{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tzbyjtfm/", "data": {"id": "tzbyjtfm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzbyjtfm/", "kind": "article", "headword": "இனவகைப்பாட்டின் அலகுகள்", "romanization": "iṉavakaippāṭṭiṉ alakukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.665826+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மனித குலத்தின் மிகப் பெரும் பிரிவே இனமாகும்.", "body_ta": "மனித குலத்தின் மிகப் பெரும் பிரிவே இனமாகும். இவ்வினக் குழுவினர் உடற்கூற்று அமைப்பிலும் உருவத் தோற்ற அமைப்பிலும், மரபுவழித் தொடரும் ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பர். இம்மரபுவழிப் பண்புகளை (Genetic Traits) அடிப்படையாகக் கொண்டே மனித இனம் பலவாறாகப் பிரிகிறது. இம்மரபுவழிப் பண்புகளையே இனவகைப்பாட்டின் அலகுகளாக இனவியலார் பயன்படுத்துகின்றனர். மனித இனத்தைப் பல்வேறு இனக்குழுக்களாக வகைப்படுத்தக் கையாளப்படும் அலகுகளை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.\n\nமுதற் பிரிவில் பொதுவான மாறுபட்ட பண்புகளைக் கொண்டதும் எளிதில் கையாளக் கூடியதுமான புறத்தோற்ற அலகுகளான தோலின் நிறம், மூக்கு அமைப்பு, முக வடிவம், தலை முடி, தலை அமைப்பு, கண், உடலுயர்வளவு (Stature), தோற்கூற்றியல் (Dormatoglyphics) முதலானவை அடங்கும். இவ்வலகுகள் பார்வைக்குரியனவாகவும், ஆய்வுக் கருவிகளைக் கொண்டு எளிதில் அறியக்கூடியனவாகவுமுள்ளன.\n\nபொதுவான உடலியற் பண்புகளான இரத்த வகைகள் இரண்டாம் பிரிவில் அடங்கும். மூன்றாம் பிரிவில், குருட்டுத் தன்மை (Colour Blindness) கரியக நெய்ம (Phenylthiocarbomide–PTC) ஆய்வு, மிகக் குறைந்த அளவில் நிகழும் இயல்பற்ற பண்புகள் ஆகியன அடங்கும்.\n\nஇனவகைப்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் அலகும் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும். பொதுவாகப் புறஉறுப்புகளாக அமைந்திருக்கும். இதனால், ஒவ்வோர் ஆய்வாளரும் தனித்தனியான வேறுபாட்டினைக் கொள்ளாமலிருப்பர்.\n\nஇந்த அலகு, இயற்கைத் தேர்விற்கு உட்படாமலும் இருக்காது; இயற்கையோடு தகவமையும் பண்புகளாகவும் இருக்காது. இனவகைப்பாட்டிற்குக் கையாளப்படும் அலகுகள், எவ்விதச் சூழ்நிலைக் காரணிகளாலும் உடனிகழ்வாலும் (Mutation) மாறும் தன்மையற்றவை.\n\nஇந்த அலகுகள் அனைத்தும் மரபுக்கீற்றுச் (Chromosome) செயல்களினாலும் உடன்நிகழ்வால் ஏற்படும் பண்புகளாலும் பாதிக்கப்படாமலிருக்கும்.\n\nபுறத்தோற்ற உடற்பண்புகள்\n\nதோலின் நிறம்\n\nஇனக் குழுக்களிடையே முப்பெரும் நிறத்தில் தோலின் நிறம் காணப்படுகிறது. தோலின் நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் மரபுவழிச் செல்வதாகும். வெள்ளை நிறத் தோல் (Leucoderm) மஞ்சள் நிறத் தோல், (Xanthoderm), கருப்பு நிறத் தோல் (Melanoderm) ஆகிய இம்மூன்று நிறங்களில் காணப்படும் இனக் குழுக்களை வகைப்படுத்த நிறமிகளே காரணங்களாக அமைகின்றன.