{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w2avt7ps/", "data": {"id": "w2avt7ps", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2avt7ps/", "kind": "article", "headword": "படகோட்டல்", "romanization": "paṭakōṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:05.226234+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஏரி, ஆறு போன்ற உள் நாட்டு நீர் நிலைகளிலும், ஆழம் குறைந்த அண்மைக் கடல் பகுதிகளிலும், ஓட்டுவதற்கேற்ற, பாய் மரம் பொருத்திய 20 மீட்டருக்கும் குறைவான கலங்களையே படகுகள் எனலாம்.", "body_ta": "ஏரி, ஆறு போன்ற உள் நாட்டு நீர் நிலைகளிலும், ஆழம் குறைந்த அண்மைக் கடல் பகுதிகளிலும், ஓட்டுவதற்கேற்ற, பாய் மரம் பொருத்திய 20 மீட்டருக்கும் குறைவான கலங்களையே படகுகள் எனலாம். உல்லாசப் படகோட்டுதலுக்குரிய படகுகள் பொதுவாகக் கண்ணாடி இழை, மரம், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப் படுகின்றன. அலுமினியப் படகுகள் உறுதியாக இருப்பினும், விலை மிகுதி காரணமாக, இவற்றின் பயன் மிகக் குறைவே. கண்ணாடி இழைப் படகுகள், சுமை குறைவாகவும், உறுதியாகவும் உள்ளமையால், இவற்றின் பராமரிப்பு மிகவும் எளிதாகும். எனவே, இவை தற்போது மிகவும் புகழ் பெற்றுள்ளன.\n\nவகைகள். படகுகளின் அடிப் பகுதி தட்டையாகவோ, ஏறக் குறைய அரை வட்டமாகவோ, ‘V’ வடிவமாகவோ இருக்கலாம். ஆழமற்ற பகுதிகளில் ஓட்ட ஏற்றதும், துடுப்பின் உதவி கொண்டு தள்ளக் கூடியதுமான சிறிய படகுகள் மட்டுமே தட்டையான அடிப் பகுதியைக் கொண்டுள்ளன. பொதுவாக, விலையுயர்ந்த இப்படகுகள் அலை மிகுந்த கடல் பகுதிகளுக்கு ஏற்றவையல்ல. அரை வட்ட வடிவ அடிப் பக்கத்தைக் கொண்ட படகுகள் பழமையானவை என்றும், ஆழமான மிகுந்த கடல் பகுதிகளுக்கு ஏற்றது. மேற்கூறிய இரண்டு வகைப் படகுகளை விட ‘V’ வடிவ அடிப் பக்கத்தைக் கொண்ட படகுகளே மிகவும் புகழ் பெற்றவை. இவை விலை குறைவானவை மட்டுமல்லாமல், வேகமாக அலைகள் அடிக்கின்ற கடல் பகுதிகளில் நிலையாகவும், பாதுகாப்பாகவும் ஓடக் கூடியவையாகும்.\n\nஎந்திரப் படகுகள் . உள் எந்திரம் பொருத்தப் பட்ட படகுகள், வெளி எந்திரம் பொருத்தப் பட்ட படகுகள் உள், வெளி ஆகிய இரு வகை எந்திரங்களும் பொருத்தப் பட்ட படகுகள் மூவகை எந்திரப் படகுகள் உள்ளன. உள் எந்திரப் படகுகளில் எந்திரம் நிலையாகப் பொருத்தப் பட்டுள்ளது. 50–500 குதிரைத் திறனுள்ள (horse power) எந்திரங்கள் பொருத்தப் பட்ட இவ்வகைப் படகுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. வெளி எந்திரம் தற்காலிகமாகப் பொருத்தப் பட்டுள்ளமையால், தேவைப் படும் போது, இதைப் பொருத்தியும், தேவையற்ற போது கழற்றியும், வெளியே எடுக்க முடியும். 