{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uh4axack/", "data": {"id": "uh4axack", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uh4axack/", "kind": "article", "headword": "உக்கிரப்பெருவழுதி", "romanization": "ukkirapperuvaḻuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.736374+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சங்க காலத்துப் பாண்டிய மன்னருள் ஒருவன்.", "body_ta": "சங்க காலத்துப் பாண்டிய மன்னருள் ஒருவன். இவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, கானப்பேரெயில் கடந்த (தந்த?) உக்கிரப்பெருவழுதி எனவும் வழங்கப்பட்டான். பாண்டி நாட்டிற்கும் சோழ நாட்டிற்குமிடையே அகழியும் புரிசையும் ஞாயிலும் மிளையும் கொண்டு விளங்கிய கானப்பேரெயிலை, அதற்குரிய வேங்கைமார்பனைப் போர்க்களத்தில் தோற்கடித்து வென்ற பெருவீரனாக ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவரால் இவன் பாராட்டப்பட்டுள்ளான் (புறம். 21). இதனாலும், சேர சோழ அரசர்களோடு இவன் சமனாக நட்புக் கொண்டிருந்த காரணத்தாலும் இவன் சங்க காலத்தில் வலிவும் பொலிவும் மிக்க ஓர் அரசனாக விளங்கியிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. சேரன் மாரி வண்கோ, சோழன் பெரு நற்கிள்ளி ஆகியோருடன் இவன் ஒருங்கு விளங்கிய காட்சியை ஔவையார் புறநானூற்றில் பாராட்டியுள்ளார் (புறம். 367).\n\nஇவன் ஆட்சித்திறனிலும் போர்வன்மையிலும் மிக்கவன் என்பதனோடு புலமையிலும் வல்லவன் என்பதனை அகநானூற்றிலும் (26), நற்றிணையிலும் (98) இவன் பாடிய பாடல்கள் விளக்குகின்றன. இவை அரசியல் கலவாத அகப்பொருள் பாடல்களாக விளங்குகின்றன. ‘இவனே உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மனாரைக் கொண்டு அகநானூற்றைத் தொகுத்தான்’ என அந்நூலின் இறுதிக் குறிப்புத் தெரிவிக்கிறது. தமிழ்ச்சங்கம் பற்றிய பிற்காலக் கதையில் இவன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கவி அரங்கேறிய அரச புரவலர்களுள் இவனும் ஒருவன் என அக்கதை கூறுகிறது. இவன் பங்கேற்ற அவையில், வள்ளுவரின் முப்பால் நிறைவேற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. முப்பாலைப் புகழ்ந்து, ‘நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா வள்ளுவனாய்த் தந்துரைத்ததாக’ இவன் பாடிய ஒரு பாடல் திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளது.\n\nதமிழ்ச் சங்கத்தோடு இவன் தொடர்பு கொண்ட கதைக்கு இவன் பெயரில் இடம் பெற்றிருக்கும் உக்கிரன் என்னும் சொல்லும், அதன் பிற்காலப் புராண மரபும் காரணம் ஆயின போலும்.தி.மு."}}