் பண்டங்கள், பணிகள், வாங்கல் விற்றல் ஆகியவற்றைப் பொறுத்து அங்காடி அமைப்பு (Market Structure) பலவிதங்களில் மாறுபடுகிறது. விலை பெறும் பண்டங்களும் பணிகளும் பொருளாதாரப் பொருள்கள் எனச் சொல்லப்படுகின்றன. ஒரு பண்டத்தின் விலை, அதன் மதிப்பை உறுதிப்படுத்துகிறது. மதிப்பு (Value) என்பது, ஒரு பண்டத்தின் பயன்தரும் தன்மையைப் பொருத்துள்ளது. அன்றியும் அப்பண்டம் கிடைப்பதற்கு அரிதாக இருந்தால் மட்டுமே அது விலை மதிப்பும் பெறுகிறது. தேவை ஒரு பக்கமும் அளிப்பு ஒரு பக்கமும் சேர்ந்து பண்டத்தின் அல்லது பணியின் விலையை வரையறுக்கின்றன. விலைமதிப்புப் பெறுகிற பண்டங்கள் அங்காடிகளுக்கு வருகின்றன. அங்காடி செயற்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவையில்லை, விற்பவனும் வாங்குபவனும் நேரடித் தொடர்பில்லாமலோ குறிப்பிட்ட இடம் இல்லாமலோ பண்ட மாற்றம் செய்யலாம். அயற் செலாவணி அங்காடி, மூலதன அங்காடி முதலியன இத்தகைய அங்காடிகள் ஆகும். எனவே அங்காடி என்பது பண்டத்தின் இயல்பு, விற்பனையாளன் அல்லது உற்பத்தியாளனின் தன்மைகள், மற்றும் வாங்குபவன் அல்லது நுகர்வோனின் பின்னணி இவற்றைப் பொறுத்துப் பல்வேறுபட்ட அமைப்புகளாகப் பிரிக்கப்படுகிறது. பொருள்களின் அடிப்படையில் விளைபொருள் அங்காடி (Produce Exchange Market), உலோக மாற்று அங்காடி (Bullion Exchange Market), பங்கு மாற்று அங்காடி (Stock Exchange Market) என அங்காடியை வகைப்படுத்தலாம். பரப்பின் அடிப்படையில் அங்காடியை, உள்ளூர் அங்காடி (Local Market). வட்டார அங்காடி (Regional Market), தேசிய அங்காடி (National Market), பன்னாட்டு அங்காடி (International Market) என்று வகைப்படுத்தலாம்.\n\nகாலத்தின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அங்காடி (Very Short Period Market), குறுங்கால அங்காடி (Short Period Market), நீண்டகால அங்காடி (Long Period Markct), மிக நீண்டகால அங்காடி (Secular Market) என்று வகைப்படுத்தலாம். அளிப்பைச் (Supply) சிறிதளவுகூட மாற்ற இயலாத காலம் மிகக் குறுகிய காலம். அளிப்பை ஓரளவுக்கு மாற்றியமைக்கத் தக்க காலம் குறுங்காலம். அளிப்பை எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றியமைக்கத் தக்க காலம் நீண்டகாலமும், மிக நீண்டகாலமும் ஆகும்.\n\nஅங்காடியைப் போட்டி அடிப்படையில் நிறைவுப் போட்டி நிலவும் அங்காடி, நிறைகுறைப் போட்டி நிலவும் அங்காடி என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைவுப் போட்டி நிலவும் அங்காடியைச் சார்ந்து தூய போட்டி (Pure Competition) அங்காடி என்ற ஒரு பிரிவும் உண்டு. நிறைகுறைப் போட்டி அங்காடியில், முற்றுரிமை அங்காடி, இருவர் முற்றுரிமை அங்காடி, சில்லோர் அங்காடி என்ற வகைகளும் உண்டு. அங்காடிகளின் இயல்புகளைப் பொறுத்து, அங்காடிகள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகை அங்காடிகளில் நுகர்வோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்பது அடிப்படை எடுகோள் (Assumption).