{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w6xb7vjb/", "data": {"id": "w6xb7vjb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w6xb7vjb/", "kind": "article", "headword": "இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்", "romanization": "ivāṉcu piriṭcarṭu, eṭvarṭu ivāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.736135+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இங்கிலாந்தில் மானிடலியலின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களுள் ஒருவர்.", "body_ta": "இங்கிலாந்தில் மானிடலியலின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களுள் ஒருவர். இங்கிலாந்தின் சசக்சு (Sussex) மாநிலத்தில் குரோபரோ (Crowborough) என்னுமிடத்தில் பிறந்தார். வின்செசுட்டர் (Winchester), எக்சீடர் (Exeter) ஆகிய கல்லூரிகளில் பயின்று, பின்னர் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தை ஆக்சுபோர்டு பல்சுலைக் கழகத்தில் பெற்றார். அதன் பின் இளங்கலை மானிடவியல் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியில் பயின்று, 1927–ஆம் ஆண்டு இப்பள்ளியிலேயே மானிடவியலில் டாக்டர் பட்டத்தினைப் பெற்றார். 1928 முதல் 1936 வரை இலண்டன் பொருளியல் பள்ளியில் மானிடவியல் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.\n\nஎத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றி, மீண்டும் 1945–ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் திரும்பி வந்து கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் மானிடவியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்; பின்னர், 1946–ஆம் ஆண்டு இத்துறையின் பேராசிரியரானார். 1970–இல் ஓய்வு பெற்றார். 1971–இல் இங்கிலாந்து அரசின் வீர விருதைப் (Knight) பெற்றார்.\n\nஇவான்சு பிரிட்சர்டு அசாந்தே குடிகளையும், நூயர் குடிகளையும் மிக விரிவாக ஆராய்ந்தார். இவர்தம் படைப்புகளில் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது நுயர் (1940) ஆகும். போர்டசு (Fortes) என்பவருடன் இணைந்து வெளியிட்ட ஆப்பிரிக்க அரசியல் முறைகள் (African Political System), இவரது அன்னுவக்கு அரசியல் நிறுவனங்கள் (Annuak Political Institution) போன்ற ஆய்வுகள், ஆப்பிரிக்கக் குடிகளைப் பற்றிய சமூக மானிடவியல் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தன.\n\nநூயர் குடிகளின் தலைமையற்ற சிறுகால் வழிக் குழுக்களின் (Segmented Acephalious Lineages) அரசியலமைப்பு முறைகளை இவர் கண்டறிந்தார். நூயர் சமயத்தை ஆராய்ந்து, அதனைத் தர்க்கைம் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார். இவான்சு பிரிட்சர்டு தம் அணுகுமுறையில் ஒரு செயற்பாட்டியலாராக (Functionalist) இருந்தார். இவர் இரட்கிளிப் பிரௌன் அமைப்பியல் செயற்பாட்டியலராக (Structural–Functionalist) இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.\n\nஇவான்சு பிரிட்சர்டு மானிடவியல் ஆய்வில் வரலாற்றுப் பின்னணியின் தேவையை வலியுறுத்திக் கூறினார். இப்பின்னணியால் ஒரு சமூகத்தைப் பற்றி உண்மையாக அறியமுடியும் என்பது இவரது கருத்தாகும். இதனாலேயே இங்கிலாந்துச் சமூக மானிடவியலின் அணுகுமுறை, வரலாற்று வரைவியல் (Historiography) அடிப்படையிலானதாக அமைய வேண்டும் என எண்ணினார். இருப்பினும், இங்கிலாந்து மானிடவியலில் பணிபுரிந்த பிந்தையோர் இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் 1973–இல் காலமானார்."}}