{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vvzs7a6w/", "data": {"id": "vvzs7a6w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvzs7a6w/", "kind": "article", "headword": "அகமீட்டுருவாக்கம்", "romanization": "akamīṭṭuruvākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.103038+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகமீட்டுருவாக்கம் என்பது ஒரு மொழியின் தொல்வடிவத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்குரிய அணுகு முறைகளுள் ஒன்று.", "body_ta": "அகமீட்டுருவாக்கம் என்பது ஒரு மொழியின் தொல்வடிவத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்குரிய அணுகு முறைகளுள் ஒன்று. மொழி வரலாற்றில், ஒரு மொழியின் மிகப்பழைய எழுத்துச் சான்று கிடைத்த காலத்திலிருந்து இன்று வரையுள்ள கால வரலாற்றைச் சான்று வழிப்பட்ட வரலாற்றுக் காலம் (Recorded History) என்றும், அதற்கு முற்பட்ட கால வரலாற்றை மொழியின் தொல் வரலாற்றுக் காலம் (Pre-History) என்றும் குறிப்பிடுகிறார்கள்.\n\nஎவ்வா மொழிக்கும் ஒரே சமயத்தில் எழுத்துச் சான்று கிடைப்பதில்லை. ஆதலால் ஒவ்வொரு மொழியின் சான்று வழிப்பட்ட வரலாற்றுக் காலமும் தொல்வரலாற்றுக் காலமும் மாறுபடுகின்றன. தமிழ்மொழிக்கு இன்றுவரை கிடைத்திருக்கும் மிகப் பழைய எழுத்துச் சான்று கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளே. தெலுங்கு மொழியில் கிடைக்கும் மிகப் பழைய எழுத்துச் சான்று கி.பி. 575–ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும்.\n\nமொழியின் தொல்வரலாற்றைத் தெரிந்து கொள்ள மொழியியலார் நான்கு அணுகு முறைகளைக் கண்டுள்ளார்கள். அவையாவன: 1. கிளை மொழியியல் (Dialectology) 2. அகமீட்டுருவாக்கம் (Internal Reconstruction) 3. புறமீட்டுருவாக்கம் (External Reconstruction) அல்லது ஒப்பிலக்கணம் (Comparative Method) 4. சொற்கோவைப் புள்ளியியல் (Lexico Statistics).\n\nஅகமீட்டுருவாக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மொழியில் ஏற்பட்டிருக்கும் புணர்ச்சி மாற்றங்களைச் சிலநெறிமுறை ஒழுங்குகட்கு உட்படுத்துவதாகும். அந்த மாற்றம் ஒலி மாற்றத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் மாற்றம் இல்லாத வடிவமே அதற்குமுன் இருந்திருக்க வேண்டும் என்றும் முடிவு கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள் → φ /– # (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும்.\n\nஅகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும்.\n\nமலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது.\n\nஅகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செ.வை.ச."}}