\n\nநிறைவுப் போட்டி அங்காடி\n\nதூய போட்டி அங்காடியின் இயல்புகளோடு கீழ்வரும் இயல்புகளையும் இவ்வங்காடி பெற்றிருக்கும்: (1) காரணிகளின் தடையற்ற இடப்பெயர்ச்சி (2) போக்குவரத்துச் செலவின்மை (3) அங்காடி பற்றிய தெளிவான அறிவு எல்வோருக்கும் இருத்தல் (4) எதிர்கால நிலை பற்றிய உறுதியின்மை இல்லை என்னும் நிலை.\n\nதூய போட்டி அங்காடி\n\nஇது (1) தனிப்பட்ட எவருக்கும் விலையின் மீது கட்டுப்பாடு இன்மை (2) விற்பனையாளர்களின் எண்ணிக்கை மிகுதி (3) ஓரியல்பான பண்ட அலகுகள் (4) உற்பத்தியைத் தொடங்க அல்லது நிறுத்த எவ்விதத் தடையும் அற்ற நிலை ஆகிய இயல்புகளை உடையது.\n\nநிறைகுறைப் போட்டி (Imperfcet) அங்காடி,\n\n(1) ஒன்றுக்கொன்று போட்டியிடும் முற்றுரிமைத் தன்மையுடைய பல நிறுவனங்கள் இருத்தல் (2) மிக நெருக்கமான பதிலீடுகளாகப் பயன்படத்தக்க, வேறுபடுத்தப்பட்ட பண்டங்கள் (3) விலையின் மீது அல்லது அளிப்பின் மீது நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு இருத்தல் (4) நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி (5) தொகுப்பில் புகவும் வெளியேறவும் வாய்ப்பு இருத்தல் (6) விலை ஒழிந்த பிற வடிவங்களில் போட்டி நிகழ்தல் (7) உற்பத்திச் செலவும் விற்பனைச் செலவும் சேர்ந்து மொத்தச் செலவை வரையறுக்கும் தன்மை (8) எச்சத்திறன் இருக்கும் நிலை கொண்டது.\n\nஅங்காடியில் ஒரேயொரு உற்பத்தியாளரும் ஒரேயொரு விற்பனையாளரும் இருந்தால் அதை இருமுக முற்றுரிமை அங்காடி (Bilateral Monopoly) என்றும், விற்பவர் பலரும் வாங்குபவர் ஒருவரும் இருந்தால், அதனை, வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) அங்காடி என்னும் குறிப்பிடுவர்.\n\nமுற்றுரிமை அங்காடி,\n\n(1) ஒரேயொரு உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் (2) மிக நெருக்கமான பதிலீட்டுப் பண்டம்/பணி இன்மை (3) நிறுவனமே தொழிலாக இருத்தல் (4) எப்போதும் மிகை ஆதாயம் பெறும் நிலை (5) விலையை அல்லது அளிப்பை உற்பத்தியாளர் கட்டுப்படுத்தும் நிலை (6) குறுங்கால, நெடுங்கால வேறுபாடு இன்மை (7) விலை பேதங்காட்டும் இயல்பு இருத்தல் கொண்டது.\n\nஇருவர் போட்டி (Duopoly) அங்காடி\n\nஇது முற்றுரிமை இயல்புகளில் பெரும்பான்மையானவற்றைக் கொண்டு இருவர் முற்றுரிமை பெற்றிருக்கும் அங்காடி; இருவரும் ஒருவரோடு ஒருவர் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்வாரானால் அது ஒரு முற்றுரிமை அமைப்புப் போலவே செயற்படும்.\n\nசில்லோர் போட்டி (Oligopoly) அங்காடி\n\nஇது (1) நிறுவனங்களின் எண்ணிக்கைக் குறைவு (2) மொத்த உற்பத்தியில் ஒவ்வொரு நிறுவனமும் கணிசமானதொரு பங்கை உற்பத்தி செய்யும் நிலை (3) நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி (4) அங்காடியில் உறுதியில்லா நிலை இருத்தல் (5) பலவிதமான தீர்வுகளுக்கு (Indeterminate Solution) வாய்ப்பு (6) ஏறத்தாழ மாறா விலை (7) விலை தவிர்த்த பிற வழிகளின் அடிப்படையில் போட்டி (8) உறுதியற்ற தேவை கொண்டது.