{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqt87a2s/", "data": {"id": "uqt87a2s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqt87a2s/", "kind": "article", "headword": "சீர்மை", "romanization": "cīrmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.950876+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "", "body_ta": "மின் பாதை மின்னழுத்தம், சுமை போன்றவற்றில் வேறுபாடுகள் இருப்பினும், ஓர் அளவை அல்லது நிலைமையை முதன்மையாக மாறாது பராமரிக்கும் ஒரு செயல் துறையே சீர்மை (regulation) எனப்படும், தொழிலியல் செயல் முறைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில், வேகம், வெப்ப நிலை, மின்னழுத்தம் அல்லது முதன்மை உறுப்பின் நிலை ஆகியவை சீர்மைக்குள்ளாகும் நிலைமையை அளந்து பின்னூட்டு முறைகளைக் கையாளுவதால் மாறாது வைக்கப்படுகின்றன. அதற்காகத் தேவைப்பட்ட அளவைக்கும் உண்மை நிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் ஒரு குறிப்பு அமைப்பில் செலுத்தப்படுகிறது.\n\nஎடுத்துக் காட்டாக, வேதிப் பொருள்களின் கலவையின் வெப்ப நிலை மிகக் குறைவாக இருப்பின் ஓர் உணரும் உறுப்பு கட்டுப்படுத்திக்கு ஒரு குறிப்பை அனுப்பி மிகு வெப்பம் கொடுக்குமாறு செய்கிறது. சீர்மை எனும் சொல்,, மாறுபடும் பொருளில் ஒரு பாதை அல்லது கருவியின் முனையத்தில் பெறும் மின்னழுத்தக் குறைவைக் குறிப்பிடுகிறது. அது விழுக்காடுகளிலும் குறிப்பிடப்படும். அது போன்றே வேறு எந்த அளவை அல்லது நிலையில் ஏற்படும் குறைவையும் அது குறிப்பிடப் பயன்படும்.\n\nசீர்மையில், மின்னழுத்தச் சீர்மை (voltage regulation) என்றும், வேகத்தின் சீர்மை (speed regulation) என்றும் இரு பகுதிகள் உண்டு. முன்னது மின் இயக்கிகளிலும், மின் மாற்றிகளிலும் உள்ளது. பின்னது, மின்சார மின்னோடிகளில் குறிக்கப் படுகிறது. சீர்மை செய்வதற்குச் சீராக்கி (regulator) என்ற கருவி பயன்படுகிறது. —எஸ், சுந்தரசீனிவாசன்"}}