{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vusjbtcy/", "data": {"id": "vusjbtcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vusjbtcy/", "kind": "article", "headword": "உயிரினங்களின் தோற்றம்", "romanization": "uyiriṉaṅkaḷiṉ tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.370802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சமூக வரலாற்றை அறிவியல் கோட்பாட்டின் வாயிலாக ஆய்வு செய்து வரலாறு, சமூகம், அரசாங்கம், சட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய விதிகளை வகுக்கும் முறை கி.பி.", "body_ta": "சமூக வரலாற்றை அறிவியல் கோட்பாட்டின் வாயிலாக ஆய்வு செய்து வரலாறு, சமூகம், அரசாங்கம், சட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய விதிகளை வகுக்கும் முறை கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மிகுதியாகச் கையாளப்பட்டது. சார்லசு தார்வின் (Charles Darwin) என்ற ஆங்கில இயற்கோட்பாட்டாளர் தம் ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species) என்ற நூலில் கூறியுள்ள பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, எகல் (Hegal) போன்றோர் கையாண்டதிலிருந்து இந்த ஆய்வு முறை தொடங்கிற்று. சார்லசு இராபர்ட்டு தார்வின் (கி.பி. 1809–1882) இயற்கைப் பொருள்களை ஆராய்ந்து தம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளைக் கூறினார். அவர் 5 ஆண்டுகள் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையி- லும் பசிபிக்குப் பெருங்கடல் தீவுகள் சிலவற்றிலுமுள்ள செடிகள், உயிரினங்கள் ஆகியவற்றின் வாழும் முறையினை அவை வாழ்ந்த சூழ்நிலைகளிலேயே ஆய்வு செய்து, மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் தத்தம் உறுப்புகளில் ஏற்படுகிற மாறுதல்களின் வளர்ந்து, வேறு வேறு விளைவாகப் படிப்படியாக உயிர்களின் உருவத்தை அடைகின்றன என்று கூறினார். அவர் பரிணாமக் கோட்பாடுகளை ‘உயிரினங்களின் தோற்றம்’, ‘மனிதனின் தோற்றம்’ (The Descent of Man) முதலிய தம் நூல்களில் விளக்கியுள்ளார்.\n\nபரிணாமக் கோட்பாடு\n\nஓர் உயிர்வகை (விலங்கு அல்லது பறவை) படிப்படியாக வளர்ச்சி பெற்றுத் தன் உறுப்பில் ஏற்படும் மாறுதலினால் வேறோர் உயிரினத்தின் உறுப்புகளையும் உருவத்தையும் பெறுகிறது. இவ்வாறு பரிணாம முறையில் அல்லது படிப்படியான வளர்ச்சி முறையில் ஓர் இன உயிரிலிருந்து மற்ற இன உயிர்களெல்லாம் தோன்றுகின்றன. மனிதனின் தோற்றமும் இவ்வாறு பரிணாம முறை வாயிலாக மற்ற உயிரினங்களிலிருந்து ஏற்பட்டதே. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், 1. பலவகை உயிரினங்கள் (Variations) உள்ளன. இதனால் ஓரின உயிர் மற்றோரினமாகப் படிப்படியான வளர்ச்சி முறையில் மாறுவதற்கு வழி ஏற்படுகிறது. 2. ஒவ்வோர் இன உயிரியும் தன் மரபு வழிப் பண்பு காரணமாகத் தன் உயிர் உறுப்புகளின் வடிவத்தை அடுத்த தலைமுறைக்கு அளிக்கிறது. 3. வாழுதற்கான போராட்டம் (Struggle for Existence) நடைபெறுகிறபோது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த இன உயிர் வாழும் தகுதி உடையதோ, அந்த இனஉயிர் பெருகுதலின் வழியாக மற்றோர் இன உயிராக வளர்கிறது. தார்வின் கூறிய இந்தப் பரிணாம வளர்ச்சிக் கருத்துகள் பிற்காலத்தில் பெரும் மாறுதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.