\n\nநிறைவுப் போட்டி, முற்றுரிமைப் போட்டி, இருவர் போட்டி ஆகிய அங்காடி அமைப்புகள் நடைமுறைக்குப் பெரும்பாலும் ஒவ்வாதவை. நடைமுறைப் பொருளாதாரத்தில் காண்பது நிறைகுறைப் போட்டி என்னும் முறையேயாகும். நிறைகுறைப் போட்டி அங்காடியில் விற்பனையாளர்களின் எண்ணிக்கை மிகுதியாதலால் தனியொரு விற்பனையாளனின் உற்பத்தி மொத்தத்தில் மிகச் சிறு பகுதியேயாகும். ஆகையால் உற்பத்தியளவை மாற்றுவதால் விற்பனையாளர்கள் விலைமாற்றங்களை விளைவிக்க முடியாது. இத்தகைய அங்காடியில் பண்டங்கள் ஒரே தன்மையற்றதாக இருக்கும். ஆனால் அவை பயன்பாட்டிற்குத் தகுந்த முறையில் சிறுமாறுதல்களுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பற்பசை, சலவைக்கட்டி போன்ற இன்றியமையாப் பண்டங்களிலிருந்து மோட்டார் வண்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரையுள்ள பொருள்களை உண்டாக்கும் உற்பத்தியாளர்கள், ஒருசில மாறுதல்களுடன் ஒரே பண்டத்தைப் பல வடிவங்களில் பல அளவுகளில் உற்பத்தி செய்கின்றனர். இம்மாறுபடுத்தும் வாய்ப்புகளே, அங்காடியைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் உற்பத்தியாளனுக்கு அளிக்கின்றன. முற்றுரிமையாளனைப் போல, நிறைகுறைப் போட்டியில் பண்டத்தின் விலையை ஏற்றி, அதிக விலைக்கு விற்க வாய்ப்பு மிகுதியாக இல்லை, அவனுடைய விற்பனை பாதிக்காத அளவுக்கு மட்டும்தான் விலையை உயர்த்த முடியும். விற்பனையாளருக்கிடையிலுள்ள தூரத்தாலும் பண்டங்களின் மாறுபாடுகளினாலும் மட்டுமே நுகர்வோர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\n\nநிறைகுறை அங்காடியில் போட்டியிட நுழைவது கடினமானதன்று. ஆயினும் தன்னுடைய மாறுபட்ட பண்டத்தின் மூலம் அங்காடியில் ஏற்கனவே உள்ள மற்ற விற்பனையாளர்களிடமிருந்து நுகர்வோரை ஈர்த்துக் கொள்வதற்கு விளம்பரச்செலவுகளும் ஆக்கச் செலவுகளும் பெரிதும் தேவைப்படும். பண்டங்கள் ஒன்றுக்கொன்று சிறிதளவே மாறுபட்டுள்ளதால் அங்காடியில் காலுன்றி நிற்கப் பலவிதமான நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. விளம்பரம், பண்டத்தின் தரம், பண்ட விற்பனையில் வெவ்வேறு நுணுக்கங்கள், வாணிக முத்திரைகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. நடைமுறையில் மிகப் பெரும்பாலான பண்டங்கள், நிறைகுறைப் போட்டி அங்காடி அமைப்பில் அடங்குகின்றன.