\n\nவெள்ளை நிற மக்களுள்\n\n(Leucoderms) ஐரோப்பியர் மட்டுமல்லாது மேற்கத்திய ஆசியர், பாலினீசியர் முதலானோர் இளஞ்சிவப்பிலிருந்து மிதமான பழுப்பு வரை காணப்படுகின்றனர். ஆசிய மங்கோலியர்கள் மஞ்சள் நிற (Xanthoderm) மக்களுக்கு எடுத்துக் காட்டாவர். பர்மா, சைனா, இந்தியாவின் வடகிழக்கு மலைப்பகுதியினரில் பெரும்பாலோரும் மஞ்சள் நிறத்தோல் கொண்டிருப்பதால் மங்கோலிய இனத்தவராவர். இவர்களைத் தவிர்த்து அமெரிக்க இந்தியர்களும் இந்த நிறமியைக் கொண்டுள்ளனர். கருமை நிற (Melanoderm), மக்களின் பேராளிகள் நீக்கிரோக்கள் ஆவர். இவர்களைத் தவிர்த்துக் கருமை நிறமுடைய ஆப்பிரிக்கர், பழுப்புக் கலந்த கருப்பு நிறத்தோலுடைய பாப்புவர் (Papuans), மெலனீசியர் (Melanesians), திராவிடர்களுக்கு முந்தியவர்கள், ஆசுத்திரேலிய முதுகுடிகள் முதலானவர் இவ்வகையில் அடங்குவர்.\n\nமயிர்\n\nமிக எளிமையான முறையில் கையாளப்படும் அலகுகளில் மயிரும் ஒன்றாகும். மயிரின் அமைப்பு (Hair form), நிறம், தன்மை (Texture), அளவு (Quantity), மயிரின் குறுக்கு வெட்டுத் தோற்றம், தலைச்சுழி (Hair Whorl) முதலான பண்புகளை ஆராய்ந்து அதனடிப்படையிலும் இனத்தை வகைப்படுத்துவர். மயிரின் அமைப்பு மூவகையானது: 1. வழவழப்பான மயிர் (Leiotrichous), 2. வளைவமைப்புடைய மயிர் (Cymotrichous), 3. சுருள் சுருளான மயிர் (Ulotrichous), வழவழப்பான அமைப்புடைய (Smooth form–Leiotrichous) மயிர் மங்கோலிய இனத்தவரிடையே காணப்படுகிறது. இவ்வகையில் மயிர் பொதுவாக நேராகவும் சொரசொரப்பாகவும் நிமிர்ந்தும் தட்டையான வளைவையும் (Flat wavy) கொண்டிருக்கும். வளைவமைப்புடைய (Wavy form–Cymotrichous) மயிர் வகையில் மயிர் அகல வளைவாகவும் (Broad wavy), குறுகிய வளைவாகவும் (Narrow wavy) காணப்படும். இவ்வமைப்புடைய மயிரினை ஐரோப்பியர், வடகிழக்கு ஆப்பிரிக்கர், மத்திய தரைக்கடல் மக்கள், ஆல்பைன் மக்கள், நார்டிக்கு மக்கள், மேற்கத்திய ஆசியர்கள் முதலானோர் கொண்டுள்ளனர். மூன்றாம் வகையான சுருள் சுருளான முடியமைப்பினை நீக்கிரோ (Negro), நீக்கிரில்லோ (Negrillo), நீக்கிரிட்டோ (Negrito), பாப்புவர் (Papuans), மெலனீசியர் (Mellanesian), புசுமன் (Bushman) முதலானோர் கொண்டுள்ளனர். மூன்றாம் வகையான சுருள் சுருளான முடிவகையில் மயிரின் வளைவு மிகுதியாகவும் குட்டையாகவும் காணப்படும். புசுமென்களிடையே பருமனான பின்னலைக் கொண்ட மயிர் காணப்படினும் அவர்கள் மிகுந்த நெருக்கமுடைய சுருளமைப்பினையே கொண்டுள்ள- னர். சுருள்சுருளான மயிர் வெப்பப் பகுதிகளிலும் ஈரப்பதம் மிகுந்த கால நிலைகளிலும், வழவழப்பான மயிர் வறண்ட பகுதிகளிலும் குளிர்பகுதிகளிலும், வளைவமைப்புடைய