{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vuafqesc/", "data": {"id": "vuafqesc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vuafqesc/", "kind": "article", "headword": "நுரையீரல்", "romanization": "nuraiyīral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.467541+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நுரையீரல் (கால்நடை)", "body_ta": "நுரையீரல் (கால்நடை)\n\nசுவாச மண்டலத்தின் இன்றியமையா உறுப்பான நுரையீரல், உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை உள்ளே இழுத்துக் கொண்டு, குருதியில் உள்ள தேவையற்ற கார்பன் டை ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றும் வளிமப் பரிமாற்றப் பணியை மேற்கொள்கிறது. நுரையீரலின் பணி அனைத்துக் கால்நடைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த போதிலும், அதன் உருவ அமைப்பில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.\n\nநுரையீரலின் அமைப்பு. மாடுகளில் இடம், வலம் என இரண்டு நுரையீரல்கள், மார்புக் கூட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டுள்ளன. ஏறக் குறைய 3 கி.கி. எடையுள்ள இந்நுரையீரல்கள், நீண்டு சுருங்கும் தன்மையுடனும், மென்மையுடனும், பஞ்சு போன்றும் காணப் படும். இதன் நிறம், உள்ளிருக்கும் குருதியின் அளவைப் பொறுத்து மாறுபட்டாலும், உயிருள்ள நுரையீரல் இளஞ்சிவப்பு வண்ணத்தில் காணப் படும். அழுத்தும் போது, மொடமொட வென்று ஒலி எழுப்பக் கூடியதாகவும், நீரில் மிதக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும். வல நுரையீரல், இட நுரையீரலை விடச் சற்றே பெரியதாகக் காணப் படும். பொதுவாக நுரையீரல்கள் மார்புக் கூட்டின் உட்புற அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட வடிவத்தை ஒத்திருக்கும். கருவிலி ருக்கும் போது, நுரையீரல்கள், சிறியனவாகவும், ஒலியெழுப்பும் தன்மையற்றும், நீரில் மூழ்கக் கூடியவையாகவும் இளஞ்சாம்பல் நிறத்துடனும் காணப் படும்.\n\nஒவ்வொரு நுரையீரலும் இரு புறப் பரப்புகளையும், இரண்டு எல்லைகளையும், ஓர் அடிப் பகுதி மற்றும் ஒரு நுனிப் பகுதி ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இரண்டு நுரையீரல்களும் மூன்று, மூன்று இதழ்களாக ஆழமாகப் பிளவு பட்டிருக்கும். <!---- Words repeated, removed ----> நுரையீரல்களின் உட்புறப் பரப்பின் மையப் பகுதியில் உள்ள சிறு பள்ளத்தில் (hilus) மூச்சுக் குழல், குருதி நாளங்கள், நிண நீர்க் குழல்கள் ஆகியவை கற்றையாய் நுழைந்திருக்கும். மூச்சுக் குழல் இடம், வலம் என இரு பிரிவுகளாகப் பிரிந்து, நுரையீரல்களின் இதழ்களுக்கு இணைப்பு ஏற்படுத்தியிருக்கும்.\n\nகுதிரைகளில், மாடுகளைப் போலல்லாமல், நுரையீரல்கள் உடற் பகுதியையும், நுனிப் பகுதியையும் கொண்டிருக்கும். மேலும், ஆழமான பிளவுகளால் பிரிக்கப்பட்டிரா. இதழிடைத் திசுக்கள் (Interlobular tissue) குறைவாக உள்ளமையால், நுரையீரல்களின் இதழ்ப் பிரிவுகள் நன்கு புலனாகா. மேலும், வல நுரையீரல் ஓர் இடைப்பட்ட இதழையும் கொண்டிருக்கும்.\n\nநாய்களில், வல நுரையீரல் நான்கு இதழ்களாகவும், இட நுரையீரல் மூன்று இதழ்களாகவும் அமைந்திருக்கும். எனினும், இதன் இதழ்ப் பிரிவுகள் தெளிவாக இரா. நகரத்தில் வாழும் நாய்களின் இதழிடைத் திசுக்கள் நிற மாற்றம் அடைந்திருக்கும்.\n\nசுவாசத்தின் தன்மை. கால்நடைகள் நின்று கொண்டிருக்கும் போது, சற்றுத் தொலைவில் இருந்து கவனித்தால், சுவாசத்தின் தன்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். படுத்திருந்தல், உடற் பயிற்சி, அச்சமுற்றிருந்தல் போன்ற காரணங்களால், சுவாசத்தில் மாறுபாடுகள் தென்டக் கூடும். ஒரு நிமிடத்திற்கு மாடு 10–30, குதிரை 8–10, செம்மறி ஆடு, பன்றி போன்றவை 10–20, வெள்ளாடு 25–35 முறைகளில் சுவாசிக்கின்றன. இதனை விலா எலும்புகளின் இயக்கம், மூக்குத் துளைகளின் இயக்கம், வெளியேற்றப்படும் காற்றைத் தொட்டறிதல் போன்றவற்றால் அறியலாம். சுவாசத்தின் அளவு அதிகரித்தோ, குறைந்தோ இருக்குமானால், அது ஒரு நோயின் வெளிப்பாடே என்பதை அறிந்து கொள்ளலாம். சுற்றுப்புற வெப்ப நிலை அதிகரிப்பதால், சுவாசத்தின் அளவும் இரு மடங்காக அதிகரிக்கக்கூடும்.