{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uc8maa2x/", "data": {"id": "uc8maa2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uc8maa2x/", "kind": "article", "headword": "இலாகேசு", "romanization": "ilākēcu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.265280+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சுமேரியாவில் தென் பாபிலோனியப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான ஊர்.", "body_ta": "சுமேரியாவில் தென் பாபிலோனியப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான ஊர். ஊர் (Ur) என்னும் பழமையான சிறப்புப் பெற்ற நகரத்திற்கு வடக்கே இலாகேசு (Lagash) அமைந்துள்ளது. இன்று தென்கிழக்கு ஈராக்கில் உள்ள தெல்லோ (Telloh) என்னும் சிற்றூரே அன்றைய இலாகேசு ஆகும். இங்குப் பிரெஞ்சு நாட்டைச் சேர்த்த தி. சார்செக்கு (De–Sarzec) என்பவர் அகழாய்வினை மேற்கொண்டார். இவ்வகழாய்வின் மூலம் தொன்மையான சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வூரில் கி.மு. 3000–இல் ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்துள்ளது. இந்நாகரிகம் பின்னர்ச் செமிட்டிக்கு இன அக்காடு (Akkad) மரபினைச் சார்ந்த சார்கோன் (Sargon) என்னும் மன்னரின் ஆட்சியின் மூலம் அழிக்கப்பட்டது. இவ்வூரில் மீண்டும் நாகரிகமும் பண்பாடும் ஊர் (Ur) நகரை ஆண்ட 3–ஆம் மரபினர் காலத்தில் தோன்றின. குறிப்பாகக் குடியா (Gudea) என்னும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இந்நகரத்தின் நாகரிகம் பெருவளர்ச்சியடைந்தது. அகழாய்வில் 30,000க்கும் மேற்பட்ட ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட தகடுகள் இங்குக் கிடைத்தன. பெயர் பொறிக்கப்பட்ட பிணந்தின்னிக் கழுகு ஒன்றின் சிலையும், குடியாவின் உருவச்சிலையும், வெள்ளியால் செய்யப்பட்ட குடுவையும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இக்குடுவையில் மரபுரிமைச் சின்னம் தாங்கிய மேலங்கி பொறிக்கப்பட்டுள்ளது. கல்லினால் செய்யப்பட்ட பொருள்களும் வெண்கலப் பொருள்களும் அகழாய்வில் கிடைத்தன."}}