1–100 குதிரைத் திறனுள்ள எந்திரங்கள் பொருத்தப் பட்ட வெளி எந்திரப் படகுகள் தற்போது மிகுதியும் பயன் படுகின்றன. மேற்கூறிய அனைத்துப் படகுகளின் எந்திரங்களிலும், பேருந்துகளுக்குப் பயன் படுத்தக் கூடிய டீசல் எண்ணையே பயன் படுகிறது. வள்ளம் (Canoe) சுமை குறைந்தாலும், கூரிய இரு முனைகளைக் கொண்ட சிறு படகுகளையே வள்ளம் என்பர். பொதுவாக 4–5 , 5 மீ. நீளத்தைக் கொண்டுள்ள இப்படகு 2–3 மனிதர்களால் ஓட்டப் படுகின்றன. பொதுவாகப் பாய் மரத்தால், இவை ஓட்டப் படினும், அவ்வப்போது விசை எந்திரங்கள் பொருத்தப் பட்டும், ஓட்டப் படுகின்றன. இவற்றைச் செலுத்துபவர்கள் எதிர் எதிராக அமர்ந்து கொண்டு, படகில் பொருத்தப் படாத துடுப்புப் போன்ற அமைப்புகளால் செலுத்துவர். பொழுது போக்குக்காக, இவ்வள்ளங்கள் ஏரி, உவர் நீர் நிலைகள் போன்றவற்றில் ஓட்டப் படுகின்றன.\n\nஉல்லாசப் படகோட்டல் . பாய் மரம் மட்டுமே பொருத்தப் பட்ட கலங்களை உல்லாசத்திற்காகவோ, விளையாட்டுப் போட்டிக்காகவோ, கடலில் செலுத்துவதே உல்லாசப் படகோட்டல் (yachting) எனப் படுகிறது. இவ்வகைப் படகோட்டல் முதன் முதலாக 16–17ஆம் நூற்றாண்டுகளில் ஹாலந்தில் நடந்தேறியதாகக் கூறப் படுகிறது. எனினும், விளையாட்டுப் போட்டிக்காகப் படகோட்டல் 19ஆம் நூற்றாண்டு முதல்தான் தொடங்கியது.\n\nபடகோட்டும் முறைகள் . படகோட்டல் தொன்று தொட்டுப் பொழுது போக்காக விளங்கி வந்திருந்த போதிலும், 20ஆம் நூற்றாண்டில், தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகவும் புகழ் பெற்றுள்ளது. இந்நாடுகளில் பொழுது போக்காக இது கருதப் பட்டாலும், அவ்வப்போது ஒரு விளையாட்டுப் போட்டியாகவும் இது நடைபெற்று வருகிறது. படகோட்டலில் பல்வேறு முறைகள் உள்ளன. ஒரே ஒரு துடுப்புக் கொண்டு, ஒரே மனிதர் ஒரு படகை ஓட்டிச் செல்வதை, ‘ரோவிங்’ (rowing) என்றும், ஒரே மனிதர் முன் பகுதி, தட்டையாகவும் ஓரங்கள் கூர்மையாகவும் உள்ள இரு துடுப்புகளை, இரு கைகளாலும் ஒரு படகை இயக்கிச் செல்வதை ஸ்கல்லிங் (sculling) என்றும் கூறுவர். பின்னதில் பயன் படுத்தக் கூடிய துடுப்பின் நீளம் முன்னதை விடச் சற்றுக் குட்டையாக உள்ளது.\n\nஒரு படகைச் செலுத்தும் போது, ஒருவரின் உடல் பல தொடர் அசைவுகளுக்கு உள்ளாகிறது. முன் பகுதி தட்டையாகவும், ஓரங்கள் கூர்மையாகவும் உள்ள துடுப்பை, படகு ஓட்டும் பொருட்டு, முதன் முதலில் நீரில் விடுவதை, கேட்ச் (catch) என்பர். துடுப்புப் போடுபவர் துடுப்புகளை ஒரு முறை நீரினுள் அமிழ்த்தி, தம்மிடம் மீண்டும் பழைய நிலைக்கே, துடுப்புகளைக் கொண்டு வரும் வரை ஏற்படுகின்ற உடல் அசைவுகளை மொத்தமாக ஒரு ஸ்ட்ரோக் (stroke) என்பர். துடுப்புப் போடுபவர் படகில் பின் புறமாகச் சாய்வதும், அதே தருணத்தில், துடுப்பின் நுனிப் பகுதி நீரிலிருந்து வெளியேயும், முன்னாலும், தள்ளப் படுவதும் ரிகவரி (recovery) எனப் படுகிறது. துடுப்பில் நுனிப் பகுதியை மணிக் கட்டின் வலிமையால், தரை மட்டமாகச் (horizontally) செலுத்துவதை, ஃபெதரிங் (feathering) என்பர். இத்தருணத்தில், துடுப்பின் பிடி அமிழ்ந்து படுவதை அடுத்து, துடுப்பின் நுனிப் பகுதி நீரை விட்டு வெளிப் படுகிறது.