{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v2dqrgfv/", "data": {"id": "v2dqrgfv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v2dqrgfv/", "kind": "article", "headword": "இளங்கோ முத்தரையன்", "romanization": "iḷaṅkō muttaraiyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.918597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "முத்தரைய வேந்தருள் விடுதலை பெற்றுத் தனித்தாண்ட வேந்தன்.", "body_ta": "முத்தரைய வேந்தருள் விடுதலை பெற்றுத் தனித்தாண்ட வேந்தன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவ்வேந்தன் தன் கல்வெட்டுகளில் தன் ஆட்சியாண்டை மட்டுமே குறித்துள்ளான். மற்ற முத்தரைய வேந்தர்களைப் போன்று தன் தலைவனான பாண்டிய மன்னனின் ஆட்சியாண்டையோ பல்லவ மன்னனது ஆட்சியாண்டையோ இவன் குறிப்பிடவில்லை. எனவே, இவன் தனியுரிமை பெற்ற வேந்தன் என்பது தெளிவு. இவன் கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செந்தலை, நியமம் கோயிலடி, திருக்கோடிகாவல், திருச்சாத்துறை, திருச்சென்னம்பூண்டி, கீரனூர் முதலான இடங்களில் காணப்படுகின்றன. பல்லவர் ஆட்சி சீர்குலையத் தொடங்கியபோது, இவன் தன் மேலாண்மையை விரிவுபடுத்தினான்.\n\nமுத்தரைய மன்னர் வரிசையில் இவன் தனக்கெனத் தனித்ததோர் இடத்தினைப் பெற்றுள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் முத்தரையர் நாடு கிழக்குப் பகுதியில் (கும்பகோணம் வட்டம்) விரிவடைந்தது. முத்தரைய வேந்தருள் பரந்துபட்ட அரசினை ஆண்ட பெருமை இவனுக்கு உண்டு.\n\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருக்கோடிகாவலில் உள்ள திருக்கோடீசுவரர் கோயிலில் காணப்படும் இவ்வேந்தனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இக்கோயிலுக்கு ஆடுகள் தானமளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வேந்தனது கீரனூர்க் கல்வெட்டு, இவனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் கீரனூர்ச் சபையாரும் தனியாரும் இவ்வூர் உத்தமதானீசுவரத்துப் பெரு- மானடிகள் கோயிலில் திருவிழா நடத்த நிலதானம் செய்ததைக் குறிப்பிடுகிறது. இதே ஆட்சியாண்டைச் சேர்ந்த இவ்வேந்தனது திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டு, இவன் இக்கோயிலுக்கு நந்தா விளக்கெரிக்கப் பொன் தானமளித்ததைக் குறிப்பிடுகிறது. திருச்சாத்துறைக் கல்வெட்டொன்று, இவன் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் இறைவர்க்கு ‘உத்தமதானி’ பெயரில் நந்தா விளக்கெரிக்க நிலதானம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. ‘உத்தமதானி’ என்பது இவனது விருதுப் பெயராகும். திருக்கோடி காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் காணப்படும் இவ்வேந்தனது பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் பொன் தானத்தையே குறிப்பதாக உள்ளது. தஞ்சை மாவட்டம் நியமத்தில் காணப்படும் 18 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இவனது இறுதியாண்டுக் கல்வெட்டாகத் தெரிகிறது. எனவே, இவன் குறைந்தது 18 ஆண்டுகள் ஆண்டான் எனலாம்.\n\nநியமத்து மாகாளத்துப் பிடாரிக்கு அறக்கொடை விட்டுள்ள இவன், ‘தென்னவன் இளங்கோ முத்தரையன்’, ‘கோ இளங்கோ முத்தரையன்’–முதலான பெயர்களாலும் குறிக்கப்பட்டுள்ளான். கீரனூர் உத்தமதானீசுவரம், கீழத்தானியம் உத்தமதானீசுவரம் ஆகியன இவ்வேந்தனது நினைவாகவே எடுக்கப்பெற்றன போலும். திருச்சி மாவட்டம், அரியலூர் வட்டம் மேலப்பழுவூர்க் கல்வெட்டு ‘உத்தமதானிச் சதுர்வேதி மங்கலம்’ பற்றிச் சுட்டுகிறது. உத்தமதானி, உத்தமதானீசுவரம், உத்தமதானிச் சதுர்வேதி மங்கலம் ஆகியன இவ்வேந்தனை நினைவுபடுத்துகின்றன.\n\nஇளங்கோ முத்தரையன் யாருக்கு மகன் என்பதும் முத்தரையர் குடிவழிப்பட்டியலில் இவனது இடம் யாது என்பதும் புதிராக உள்ளன. வரலாற்றறிஞர் சிலர் இரண்டாம் பொரும்பிடுகு முத்தரையனே (இளங்கோ வதியரையனான மாறன் பரமேசுவரனின் மகன்) இவன் எனக் கூறுவர்.\n\nஇளங்கோவதியரையன் என்ற இவன் தந்தையின் சுருக்கப் பெயரே இளங்கோ என இவன் பெயருக்கு முன்னர் அமைந்துள்ளது. வேறு சிலர் சாத்தன் பழியிலி (விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தன் மகன்) என்பவனே இவன் எனக் கூறுவர். மற்றும் சிலர் விடேல் விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இவன் என்றனர் இவையனைத்தும் பிழையானவை. இளங்கோமுத்தரையன் இளைய தலைமுறையைச் சார்ந்தவன் என்பதும் இவன் தனி மன்னனே என்பதும் உறுதி.க.ம."}}