மயிர் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சூழ்நிலையில் வாழும் மக்களிடத்திலும் காணப்படுகிறது. இன அடிப்படைக்காக எடுத்துக் கொள்ளப்படும் அலகு சூழ்நிலைக் காரணிகளால் தகவமையாதது எனினும், மயிரின் தன்மையைப் பல்வேறு சூழ்நிலையில் வாழும் இனத்தவரிடையே உற்று நோக்கும்பொழுது, இக்கருத்துச் சற்று மாறுபடுகிறது. எனினும், இவ்வலகினைக் கொண்டு இனங்களை வகைப்படுத்த இயலும்.\n\nமயிரின் நிறத்தை முதன்மையாகக் கொண்டு இனக்குழுக்களை வகைப்படுத்துவதில்லையாயினும் இது ஒரு துணை அலகாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய மக்களிடையேயும் வடஆசிய மக்களிடையேயும் மயிரின் நிறம் பரவலாக மாறுபடுகிறது. நடுநிலக் கடற் பகுதியினர் கருமை நிற மயிரையும், வடஐரோப்பாவினர் இளம் பழுப்பு நிறத்திலிருந்து சிவப்புநிறம் வரையிலும் கொண்டிருக்கின்றனர்.\n\nநுண்ணோக்கியின் உதவியுடன் மயிரின் பருமனை அளவிட்டுப் பல்வேறு இனமக்களிடையே காணப்படும் வேறுபாட்டினை விளக்குகின்றனர். 56μ அலகு வரை மென்மையான மயிர் எனவும், 57μ –84μ வரை நடுத்தர மயிர் எனவும் 85μ அலகுக்கு மேலான மயிரைச் சொரசொரப்பான மயிரெனவும் வகைப்படுத்துகின்றனர். மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்கள் சொரசொரப்பான மயிரையும், வெள்ளை நிறத்தவர் நடுத்தரமான மயிரையும் கொண்டுள்ளனர்.\n\nஉடலில் மயிரின் அளவு குறைவானதாகவும், நடுத்தரமாகவும், மிகுதியானதாகவும் காணப்படும் வகையில் இனக்குழுக்கள் காணப்படுகின்றன. உடல், மீசை, தாடி ஆகியவற்றில் காணப்படும் மயிரின் அளவும் கணக்கிடப்படுகிறது. நீக்கிரோக்களும் மங்கோலியர்களும் முகம், உடல் முழுவதுமே அடர்த்தியான மயிரைக் கொண்டிருப்பதில்லை. வெள்ளை இன மக்கள் மிகுதியாகவும் அடர்த்தியாகவும் மயிரைக் கொண்டிருக்கின்றனர்.\n\nமயிரின் குறுக்குவெட்டுத் தோற்றம்\n\nவட்ட வடிவம், நீள் உருண்டை வடிவம் முதலான இவ்விரண்டு வகையிலேயே மயிரின் குறுக்கு வெட்டுத் தோற்றம் காணப்படுகிறது. நேரான முடியிலிருந்து குறுகலான வளைவு வரையுடைய முடியமைப்பினைக் கொண்ட மங்கோலியர், காக்கேசியர் இனத்தவர், ஐரோப்பியர் முதலானோரின் மயிரின் குறுக்கு வெட்டுத் தோற்றம், வட்ட வடிவைக் காட்டுகிறது. நீண்டுருண்ட குறுக்குவெட்டுத் தோற்றம், நீக்கிரோ இன மக்களின் சுருள் சுருளான முடியமைப்பைக் காட்டுகிறது. இருப்பினும், இவ்வளவை மானிடவியலார் முதன்மையாகக் கையாளுவதில்லை.