\n\nபடகு முன்னோக்கி தள்ளப் பட்ட பின், துடுப்பின் நுனிப் பகுதி மேல் மட்டத்திற்கு வருவதை முடிவு (finish) எனலாம். துடுப்பின் நுனியைத் தரை மட்டத்திலிருந்து, செங்குத்தாகத் திருப்புவதை ‘ஸ்குயரிங்’ (squaring) என்பர். இந்நிலையை, இரண்டாம் மீளலின் முடிவாகவும், முதல் கேட்சின் தொடக்கமாகவும் கருதலாம். படகு ஓடும் முகமாகத் துடுப்பாட்டி, தன் கால்களைப் பாதப் படுக்கையிலும், கைகளைத் தாங்கியிலும் சிறிது அழுத்துவதைப் ‘பேலன்ஸ்’ (balance) என்பர். ஒரு நிமிடத்திற்கு எத்தனை முழுமையான ஸ்ட்ரோக்குகளை ஒரு படகோட்டி அடைகிறார் என்பது, ஸ்ட்ரோக் திறன் எனப் படும். சான்றாக, 5 நொடியில், 3 ஸ்ட்ரோக்குகளை ஒருவர் பெற்றால், நிமிடத்திற்கு 36 ஸ்ட்ரோக்குகள் எனப் படகை ஓட்டிச் சென்றார் எனக் கணக்கிடப் படும்.\n\nபாதுகாப்பான படகோட்டுதலுக்குரிய விதி முறைகள். மிகச் சிறிய படகுகளில் பயணம் செய்யக் கூடாது. ஆழ் கடலுக்குச் செல்லும் படகுகளில் பயணம் செய்யும் போது, ஒவ்வொருவருக்கும் ஓர் உயிர் காக்கும் மிதவை (life jacket) இருக்க வேண்டும். ரப்பர் பாத அணிகளை அணிந்து, படகில் பயணம் செய்ய வேண்டும். படகுகளில் தேவைக்கு மேல், மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. படகில் பயணம் செல்பவர்கள் எவ்வாறு படகினுள் இறங்க வேண்டும், படகிலிருந்து வெளியேற வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். படகோட்டலுக்கு முன், படகு நல்ல நிலையிலும், நீர்க் கசிவு இல்லாமலும் இருக்கின்றதா என அறிதல் வேண்டும். படகை ஓட்டுபவர்கள், விதி முறைகளையும் படகுகளைச் செலுத்தும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். படகினுள் நல்ல நிலையில், வேலை செய்யக் கூடிய தீயணைப்பான் ஆயத்த நிலையில் இருத்தல் வேண்டும். படகில் புகை பிடிக்கக் கூடாது. படகில் பயணம் செய்யும் போது, ஏனையோரிடம் நன்முறையில் பழகுதல் வேண்டும்.\n\nபடகோட்டும் போட்டிகள். வெனிசில் 1300ஆம் ஆண்டிலேயே, படகுப் போட்டி நடைபெற்றதாகக் கூறலாம். 1529ஆம் ஆண்டில், வெனிசில் பெண்களுக்கான முதல் படகுப் போட்டி நடைபெற்றது. ஆக்ஸ்போர்டுக்கும், கேம்பிரிட்ஜுக்கும் இடையே நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற தனி நபர் படகுப் போட்டி 1829இல் ஹென்லேயில் நடந்தேறியது. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் போட்டி வெஸ்ட் மின்ஸ்டரியிலிருந்து புட்ரேக்கு நடைபெற்றது. 1856ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வந்தாலும், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் பெரும் போர்களின் போது இப்போட்டி நடைபெறவில்லை. —இரா. சந்தானம்"}}