{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w745kxwe/", "data": {"id": "w745kxwe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w745kxwe/", "kind": "article", "headword": "இல்லீரியா", "romanization": "illīriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.419069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பால்கன் முந்நீரகத்தின் மிகத் தொன்மையான பகுதி.", "body_ta": "பால்கன் முந்நீரகத்தின் மிகத் தொன்மையான பகுதி. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழியின் வட்டார மொழியைப் பேசிய இனமக்கள் ஏட்ரியாடிக்கு (Adriatic) என்னும் கடலின் வடக்கு, கிழக்குக் கடற்கரைகளின் மீது படையெடுத்தனர். தால்மாட்டியர் (Dalmatians), உன்னோனியன் (Pannonians) போன்ற பிற்கால இனமக்கள் இல்லீரிய மக்களைச் சார்ந்தவர்களே பன்னோனியர் வாழ்ந்த அனைத்து இடங்களையும் சில வேளைகளில் இல்லீரியா என்பர். அல்பேனியானின் (Albania) வடக்கில் ஏட்ரியாடிக்குக் கடற்கரைப் பகுதியையே இல்லீரியா (Illyria) என்று கூறுவது வழக்கம். இது தினாரிக்கு ஆல்ப்சு (Dinaric Alps) மலைத் தொடருக்கு மேற்கில் உள்ளது.\n\nஇல்லீரியா\n\nஇக்கடற்கரையில் கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் கிரேக்க நகரங்கள் நிலைநாட்டப்பட்டன. எனினும் நீடித்திருக்கவில்லை. மாசிடோனியாவின் (Macedonia) மன்னரான இரண்டாம் பிலிப்பும் (Philip II) பின்னர் வந்த ஐந்தாம் பிலிப்பும் (Philip V) கிரேக்கர்களுக்கெதிராகப் போரிட்டனர். எனினும் அப்போர்களினால் நிலையான பலன்கள் எவையும் ஏற்படவில்லை. இல்லீரியாவில் உரோமானியர் கி.மு. 168–167–ஆம் ஆண்டுகளில் தம்முடைய மிகத் தொன்மையான குடியேற்றத்தை நிலைநாட்டினர். பல போர்களின் மூலம் தால்மாட்டியா (Dalmatia) முழுவதையும் வென்று, இக்குடியேற்றப் பகுதி விரிவாக்கப்பட்டது, தெற்கு இல்லீரியர்கள் இறுதியாகக் கி.மு. 35–34 ஆம் ஆண்டுகளில் அகசுடசு (Augustus) என்பவரால் தோற்கடிக்கப்பட்டனர். பன்னோனியர் கி.மு. 12–11–ஆம் ஆண்டுகனில் பெற்ற வெற்றிகளால் இல்லீரியாவை மேலும் விரிவாக்கினர்.\n\nவிரிவாக்கப்பட்ட இல்லீரியா, கி.பி. 6–9 ஆம் ஆண்டுகளில் தால்மாடியா, பன்னோனியா என இரு மாநிலங்களாகப் பிரிந்தது. உரோமானியர் இதற்கு இல்லீரிகம் (Illyricum) எனப் பெயரிட்டனர். பின்னர் ஏட்ரியாடிக்குக் கடலின் வடபாகத்தையும் பால்கன் முந்நீரகத்தின் பெரும் பாகத்தையும் இல்லீரிகம் உள்ளடக்கியிருந்தது. முதலாம் நெப்போலியன் கி.பி. 1809–ஆம் ஆண்டில் ஏட்ரியாடிக்குக் கடலின் பாகத்தையும், இன்றைய கிழக்கு யூகோசுலாவியாவையும் தம் பேரரசுடன் இணைத்துக் கொண்ட போது, இல்லீரியா மாநிலங்கள் என்னும் பெயரே மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த பகுதி கி.பி. 1816–49 வரை இல்லீரிய அரசு என்னும் பெயரில் ஆசுதிரியாவின் நிருவாக மாவட்டமாக அமைந்திருந்தது."}}