\n\nதலை அமைப்பு\n\nதலையைப் போல் வேறெந்த மனித உடற் பகுதியும் மானிடவியலாரால் மிக விரிவாக ஆராயப்படவில்லை. இப்பகுதி எளிதில் அளவிடக் கூடியதாகும். சூழ்நிலையாலும் புறக் காரணிகளாலும் தலைப்பகுதி மாற்றம் பெறுவதில்லை. இதனாலேயே இனவகைப்பாட்டின் முதன்மையான அலகுகளுள் தலைப்பகுதியும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தலையின் வடிவங்கள் நீள்வட்டமாகவும், ஐங்கோண வடிவமாகவும், நீண்டும் குறுகியும் பல்வேறு வகைகளில் காணப்படுவதால். பல்வேறு இனமக்களிடையேயும் தலையமைப்பு அளவுகள் எடுத்து ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்வது கடினமாகிறது. இதனாலேயே தலை அல்லது மண்டையோட்டின் அதிகப்படியான நீளத்தை நூறால் பெருக்கி அம்மண்டையோட்டின் அதிகப்படியான அகலத்தால் வகுத்துக் கிடைக்கும் அளவே மண்டையோட்டின் அளவுக் குறியீடாகும் (Cephalic Index), மார்ட்டின் (Martin) என்பவர் மண்டையோட்டின் நீள அகலங்களைப் பொறுத்துப் பல வகைகளாகத் தலை அமைப்பினைப் பகுத்துள்ளார். 69.9 வரை அளவினைக் கொண்ட தலையமைப்பை முகம் நீண்டு குறுநிய தலையமைப்பு எனவும், 70.00 – 75.9 வரையுள்ள தலையினை நீண்டு குறுகிய தலையமைப்பு (Dolicocephalic} எனவும், 76.00 – 80.9 அளவுள்ளவற்றை நடுத்தரத் தலையமைப்பு (Mesocephalic) எனவும் 81.0–85.5 அளவுள்ளவற்றைக் குறுகி அகன்ற தலையமைப்பு (Hyperbrachycephalic) எனவும், 85.6க்கு மேல் அளவுள்ள தலைகளை மிகக் குறுகி அகன்ற தலையமைப்பு (Brachycephalic) எனவும் வகைப்படுத்துவர். மங்கோலியர் (Mongoloid), நீக்கிரோ (Negroid) காக்கேசியர் (Caucasoid) ஆகிய மூன்று இனங்களிலுமே பொதுவாக அனைத்து வகைத்தலை அமைப்புகளும் காணப்படினும் அளவு மாறுபடுகிறது. மங்கோலியர் இனத்தில் நீண்டு குறுகிய தலையமைப்பும், நீக்கிரோ இனத்தில் குறுகிய அல்லது அகன்ற தலையமைப்பும் மிகுந்து காணப்படுவதில்லை. காக்கேசியர் இனத்தில் மூன்று வகைகளுமே காணப்படுகின்றன. தொல்லுயிரியல் (Palaeontology) சான்றுகளின்படி ஆதிமனிதன் நீண்டு குறுகிய தலையமைப்பைக் கொண்டிருந்தான். உடன்நிகழ்வாலும் ஏனைய காரணங்களாலும் பிற்காலத்தில் குறுகிய அல்லது அகன்ற தலையமைப்புத் தோன்றியது.\n\nமுகம்\n\nமுகவமைப்புப் பொதுவாக நீள்வட்ட வடிவமாகவும் வட்டமாகவும் அகன்றும் ஐங்கோண வடிவமாகவும் காணப்படும். தலை அமைப்பைப் போன்றே முகத்தின் நீளத்தை 100-ஆல் பெருக்கி முகத்தின் அகலத்தால் வகுத்துக் கிடைக்கும் முக அளவுக் குறியீட்டை (Facial Index) வைத்து முக அமைப்பை வகைப்படுத்தலாம். அளவு 78.9 வரையுள்ள முகங்களை மிக அகன்றதாகவும் (Hyper Euryprosopic), 79.0 – 83.9 அளவுடையவற்றை அகன்றதாகவும் (Euryprosopic), 84.0–87.9 அளவுடையவற்றை நடுத்தரமாகவும் (Mesoprosopic), 88.0 – 92.9 அளவுடையவற்றைக் குறுகிய முகங்களாகவும் (Leptoprosopic), 93.0 அளவுடையவற்றை மிகக் குறுகிய முகங்களாகவும் (Hyper Leptoprosopic) வகைப்படுத்துவர்.