{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vbkv4ahu/", "data": {"id": "vbkv4ahu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vbkv4ahu/", "kind": "article", "headword": "இலாக்கு, அலைன்", "romanization": "ilākku, alaiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.184366+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அமெரிக்க நாட்டுக் கல்வியாளர், ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் வாழ்க்கை நடத்திய இவரே, தம் நீக்கிரோ இனத்து மக்கள் இசை, கலை, இலக்கியம் ஆகியவற்றில் தலைசிறந்து நிற்பதை அமெரிக்க மக்களுக்கு முதன் முதலாக எடுத்துரைத்தவர்.", "body_ta": "அமெரிக்க நாட்டுக் கல்வியாளர், ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் வாழ்க்கை நடத்திய இவரே, தம் நீக்கிரோ இனத்து மக்கள் இசை, கலை, இலக்கியம் ஆகியவற்றில் தலைசிறந்து நிற்பதை அமெரிக்க மக்களுக்கு முதன் முதலாக எடுத்துரைத்தவர்.\n\nஅலைன் இலாக்கு (Alain Locke) நீக்கிரோ இனத்தில் பிறந்தவர், இலாக்கு பிறந்த நகரம் பிலடெல்பியா (Philadelphia). இவர் தாய், தந்தை இருவருமே பள்னி ஆசிரியர்கள், இலாக்கு, மருத்துவம் படிக்க வேண்டும் எனப் பெற்றோர் விரும்பினர். இவரோ கல்வியியலில் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றுவிட்டார். ஆர்வார்டு (Harvard) ஆக்சுபோர்டு, பெர்லின் ஆகிய பல்கலைக் கழகங்களில் சேர்ந்து, தொடர்ந்து தத்துவம் படித்தார்.\n\nஇங்கிலாந்தில் படிப்பை முடித்தபின் 1912–இல் அமெரிக்கா திரும்பிய இலாக்கு வாசிங்டன்னிலுள்ள ஓவார்டுப் (Howard) பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இதே பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறைப் பேராசிரியராக முப்பத்தாறு ஆண்டுகள் (1918–54) பணியாற்றினார்.\n\nபேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, நீக்கிரோ இன மக்களின் கலை வாழ்க்கை, பண்பாடு ஆகியன குறித்து நூல்கள் எழுதினார். இந்நூல்களில் நீக்கிரோ இனப்பண்பாடு, அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒட்டியுள்ள தன்மைகளைச் சுட்டிக்காட்டினார். இவருடைய முதல் நூல் ‘புதிய நீக்கிரோ’ (The New Negro) 1925–இல் வெளியாயிற்று தொடர்ந்து ‘அமெரிக்காவில் நீக்கிரோ’ (1933), ‘நீக்கிரோவும் அவர் இசையும்’ (1936), ‘கலைகளில் நீக்கிரோ’ (1941) என்னும் நூல்களை வெளியிட்டார். இவை நீக்கிரோ மக்களின் கலை, பண்பாடு, இசைகளைத் தெரிந்து கொள்ள உதவும் மிகச் சிறந்தநூல்களாகக் கருதப்படுகின்றன."}}