\n\nசுவாச இலயம். பொதுவாக ஆரோக்கியமான சுவாசம், காற்றை உள்ளிழுத்தல், காற்றை வெளியேற்றல், இடை நிறுத்தல் என ஒரே அளவிலான மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். இதில் ஒன்றிலோ, மூன்றிலுமோ மாறுபாடு இருப்பின், அதுவும் நோயின் அறிகுறியாகும். நீண்ட நேரம் காற்று உள்ளிழுக்கப்படுமாயின், மேல் சுவாச மண்டலத்தில் ஏதாவது அடைப்பிருக்கக் கூடும். நீண்ட நேரம் காற்று வெளியேற்றப் படுமாயின், அது நுரையீரலின் குறைந்த இயக்கத்தைக் குறிக்கும். பெரும்பாலான நோய்களில், இடை நிறுத்தம் இராமலே, இரு பகுதியாகச் சுவாசம் நிகழ்ந்து கொண்டிருக்கும்.\n\nநுரையீரல் நோய்கள். நுரையீரல்களுக்குக் குருதி வரும் போது, அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வளிமத்தை அகற்றி, குருதியினுள் ஆக்சிஜன் ஏற்றும் திறனைக் கொண்டே, நுரையீரல்களின் நலம் அளவிடப் படுகிறது. இவ்விரு செயல்களும், பல்வேறு நோய்க் காரணங்களால் பாதிக்கப் படுவதுண்டு. இதனால், உடற் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததோடு, கார்பன் டை ஆக்சைடு தேக்கமும் ஏற்படும். இவ்வாறு குருதியிலும், திசுக்களிலும் தேங்கும் கார்பன் டை ஆக்சைடு, தானாகவே மூளையில் உள்ள சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் பகுதியைத் தூண்டி, சுவாச இயக்கங்களை அதிகப் படுத்தி விடுவதுண்டு. சுவாசத்திற்குப் பயன் படும் தசைகள் செயலிழந்து விடுமாயின், இத்தகைய தூண்டுதல் பயனளிப்பதில்லை. கீழ்க் காணும் காரணங்களால், நுரையீரல்களின் வளிமப் பரிமாற்றப் பணி பாதிக்கப் படுகிறது.\n\nசுவாச மண்டல நோய்கள். நிமோனியா, வீக்கம் போன்ற காரணங்களால் நுரையீரல் பாதிக்கப் படுதல், நுரையீரல்களில் உள்ள சிறு காற்றுப் பைகளில் அடைப்பேற்படுதல், காற்றறைகளின் அழுத்தம் உயர்ந்து விடல்.\n\nகுருதி மண்டல நோய்கள். பிறவியிலிருந்து உருவாகும் இதயக் கோளாறு, அதிர்ச்சி, நீர்ப் பற்றாக் குறை போன்ற நிலை, குருதியின் நீர்மப் பகுதி குறைந்து அடர்த்தி அதிகரித்தல், ஆக்சிஜனைத் திசுக்களுக்குக் கொண்டு செல்லும் சிவப்பணுக்களின் பற்றாக் குறையால் ஏற்படும் குருதிச் சோகை நோய், நைட்ரைட் போன்ற நச்சுப் பொருள்களால் சிவப்பணுக்களில் விளையும் மாற்றங்கள்.\n\nநரம்பு மண்டல நோய்கள். சுவாசத்திற்கு உதவும் தசைகளுக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளால் தசைகள் செயலிழந்து விடல், நிக்கோடின் சல்ஃபேட் போன்ற நச்சுப் பொருள்களால், மூளையில் உள்ள சுவாசத்தை இயக்கும் பகுதி செயலிழத்தல், ஏனைய மூளை நோய்களால் சுவாசத்தை இயக்கும் பகுதி தூண்டப்படுதல்.\n\nபிற காரணங்கள். வலி, காய்ச்சல், வயிற்றில் அமிலத் தன்மை கூடுதல் போன்ற காரணங்களால், சுவாசம் பாதிக்கப் படுதல், கரிம பாஸ்ஃபேட், அம்மோனியா போன்ற பண்ணை வேதிப் பொருள்கள், நச்சுத் தாவரங்கள், களைகள் போன்றவற்றால் பாதிக்கப் படுதல், தீ மற்றும் நச்சு வளிமங்களால் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்படுதல், உயரமான இடங்களில் போதுமான ஆக்சிஜன் இராமை.\n\nநுரையீரல் நோய்களைக் கட்டுப் படுத்துதல். நல்ல காற்றோட்டமான இடங்களில் மட்டுமே, கால்நடைகள் பராமரிக்கப் படுதல் வேண்டும். சுற்றுப் புறம் குளிர்ச்சியாக இருப்பது இன்றியமையாதது. குளிர் மிகுந்த நாள்களில் கூடுதல் வெப்பம் கொடுக்க வேண்டும். காற்று, புகை, தூசு இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான இருமல், சளி போன்றவற்றிற்கு உடன் மருத்துவம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளைத் தனியே பிரித்து, மருத்துவம் அளிக்க வேண்டும். கால்நடைகளை மிகுதியாக ஒரே இடத்தில் அடைத்து வளர்க்காமல், சிறு சிறு குழுக்களாகப் பிரித்துப் பராமரித்தல் வேண்டும். சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். —ஆர், கோவிந்தராஜு"}}