\n\nஅகன்ற முகம் பொதுவாக அகன்ற மண்டையோடு கொண்டதாக இருக்கும். இதைப் போன்றே குறுகிய முகம் நீண்டு குறுகிய மண்டையோடு கொண்டதாக இருக்கும். இவ்வமைப்பு ஒருவகைப்பட்டதாகும் (Harmonic), நீண்ட தலையும் அகன்ற முகமும் குரோமேக்னன் (Cro–magnon) வகைகளிலும், எசுகிமோக்கள் (Eskimos) இடையேயும் காணப்படுகின்றன. ஆர்மீனியர் (Armenoid) மக்கள் குறுகிய முகங்களுடன், சிறியதும் அகன்றதுமான மண்டையோட்டினைப் பெற்றுள்ளனர். இதைப்போன்ற அமைப்பு, பிரெஞ்சு பாசுகியுசு (Basques) மக்களிடையேயும் காணப்படுகிறது. முகஅமைப்பிற்கும் மண்டையோட்டிற்கும் ஒவ்வா அமைப்புடைய இம்முறை இணக்கமற்றது (Disharmonic) எனப்படும். முகஅமைப்பில் தாடை நீட்சி (Prognathism) இன்றியமையாதது. தாடை நீட்சியின் அடிப்படையிலேயே முகத்தின் அகலம், நீளம், வடிவம் முதலானவை அமையப்பெறுகின்றன. நீக்கிரோ, ஆசுத்திரேலிய மக்களிடையே தாடை நீட்சி சிறிது மிகுதியாகக் காணப்படுகிறது. மங்கலாயிடு மக்களினத்தில் தாடை நீட்சி சிறிதாகக் காணப்படும் அல்லது தாடை நீட்சி இல்லாமலேயும் இருக்கும்.\n\nமூக்கு\n\nஇனவகைப்பாட்டில் கையாளப்படும் முதன்மையான அலகுகளுள் இதுவும் ஒன்றாகும். மூக்கின் இன்றியமையாத உறுப்புகளாக ஆராயப்படுவது மூக்கின் வேர் (Nasal Root), மூக்கின் நுனிப் பகுதி, இவ்விரண்டையும் இணைக்கும் சதைப்பற்றான இணைப்புப் பகுதி (Nasal Bridge) ஆகியவையாம். இவையனைத்தும் சேர்ந்து பெறும் மூக்கின் உருவமைப்பு (Nasal Profile), அதன் தன்மைக்கேற்பச் சப்பை மூக்கு (Platyopic), நடுத்தர மூக்கு (Mesopic), அகன்ற மூக்கு (Prosopic) என வகைப்படுத்தப்படுகிறது. மூக்கின் இடைச்சுவர் (Nasal Septum) கிடைநிலையாகவோ கீழ்நோக்கியோ மேல் நோக்கியோ அமைந்திருக்கும். இதைப் போன்றே மூக்கின் வேரையும் மூக்கின் நுனியையும் இணைக்கும் இணைப்புப் பகுதி தட்டையாகவோ குழிவாகவோ குவிந்த அமைப்புடனோ குழிந்து குவிந்த (Concave–Convex) அமைப்புடனோ காணப்படும். இப்பண்புகளைப் பெற்று மூக்கின் நுனிப் பகுதி வட்டமாகவோ கூர்மையாகவோ தடித்தோ மெலிந்தோ காணப்படும். இந்த அனைத்து வேறுபாடுகளையும் ஒன்று சேர்த்து இனங்களை மூக்கு அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்துவது கடினமாகிறது. அதனாலேயே மூக்கின் அகலத்தை நூறால் பெருக்கி மூக்கின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் மூக்கின் அளவுக் குறியீட்டினைக் (Nasal Index) கொண்டு மூக்கின் அமைப்பினை வகைப்படுத்தலாம். அளவு 54.9 வரை உள்ளவற்றை மிகக் குறுகிய மூக்கு எனவும் (Hyperleptorrhine), 55.0 – 69.9 அளவுடையனவற்றைக் குறுகிய மூக்கு அல்லது சப்பை மூக்கு எனவும், 70 – 84.9 அளவுடையனவற்றை நடுத்தர மூக்கு எனவும், 85.0 – 99.9 அளவுடையனவற்றை அகன்ற மூக்கு எனவும், 100.0க்கும் மிகுதியான அளவுடையனவற்றை மிக அகன்ற மூக்கு உணவும் (Hyperplatyrrhine) வகைப்படுத்துவர். ஆசுத்திரேலியப் பழங்குடிகள் அகன்ற மூக்கினையும், நீக்கிரோக்கள் குறுகியதும் அகன்றதுமான மூக்கினையும், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா முதலான பகுதிகளிலுள்ள காக்கேசியர்கள் குறுகிய மூக்கினையும் கொண்டுள்ளனர்.