\n\nமற்றுமொரு அங்காடி அமைப்பு, சில்லோர் முற்றுரிமை எனப்படும். இருவர், உற்பத்தி அல்லது விற்பனை முழுவதையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அதற்கு இருவர் முற்றுரிமை என்றும், ஒரு சிலர் அவ்வாறு கட்டுப்படுத்தினால் சில்லோர் முற்றுரிமை என்றும் அமைகிறது. மிகச்சில விற்- பனையாளர் இவ்வங்காடியில் செயற்படுகின்றனர். இந்தியாவின் சிமிண்டு தொழிலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சில நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் மொத்தத்தில் கணிசமான பகுதியை உற்பத்தி செய்வதால் உற்பத்தியளவு மாறுபாடுகளினாலும், விலை மாற்றங்களினாலும் அங்காடியில் முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு சில்லோர் முற்றுரிமையில் உள்ள நிறுவனங்களுக்கு உண்டு. ஆகவே, ஒவ்வொன்றும் போட்டியிடும் பிற நிறுவனத்தின் செயற்பாடுகளில் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.\n\nநடைமுறையில் அங்காடிகள் தூயதாகச் செம்மைப்பட அமைவதில்லை. குறைகள் பல இருக்கும் போது, அங்காடியில் நிலவும் விலைகள், பொருளியல் முறையில் சீராக அமைவதில்லை. மேலும், தனியார் துறையுடன், பொதுத் துறையும் பண்டங்களையும் பணிகளையும் மக்கள் நலனுக்காக உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில், விலை வரையறை நடவடிக்கைகள் தேவையாகின்றன. மின்சக்தி, போக்குவரத்து, தொலைபேசி, இரயில்வே முதலானவை அளிக்கும் பணிகளுக்கு விலைகளையும் கட்டணங்களையும் அரசு உறுதி செய்கிறது. போட்டியமைப்பில் தனியார் துறை இயங்கும்பொழுது அரசின் தலையீடு தேவைப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலைமை ஒரு வகுப்பினரிடமிருந்து மற்றொரு வகுப்பினருக்கு வருமானத்தை மறு பகிர்வு செய்யவேண்டிய தேவை, தவிர்க்கப்பட வேண்டிய பண்டங்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய தேவை, இவையெல்லாம் எழும் போது அரசு விலைக்கட்டுப்பாடு முறையைச் செயற்படுத்த வேண்டியுள்ளது. இக்கட்டுப்பாடு நேரடியாகப் பண்டங்களுக்குக் குறைந்த விலை அல்லது உயர்ந்த விலையை வரையறுப்பதன் மூலமும் மறைமுகமாகப் பண்டங்களின் மீது வரி விதிப்பது அல்லது தொழில்களுக்கு உதவி நிதி அளிப்பது ஆகியவற்றின் மூலமும் செயற்படுத்தப்படுகிறது.\n\nஅங்காடி அமைப்பைப் பற்றிய விளக்கம், பண்டங்களின் உற்பத்தி அளவு, விலை, சமூகத்திற்குப் பண்டத்தாலும் பணிகளினாலும் ஏற்படும் பயன்கள், சமூகத் தேவைக்கு ஏற்றபடி பண்ட உற்பத்தியிலும் விலையிலும் செய்ய வேண்டிய மாறுதல்கள், அரசாங்கம் எந்தக் கோட்பாட்டைக் கையாள்வது, எந்தத் தொழிலுக்குச் சலுகை தருவது, எதனைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவிதமான செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இன்றியமையாதது. ய.ச.\n\nதுணை நூல்கள்\n\nStonier, A.W. & Hague, D.C., “A Text Book of Economic Theory,” ELBS, London, 1973.\n\nHirshleifer, J., “Price Theory and Applications”, Prentice Hall, New Delhi, 1982.\n\nLipsey, R G., “An Introduction to Positive Economics”, ELBS, London, 1971.\n\nSamuelson, P.A., ‘Economics’. Mc Graw – Hill, New York. 1961."}}