{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vjspkct9/", "data": {"id": "vjspkct9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vjspkct9/", "kind": "article", "headword": "உடன்படிக்கைத் துறைமுகங்கள்", "romanization": "uṭaṉpaṭikkait tuṟaimukaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.876781+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் வாணிகத்திற்குத் திறக்கப்படும் துறைமுகத்தை உடன்படிக்கைத் துறைமுகம் (Treaty Port) என்பர்.", "body_ta": "உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் வாணிகத்திற்குத் திறக்கப்படும் துறைமுகத்தை உடன்படிக்கைத் துறைமுகம் (Treaty Port) என்பர். இங்கிலாந்திற்கும் சீனாவிற்கும் இடையில் கி.பி. 1839–ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் ஆங்கில-சீனப்போர் அல்லது முதல் அபினிப்போர் கி.பி. 1842–ஆம் ஆண்டில் நான்கிங்கு உடன்படிக்கையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகள் சீனாவில் வாணிக உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் துறைமுகங்களில் அதாவது துறைமுக நகரங்களில் உடன்படிக்கை செய்துகொண்டன. இவ்வுடன்படிக்கை நிகழ்ந்த துறைமுகங்கள் உடன்படிக்கைத் துறைமுகங்கள் எனப்பட்டன.\n\nஇச்சூழ்நிலையில் மேலை நாடுகள் பல சீனாவுடன் வாணிக உறவு மேற்கொள்ள முற்பட்டன. தன்னைப் பண்பாட்டின் மேல்படி என்று எண்ணிக் கொண்டிருந்த சீனா, புதிய சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாகரிக முதிர்ச்சி பெறாத நாடுகளை ஒன்றன்மீது ஒன்றை ஏவிவிட முயற்சி செய்தது. அந்நாடுகளிடத்தில் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுப் ‘பிரிந்து தான் வாழவேண்டும்’ என்ற கொள்கையைப் பின்பற்றியது.\n\nஅமெரிக்கா சீனாவுடன் கி.பி. 1844–ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வாங்கியா உடன்படிக்கையினைச் (Treaty of Wanghia) செய்துகொண்டது. இது ஆங்கிலேயருடன் செய்துகொண்ட உடன்படிக்கையைப் போலக் காணப்பட்டது. அதன்படி அபினி வாணிகம் தடைசெய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்நாடு சீனாவில் சிறப்புரிமையுடன் வாணிகஞ் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. உடன்படிக்கைத் துறைமுகங்களில் திருச்சபை, மருத்துவமனைகள், வாழும் இல்லங்கள், இன்ன பிறவற்றைப் பாதுகாப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உடன்படிக்கையினைப் புதுப்பித்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\n\nபிரான்சு சீனாவுடன் வாம்போவா என்னும் இடத்தில் ஓர் உடன்பாடு செய்து கொண்டது. இதற்கு வாம்போவா உடன்படிக்கை (Treaty of Whampoa) என்றுபெயர். இதுவும் அதே ஆண்டு அக்டோபர்த் திங்களில் ஏற்பட்டது. வாங்கியா உடன்படிக்கையில் எவ்வெவ் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டனவோ அவ்வவ் விதிமுறைகள் இதற்குப் பொருந்தும் என்றனர். அத்துடன் கிறித்தவச் சமயத்தைத் தடையின்றிப் பரப்பவும் இவ்வுடன்பாட்டின் மூலம் வழி செய்யப்பட்டது. சீனாவும் இதை ஏற்றுக்கொண்டது.\n\nநார்வேயும் சுவீடனும் கி.பி. 1847–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் சீனாவுடன் ஓர் உடன்படிக்கையினைச் செய்துகொண்டன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்ற சில சிறப்புரிமைகளை அந்நாடுகள் பெற்றன.\n\nசீனாவுடன் பெல்சியமும் போர்ச்சுகல்லும் உடன்படிக்கையினைச் செய்து கொண்டு பல சிறப்புரிமைகளைப் பெற்றன. சுருங்கக்கூறின், சீனா நீட்டிய தாளில் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டது.\n\nஇவ்வுடன்படிக்கைகளால் சீனாவின் பெருமை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் இறைமை குறிப்பிட்ட அளவிற்குக் குறைந்து காணப்பட்டது. சீனாவின் வணிகக் கொள்கை பெருந்தோல்வியுற்றது. அவர்களுக்கே உரித்தான தனித் தன்மை வாய்ந்த, காசோடு கூடிய வணிகக் கொள்கை மறைந்து, காசில்லா நுழைவுச் சீட்டுக் கொள்கை அல்லது தடையிலா நுழைவுக் கொள்கை (Open door Policy) எழுந்தது. ஐரோப்பியர்கள் காண்டன் துறைமுகத்தில் மட்டும் வாணிகம் செய்து வந்தனர். இவ்வுடன்படிக்கைத் துறைமுகங்களால் பல இடங்களில் வாணிகம் மேற்கொள்ள வழி ஏற்பட்டது. இதனால், சீனாவின் பொருளாதாரம் பொலிவற்றுக் காணப்பட்டது. இவ்வாறு ஐரோப்பிய நாட்டவர்கள் சீனாவின் மீது வன்முறையில் பன்முறை புகுந்து, பல குடியேற்றங்களை ஏற்படுத்தி, ஓர் அரசினுள் அரசாக வளர்ச்சி பெற்று, வளமோடும் நலமோடும் நடைபோடத் தொடங்கினர். நா.ஜெ."}}