\n\nநீக்கிரோக்களின் மூக்கின் வேர் தாழ்வானதாகவும், மூக்கு இணைப்புத் தட்டையான அல்லது குழிந்த அமைப்புடையதாகவும், மூக்கு நுனி தடித்ததாகவும், காணப்படுகிறது. நடு நிலக் கடல் மக்களின் குறுகிய மூக்கமைப்பு, தட்டையாகவும் நடுத்தரமான மூக்கிணைப்பைக் கொண்டதாகவும் மூக்கு வேர் குறுகியதாகவும் காணப்படுகிறது. நார்டிக்கு (Nordic) மக்கள், குறுகி நீண்ட மூக்கைக் கொண்டுள்ளனர். மூக்கு அளவுக் குறியீட்டை ஒப்பீட்டுப் பார்க்கும் போது இந்த அளவு பால்வேறுபாடுகளுக்குத் (Sexual Variation) தகுந்தவாறு மாறுவதாக உடல்சார் மானிடவியலார் (Physical Anthropologists) கண்டறிந்துள்ளனர்.\n\nகண்\n\nஇக்கால மனிதர்களிடையே ‘மங்கோலியக் கண்’ (Mongoloid Eye) ‘மங்கோலியக் கண் அல்லாதது’ (Non–Mongoloid Eye) என்னும் இருவகைக் கண்களே காணப்படுகின்றன என ஊட்டன் (Hooton) வகைப்படுத்துகிறார். மங்கோலிய இனத்தவர்களின் கண் அமைப்பு மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் வேறுபட்டது. மங்கோலியக் கண்ணின் மேல் இமையின்மேல் ஒரு தசை மடிப்பு வளர்ந்து அத்தசை, மேல் இமையினை மூடி, விழியையும் மூடும் அளவில் காணப்படும். இத்தசை ‘மங்கோலிய மடிப்பு’ (Mongoloid Fold) என்றே சொல்லப்படுகிறது. இம்மடிப்புச் சாய்வாக அமைந்துள்ளது; கண்ணின் வெளிக்கோணம் உட்கோணத்தைக் காட்டிலும் பெரியது; மங்கோலியக் கண்ணில் இமைப்புழை (Palpebral Fissure) சாய்வானது; உட்புற இரப்பை அடிமடிப்பு (Inner Epicanthus) குழந்தைகள், பெண்கள் முதலானோரின் கண்களில் காணப்படும். மற்றொரு வகை, புற இரப்பை அடி மடிப்பு (External Epicanthus) ஆகும். இத்தசை மேல் இமையிலிருந்து வளர்ந்து கண்ணின் வெளிநுனிநோக்கி விழியை மறைக்கக் கூடியது. இவ்வகை பொதுவாக நடுத்தர வயதினரிடையேயும் வயது முதிர்ந்த ஆண்களிடையேயும் காணப்படுகிறது.\n\nஉடலுயர்வளவு\n\nமனித இனங்களை வகைப்படுத்துவதில் முதன்மையான மாறுபடும் பண்புகளுடையது (Variable Character) உடலுயர்வளவு (Stature) ஆகும். பல்வேறு காலச் சூழ்நிலைகளால் தாக்கம் பெற்றுச் செயற்படுவதால், மனித வேறுபாடுகளை அறிவதில் இப்பண்பு உற்று நோக்க வேண்டியதாகும். உலகின் பல மாறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் மக்கள் உடலுயர்லளவில் மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இலி மௌசியான் (Limousion) மாவட்டத்தில் வாழும் மக்களும், வெனின்சுலாவின் யூபா இந்தியர்களும் (Yupa Indians) தம் வாழ்க்கைச் சூழலில் இருவித உடலுயர்வளவினைப் பெற்றிருந்தனர். வாழ்க்கைச் சூழலுக்கு ஒவ்வாத பகுதிகளில் வாழ்ந்தபோது குறைந்த உடலுயர்வளவையும், ஒத்த சூழ்நிலையில் வாழ முற்பட்டவுடன் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். முதலுலகப் பெரும் போருக்கு முன்னரும் பின்னரும் செருமானிய (German) இளையவர்களை