\n\nஅரசியல் ஆய்வில் பரிணாமக் கோட்பாடு\n\nஎகல் என்ற செருமானியரின் அரசு பற்றிய கோட்பாட்டில் (Theory of the State) தருக்க வாத முறையும் அரசியலதிகாரம் அனைத்தின் வடிவமே தேசிய அரசு என்னும் கருத்தும் காணப்படுகின்றன. அவர் பரிணாமக் கோட்பாட்டைத் தம் அரசியலாய்வில் கையாண்டார். முதலில் அவர் தருக்க வாத முறைப்படி தேசிய அரசே (National State) எல்லா அரசியல், சமூக அமைப்புகளுள்ளும் முதன்மைச் சிறப்பு உடையது என்று கூறினார்.\n\nஎகல் வரலாற்று முறையினைக் கையாண்டார். இம்முறையின்படி, இயற்கையில் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே வகையான வளர்ச்சி பற்றிய சட்டம் இருக்கிறது. இச்சட்டம் ஒவ்வொரு பொருளின் அனைத்து நிலைகளிலும் காணப்படுகிறது; பொருளாதார நிறுவனங்கள், விஞ்ஞானக் கருத்து, அரசாங்கம் பற்றிய கருத்து ஆகியவற்றில் காணப்படும் சட்டங்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்டவை; சமயம், ஒழுக்கவியல், சட்டம், அரசாங்கம் முதலிய ஒவ்வொன்றின் பரிணாம வளர்ச்சியிலும் ஒவ்வொன்றின் சிறப்பியல்பு நிலை பெற்றுள்ளது. சமூக இயல் தத்துவத்தில் மூன்று வெவ்வேறான விதிகள் காணப்படுகின்றன. 1. எல்லா மனித இனமும் வளர்ந்து முன்னேறுகின்றன. 2. இதன் விளைவாகப் படிப்படியான முன்னேற்றமுடைய தேசிய பண்பாடுகள் தோன்றுகின்றன. 3. பல்வேறு உயிரினங்களின் உறுப்புகள் பரிணாம முறையில் வளருகின்றன.\n\nமதிப்பீடு\n\nஎகல் கையாண்ட முறையிலும் அவர் தம் கருத்திலும் சில குறைபாடுகள் உள்ளன. உண்மையில் தருக்கவாத முறை என்பது தேசிய வலிமை என்பதோடு தொடர்புடையது அன்று. அவர் கூறிய முழுவல்லமை உடைய அரசு என்ற கோட்பாடு பழைமை விரும்பும் இயல்பையும், தருக்க இயல் கோட்பாடு புதிய தீவிரவாதத் தொழிலாளர் கோட்பாட்டையும் எடுத்துக் காட்டின. அவர்தம் தருக்க இயல் கோட்பாடு பின்னர் மார்க்சு (Marx) வகுத்த சமநிலைக் கொள்கைக்குந் தத்துவ இயலான ஆதாரத்தை அமைத்துத் தந்தது.\n\nஎகல் பொருத்தமில்லா விதிகளை இணைத்துள்ளார். மனித இனத்தின் முன்னேற்றம் என்பதும் எகலின் வரலாறு பற்றிய தத்துவமும் தார்வின் கூறிய பல்வேறு வகைப்பட்ட உயிரின வகைகளையோ உயிர்களின் மரபுவழிப் பண்புகள் பற்றிய விதிகளையோ சார்ந்திருக்கவில்லை. அவர் கூறும் பண்பாட்டு வளர்ச்சி பற்றிய கருத்தும் மனித முன்னேற்றமென்ற கருத்துக்குப் பொருந்தவில்லை.\n\nதார்வின் கூறிய வாழத் தகுதியுள்ள உயிரினம் இயற்கைத் தேர்வு விதியின்படி (Law of Natural Selection) இனப்பெருக்கம் செய்கிறது என்னும் கருத்துக்கும் அதன் உறுப்புகள் பரிணாம முறையில் வளருகின்றன என்னும் கருத்துக்கும் மார்க்சு கூறிய வருக்கப் போராட்டத்துக்கும் ஓரளவு ஒற்றுமை இருக்கிறது. தார்வின் கோட்பாடே செரிமி பெந்தம் (Jeremy Bentham), சேம்சு மில் (James S.Mill) முதலியோர் வகுத்த பயன்வழிக் கோட்பாட்டிற்கு (Utilitarianism) நற்பயனுடைய செயலே மக்களால் ஆதரிக்கப்பட்டு நிலைபெறும் என்ற கருத்தை அளித்தது. அதுவே ஏர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer) என்ற ஆங்கிலத் தனியாள் உரிமைக் கோட்பாட்டாளர்க்கு ‘வாழத் தகுதியுடையது பெருகி வாழும்’ என்ற கருத்தையும் அளித்தது. மேலும், அக்கோட்பாட்டின் ‘தகுதியுடையதன் வாழ்வு’ (Survival of the Fittest) என்னும் கருத்தே தனியார் பொருளாதாரக் கோட்பாட்டின் (Theory of Laissez Paire or Economic Individualism) சிறப்புக்கும் காரணமாக அமைந்திருந்தது.\n\nதுணை நூல்கள்\n\nAris, Reinhold, History of Political Thought in Germany from 1789 to 1815, London, 1936.\n\nHook, Sidney, From Hegel to Marx: Studies in the Intellectual Development of Karl Marx, New York, 1936."}}