{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vys8cpaz/", "data": {"id": "vys8cpaz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vys8cpaz/", "kind": "article", "headword": "இன்னிலை", "romanization": "iṉṉilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.297287+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயரில் தொகுக்கப்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகிறது.", "body_ta": "பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயரில் தொகுக்கப்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகிறது. இத்தொகுப்பில் ‘கைந்நிலை’யை ஒரு நூலாக ஏற்று ‘இன்னிலை’யைத் தவிர்ப்பாரும் உளர். ‘நாலடி நான்மணி நானாற்பதைந்திணைமுப், பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம், இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பவே, கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு’ என்னும் செய்யுள், இத்தொகுப்பில் அமைந்த நூல்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இச்செய்யுளுக்குப் பாட வேறுபாடுகள் பல உண்டு. அவற்றுள் ‘இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம், கைந்நிலையுமாங் கீழ்க்கணக்கு’ என்பது ஒன்று.\n\nமுன்னர்க் குறிப்பிட்ட செய்யுள் ‘இன்னிலை’யைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகச் சுட்டுகிறது. அடுத்துக் காட்டியுள்ள பாடவேறுபாடு ‘கைந்நிலை’யை ஒரு நூலாகக் குறிக்கிறது. ‘இன்னிலை’யை ஒரு நூலாக ஏற்றால் ‘கைந்நிலைய வாங்கீழ்க்கணக்கு’ என அடைமொழியாகக் கொள்ளல் வேண்டும். ‘கைந்நிலை’யை ஒரு நூலாக ஏற்றால் ‘இன்னிலை’ மறைந்து ‘இனிய நிலைமையவாகிய காஞ்சி’ என அடைமொழியாகும். எனவே கீழ்க்கணக்கு நூல்களுள் பதினெட்டாம் நூல் இன்னிலையா கைந்நிலையா என்ற ஐயம் ஏற்படலாம். இவற்றில் கீழ்க்கணக்கு வரிசையைச் சேர்ந்த நூல் எது என்பதில் ஐயமிருப்பினும் இவ்விரு பெயர்களிலும் இரு வேறு நூல்கள் அச்சிற்பதிப்பிக்கப் பெற்றுள்ளன என்பது உண்மை. ‘இன்னிலை’யை வ.உ. சிதம்பரம் பிள்ளையும், ‘கைந்நிலை’யை அனந்த ராமையரும் பதிப்பித்துள்ளனர்.\n\nஇன்னிலையின் ஆசிரியர் பொய்கையார் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பித்துள்ளார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள முதல் திருவந்தாதி, களவழி நாற்பது, புறநானூற்றில் ‘கோதை மார்பிற் கோதையானும்’ என்னும் ‘நாடெனென்கோ ஊரனென்கோ’ என்றும் தொடங்கும் செய்யுட்கள், பன்னிரு பாட்டியலில் பொய்கையார் என்னும் பெயரோடு காணப்பெறும் சூத்திரங்கள். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பொய்கையார் என்னும் குறிப்போடு காட்டியுள்ள தனிச் செய்யுட்கள் ஆகிய அனைத்தையும் இயற்றியவர் பொய்கையார் என்ற பெயருடைய ஒரே புலவர் என்று சிலர் கருதுகின்றனர்.\n\nமுதல் திருவந்தாதி, இன்னிலை ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியும், திருவந்தாதி பாடிய பொய்கையார் தமது திருமால் ஈடுபாட்டினைப் புலப்படுத்தியிருப்பது போல இன்னிலைச் செய்யுட்களிலும் திருமால் பெருமை பேசப் பெற்றிருப்பதைச் சுட்டியும் இவ்விரு நூல்களையும் செய்த பொய்கையார் ஒருவரே எனவும், களவழி நாற்பது, இன்னிலை ஆகிய இருநூல்களிற் காணப்படும் வேறுபாட்டினை எடுத்துரைத்து இவ்விரு நூல்களையும் செய்தவர் வெவ்வேறு பொய்கையாரே ஆவர் எனவும் வ.உ. சிதம்பரம் பிள்ளை தம் பதிப்பில் சுட்டியுள்ளது சிந்திக்கத்தக்கது.\n\n‘இன்னிலை’ என்னும் நூலினைத் தொகுத்தவர் மதுரையாசிரியர் என்றும் இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அறிஞர் குறிப்பிட்டுள்ளனர்.\n\nநூலின்கண் 45 வெண்பாக்களும் கடவுள் வாழ்த்தாக அமைத்த ஆசிரியப்பா ஒன்றும் உள்ளன. அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்பன நூலின் பகுதிகள். அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும் இன்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் இல்லியல், துறவியல் எனப் பகுக்கப் பெற்று முன்னையது எட்டு வெண்பாக்களையும், பின்னையது ஆறு வெண்பாக்களையும் கொண்டுள்ளன.\n\nஇந்நூல் அளவில் சிறிதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கியுள்ள பொருள்களின் அருமை பெருமைகளால் சிறப்பு மிக்கதாகும்.\n\nஇந்நூலின் சொற்றொடர்களையும் பொருள்களையும் திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளதாகக் கூறும் வ.உ. சிதம்பரம்பிள்ளை, தம் பதிப்பில் பல மேற்கோள்களைக் காட்டுகிறார்.\n\nஇதன் வெண்பாக்களை இளம்பூரணர் தம் உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளதாக வ.உ. சிதம்பரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இளம்பூரணத்தை நோக்க அவ்வுரையில் இந்நூலின் ஒருபாடலேனும் காணப்படவில்லை; எனவே முன்னைய பதிப்புகளிலிருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலை உள்ளது என்று தி. சங்குப்புலவர் தம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் வெண்பாக்களைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் எடுத்தாண்டுள்ளனர்.வெ.ப."}}