ஆய்வு செய்த மார்டின் (Martin) இவர்களிடையே காணப்பட்ட குறைந்த உடலுயர்வளவிற்குக் காரணம், குறைவூட்ட உணவும் சூழ்நிலையும் எனத் தெரிவித்தார். காணிக்காரர்களை (Kanikars) ஆய்வு செய்த தர்சுடன் (Thurston) இம்மக்களிடையே காணப்பட்ட இருவித உடலுயர்வளவிற்கான காரணத்தைக் கண்டறிந்தார். காட்டுப் பகுதியில் வாழ்ந்த காணிக்காரர்கள் குறைந்த உடலுயர்வளவையும் காட்டுப் பகுதியில் இல்லாத காணிக்காரர்கள் உயர்ந்த உடலுயர்வளவையும் கொண்டிருந்தனர். சர்க்கார் (Sarkar), வடஇந்திய மலே (Male) பழங்குடிகளை ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறைந்த உடலுயர்வளவு உள்ளவராகவும் சமநிலப் பகுதியில் வாழ்பவர்கள் உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர் என்றார். இதைப் போன்றே மலைவாழ் கேரோ (Garo) பழங்குடிகளும் சமநிலைக் கேரோ பழங்குடிகளும் காணப்பட்டனர். தார்டே (Torday) என்பவர் காங்கோ போ திவா (Congo Bo Twa) குள்ளர்களின் உடலுயர்வளவைப் பற்றி மிகுதியான ஆய்வினை மேற்கொண்டவராவர். காட்டுப் பகுதியை விடுத்துச் சமநிலங்களில் பயிர்த் தொழில் மேற்கொண்டு வாழ்ந்த இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர்ச் சற்று உயர்ந்த உடலுயர்வளவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர்.\n\nகுளிர்ப்பிரதேசங்களில் வாழும் மக்கள் குறைந்த உடலுயர்வளவினையே கொண்டுள்ளளர் என்பது மானிடவியலாரின் பொதுவான கருத்தாகும். சூழ்நிலை மட்டுமே மனித உடலின் உயரத்திற்கு நேரடி காரணமாக அமையவில்லை. ஒவ்வோர் இனப் பெருக்க மக்கள் தொகையின் (Breeding Population) மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Genc pool) இருக்கும் மரபணுவின் (Gene) பண்புகளும் காரணமாகின்றன. ஒத்த பண்புகளுடைய ஒரே இனத்தில் பல்வேறு உயரங்களையுடையவர்களைக் காணலாம். தோப்பினார்டு (Topinard), ஆடன் (Haddon), மார்ட்டின் (Martin) ஆகியோர் மனித உடலுயர்வளவு அடிப்படையில் மக்களைப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.\n\nஇம்மூன்று அளவைகளுள் மார்ட்டின் வகைப்பாடே மானிடவியலாரின் பயன்பாட்டில் மிகுதியாகக் கையாளப்படுகிறது. சீக்கியர்கள், இராசபுத்திரர்கள், வடமேற்கு ஐரோப்பியர்கள் அனைவரும் நல்ல உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். வடசீனர்கள், நைல்நதி நீக்கிரோக்கள், பட்டகோனியர் (Patagonians) முதலானோரும் உயரமானவர்கள். நடுநிலக் கடல் பகுதியினர், ஆல்பைன் (Alpine) மக்கள், ஆர்மீனியர்கள் (Armenoids), திராவிடர்கள், அய்னு (Ainu) முதலானோர் நடுத்தர உடலுயர்வளவினராவர். சில மங்கோலிய வகுப்பினரும் எசுகிமோக்களும் (Eskimos) இவ்வகையினராவர்.