{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6865w3h/", "data": {"id": "v6865w3h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6865w3h/", "kind": "article", "headword": "பக்ரா–நங்கல் அணைகள்", "romanization": "pakrā–naṅkal aṇaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.563114+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிந்து நதியின் ஐந்து கிளைகளுக்கு இறுதி ஆறு, சட்லெஜ் ஆகும்.", "body_ta": "சிந்து நதியின் ஐந்து கிளைகளுக்கு இறுதி ஆறு, சட்லெஜ் ஆகும். பிரிக்கப் படாத பஞ்சாப் மாநிலத்தை வளம் செய்த சிந்து நதியும், மூன்று கிளைகளும் பாகிஸ்தானில் உள்ளன. பக்ரா–நங்கல் அணைகள், எஞ்சிய சட்லெஜ் நதியில் அமைந்துள்ள இந்தியாவின் பஞ்சாப், இராஜஸ்தான் மாநிலங்களுக்குப் பாசன வளம் அளிக்கவும், மின் உற்பத்திக்கு உதவவும் கட்டப்பட்டுள்ளன.\n\nமானசரோவர் ஏரியில் தொடங்கும் சட்லெட்ஜ் நதி, மேற்கு நோக்கிச் சிவாலிக் மலைத் தொடரை அறுத்துக் கொண்டு ஓடுகிறது. அங்கு பக்ரா என்னும் இடத்தில் ஒரு பெரிய அணையும், அதன் கீழே 12 கி.மீ. தொலைவில் நங்கல் என்னும் இடத்தில் பிறிதோர் அணையும் சேர்ந்து, பக்ரா–நங்கல் அணைகள் எனப் படுகின்றன.\n\nபக்ரா அணை 225 மீ. உயரமும், 97.5 மீ. நீளமும்கொண்டது. இது, நேர் எடை அணை (Straight gravity dam) வகையைச் சேர்ந்தது. இதில், நீர் தேங்குமிடம், கோவிந்த சாகர் எனப் படும். நங்கல் அணை 28.5 மீ. உயரமும், 300 மீ. நீளமும் கொண்டது. இதிலிருந்து, நங்கல் கால்வாய் வெட்டப் பட்டு, பாசனத்திற்கு நீர் எடுக்கப் படுகிறது. இவ்வணைகள் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் 1050 கி.மீ. நீளம் கொண்ட கால்வாய்கள் வழி 5.86 மில்லியன் ஏக்கருக்குப் பாசனம் அளிக்கின்றன.\n\nபக்ரா அணையிலிருந்து கங்குவால், கோட்டா ஆகிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன. பக்ராவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தோடு சேர்ந்து, மூன்றும் 1.86 மில்லியன் கி.வாட் மின் ஆற்றல் அளிக்க வல்லன. சட்லெஜ் ஆறு, அடிக்கடி பெரு வெள்ளம் சூழக் கூடியது. வெள்ளத்தைக் கட்டுப் படுத்தி, அணையைக் கட்டி முடித்தது, அருஞ்செயலாகும். இதற்கு 1919–1930இல் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. 1946இல் இருப்புப் பாதை, இந்தப் பகுதிக்கு வந்ததும், மீண்டும் ஆய்வுப் பணிகள் தொடங்கின. 1948ஆம் ஆண்டு, இதன் கட்டுமானப் பணி தொடங்கியது.\n\nமலையின் இரண்டு பகுதியிலும் 15 மீ. விட்டம் கொண்ட இரண்டு சுரங்கங்கள் அமைக்கப் பட்டு அதன் வழியே வெள்ள நீர் அனுப்பப் பட்டது. 64.5 மீ. உயரத்தில் முன் பக்கம் ஒரு தடுப்பணையும் 7.5 மீ. உயரத்தில் பின் பக்கம் ஒரு தடுப்பணையும் அமைத்து, இடையில் நீரை இறைத்து, அணை கட்டத் தொடங்கினர். முழுக்க எந்திரங்களாலேயே, சிமிட்டிக் கற்காரை கலந்து, இதில் கொட்டப் பட்டது.\n\nஇதற்கு ஒரு மணி நேரத்தில், 600 டன் கற்காரை போடும் திறன் கொண்ட எந்திரங்கள் பயன் பட்டன. மொத்தம் 4.2 மில்லியன் கன மீட்டர் சிமிட்டிக் கற்காரை பக்ரா அணை கட்டுவதற்குத் தேவைப் பட்டது.\n\nகோவிந்த சாகர் 2.4 மில்லியன் ஏக்கர் மீ. மொத்தப் பரிமாணம் கொண்டது. இதில் 1.9 மில்லியன் ஏக்கர் மீ. நீர் பயன்படு தன்மை கொண்டது. இதில் 1.2 மில்லியன் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி ஆகும். மின்னிலையங்களில் பயன் படும் சுழலி, ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. மின்னாக்கிகளும், மின் மாற்றிகளும், பிரிட்டனிலிருந்தும், சுமை தூக்கிகள் யுகோசுலோவாகியாவிலிருந்தும் பெறப் பட்டன.\n\nவிடுதலை பெற்ற இந்தியாவில் கட்டப் பட்ட மிகப் பெரிய அணை இதுவாகும். 1948இல் தொடங்கி, 1962இல் இப்பணி முடிந்தது. அப்போது மிகப் பெரிய அணையாக இருந்த 220 மீ. உயரமான ஹுவர் அணையை விட, இது பெரியதாக இருந்தது குறிப்பிடத் தக்கது. —கொடுமுடி சண்முகம்"}}