{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u52wenpu/", "data": {"id": "u52wenpu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u52wenpu/", "kind": "article", "headword": "இலெவின்", "romanization": "ileviṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.568421+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செருமனியைச் சேர்ந்த முழுமைக் கோட்பாட்டு உளவியலறிஞர் (Gestalt Psychologist), குர்ட்டு இலெவின் (Kurt Lewin) பெர்லின் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று அப்பல்கலைக்கழகத்திலேயே உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.", "body_ta": "செருமனியைச் சேர்ந்த முழுமைக் கோட்பாட்டு உளவியலறிஞர் (Gestalt Psychologist), குர்ட்டு இலெவின் (Kurt Lewin) பெர்லின் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று அப்பல்கலைக்கழகத்திலேயே உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் 1933–ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று அங்குக் கார்னெல் (Cornell) அயோவா (Iowa) போன்ற பல்கலைக் கழகங்களில் உளவியல் பேராசிரியராக இருந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் இலெவின் மசாசுசெட்சு தொழில்நுட்ப நிலையத்தில் (Massachusetts Institute of Technology) குழு இயங்கியல் ஆய்வு மையத்தின் (Research Centre For Group Dynamics) இயக்குநரானார்.\n\nலெவின் முழுமை உளவியலின் விதிகளையும் கோட்பாடுகளையும் சமூக உளவியலுக்குப் பயன்படும் முறையில் அமைத்தார்; உளவியலில் களக் கோட்பாட்டினை (Field Theory) உருவாக்கினார். மனிதர்களின் நடத்தைகளை அவை நிகழும்பொழுது அவற்றின் சூழமைவுகளுடனும் அவை நிகழ்வதற்குக் காரணமாக இருக்கும் இயங்குமுறைகளுடனும் பொருத்தப்படுத்தி ஆராய்தலே களக்கோட்பாடாகும். இக்கோட்பாட்டிற்கு இலெவின் இடவியல் (Topology) துறையின் கொள்கைகளைப் பயன்படுத்தினார். இவர் எழுதிய நூல்களுள் ஆளுமையின் இயக்கக் கோட்பாடு (Dynamic Theory of Personality), இடவியல்சாரி உளவியல் விதிகள் (Principles of Topological Psychology), சமூக அறிவியலில் களக்கோட்பாடு (Field Theory in Social Science) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்."}}