{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w6hz2jh2/", "data": {"id": "w6hz2jh2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w6hz2jh2/", "kind": "article", "headword": "செவியும் ஒலியும்", "romanization": "ceviyum oliyum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.307038+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செவியும் ஒலியும் மிகை ஒலியால், காது தாக்குதலுக்குள்ளாகிச் செவிடாகக் கூடும்.", "body_ta": "செவியும் ஒலியும் மிகை ஒலியால், காது தாக்குதலுக்குள்ளாகிச் செவிடாகக் கூடும். ஹிப்போகிரேடிஸ் காலத்திலேயே காதில் அடி, காயம், மிகை ஒலி ஆகியவற்றால் இரைச்சலும், செவிட்டுத் தன்மையும் உண்டாகின்றன என்று அறியப் பட்டது. 1831இல் பாஸ் பிரோக், கொல்லன் ஆகியோர் செவிடு பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கன ரகத் தொழிற்சாலையில் தொழில் வழியாகச் செவிடு வரும் என்பதை 1882இல் ஹோல்டும், கொதி கலன் தொழிலாளர் செவிடு பற்றி 1886இல் பார் என்பாரும் விளக்கியுள்ளனர். இன்றும் மிகை ஒலியால், காது செவிடும், தொழில் திறன் குறைவும், நரம்புக் கோளாறும், மனக் கோளாறும் உண்டாகின்றன.\n\nபாதிக்கப்பட்ட சிலர் வெளியே தெரிவிக்காமல், உதட்டசைவைப் பார்த்தே பேசவும், கேட்கவும் பழகிக் கொள்கின்றனர். ஓர் இடத்திலிருக்கும் ஒலி அதிர்வின் அளவையும், அழுத்தத்தின் அளவையும், ஒலி அளவு ஆய்வின் மூலம் அறியலாம். பாதுகாக்கப் படாத செவியில் 80dB ஒலி அழுத்தம், தீமை பயக்கும். 90dB அழுத்தம் உள்ள தொழிற்சாலை பாதுகாப்பற்றது. உயர் அதிர்வுகளில் அழுத்தம் 80dB இருந்தால், தீங்கு மிகுதி. கன ரகக் கொதி கலன் ஆலை ஒலிகளால், தொழிலாளர்களில் இளஞரை விட முதியவரே பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.\n\nசாலை, ஆலை, சுரங்கம் போன்ற தொழில்களில் துளையிடும் கருவிகள் தொழிற்சாலைகளில் உலோகங்களை இணைப்பது, பளபளப்பூட்டுவது போன்ற வேலைகளில் ஒலி தீங்கு செய்யும். தாரை விமானம் ஏறி இறங்கும் போது அதிர்வுகள், தற்காலிகமாகச் சேதப் படுத்துகின்றன. கேளா ஒலி (ultrasonic) மனித உடலுக்குத் தீமை செய்யும்; அதனால், மிகை ஒலி விமானங்களில், மிகை ஒலி வெடிப்பை 25–55 கி.மீ. மேலேயே நடத்திப் பிறகே, விமானத்தைத் தரையில் இறக்குவர்.\n\nஒலியால் ஏற்படும் தீமைகள். கவனக் குறைவும், தூக்கமின்மையும், மனக் கோளாறைத் தோற்றுவிக்கின்றன. படை வீரர், துப்பாக்கிக் குண்டு ஒலியை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதால், குண்டுக் காயத்தை விட, ஒலியால் மிகுதியாகத் துன்பமடைகின்றனர். அவர்களுக்கு விரைவாகத் தோன்றும் செவிடு குணமாக நெடுநாள் ஆகும்.\n\nமுன்னரே, காதில் கோளாறு உள்ளவர்கள் ஒலியினால் விரைவாகப் பாதிக்கப் படுகின்றனர். முதியவர்க்கு நரம்புத் தளர்ச்சியால் செவிட்டுத் தன்மை விரைவில் வரும். ஒலியின் தீமையால், மூன்றாண்டில் வரக் கூடிய செவிடு, ஓராண்டிலேயே வந்து விடும். ஒலியின் கடுமையால், உட்செவியில் உள்ள நுண்ணுயிர், மயிர்க் கால், நரம்பு முனை முதலியன நசிந்து விடுகின்றன. இவற்றில், தற்காலிகச் செவிடும், நிலையான செவிடும் வர வாய்ப்புண்டு. தற்காலிகச் செவிடுடையவர், மிகு ஒலிச் சூழ்நிலையிலிருந்து சில நாளேனும் விலகியிருந்தால்தான் கேட்கும் திறன் சீராகும். —டி. எம். பரமேஸ்வரன்\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->"}}