\n\nவெத்தர் (Veddas), காடர் (Kadar), மெலனீசியர் (Melanesians) முதலானோர் குறைந்த உடலுயர்வளவினராவர். மனித இனங்களிலேயே மிகக் குறைந்த உடலுயர்வைக் கொண்டவர்களாக அந்தமானியர் அய்டா (Aeta), தப்பிரோ (Topiro), நீக்கிரில்லோ (Negrillo), அக்கா (Akka), பா திவா (Ba Twa), இம்புத்தி (Mbuti) ஆகியோர் காணப்படுகின்றனர்.\n\nதோற்கூற்றியல்\n\nஇது இனவகைபாடுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத அலகுகளைக் கொண்ட ஓர் உடல்சார் மானிடவியல் (Physical Anthropology) பிரிவாகும். தோற்கூற்றியல் (Dermatoglyphics), கைவிரல்கள், உள்ளங்கை, கால்விரல், உள்ளங்கால் (Sole) முதலிய பகுதிகளில் தோலில் காணப்படும் பலவகையான வரியமைப்புகளைப் (Ridge Patterns) பற்றி விளக்குவதாகும். மனித உடலின் மேல்தோலானது மயிரினாலும் எண்ணெய்ச் சுரப்பிகளாலும் மூடப்பட்டதாகும். ஆனால், உள்ளங்கைப் பகுதியும் உள்ளங்காற் பகுதியும், மயிர்கள், எண்ணெய்ச் சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பகுதிகள், உடலின் பிற பாகங்களிலில்லாத அளவில் வரி அமைப்புகளையும் சிறு, பெரு இரேகைகளையும் கொண்டுள்ளன. இவை மனித இனங்களில் வேறுபாடுகளுடைய அமைப்புகளைக் காட்டுகின்றன. இதனாலேயே தோற்கூற்றியல் இனங்களை வகைப்படுத்தும் அலகுகளால் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அலகுகள் இயற்கைச் சூழலால் மாற்றக்கூடியனவல்ல; தகவமைவனவுமல்ல. கருத்திசு தோன்றியது முதல் இறக்கும் வரை இவ்வமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை.\n\nஉள்ளங்கையின் வரியமைப்புகளும் உள்ளங்காலின் வரிஅமைப்புகளும் பல கோணங்களில் பல்வேறு முறைகளில் ஆராயப்படுகின்றன.\n\nகைவிரல் வரியமைப்புகள்\n\nவில்வளைவு (Arches), சுழல் வளையம் (Loops), சுழிகள் (Whorls), கலப்பு வரிகள் (Composites) என்னும் நான்கு வகைகளாகக் கைவிரல் வரியமைப்புகளை (Finger Ridge Patterns) என்றி (Henry) வகைப்படுத்துவார். இதையே தால்டன் (Dalton), வில்வளைவு, சுழல்வளையம், சுழி என மூன்று வகையாகப் பிரிப்பர்.\n\nசுழல் வளையமானது ஓரச் சுழல் வளையமாகவோ (Ulnar Loop) ஆரச் சுழல் வளையமாகவோ (Radial Loop) காணப்படும். மூவார வளைவுகள் (Triradii) என்னும் வரியமைப்பு, வில்வளைவுகளில் காணப்படுவதில்லை. ஒரு மூவாரவளைவுகள் சுழல் வளையத்திலும், இரண்டு மூவாரவளைவுகள் சுழிகளிலும் காணப்படுகின்றன. வில்வளைவுகள், குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. இருவிதச் சுழல்வளைவுகளுள் ஓரச் கழல்வளையமே, ஆரச்சுழல் வளையத்தைக் காட்டிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. கைவிரல் வரியமைப்பு இனங்களுக்குக்கிடையே பல மாறுபாடுகளுடன் காணப்படுவதைக் கீழ்வரும் அட்டவணையில் காணலாம்.\n\nஅட்டவணையில் காட்டியுள்ள படி சுழி, மங்கலாயிடு இன மக்களிடையே மிகுதியாகக் காணப்படுகிறது. ஆனால் சுழல்வளையம், காக்கேசியர் மக்களினத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது; மங்கோலியர், நீக்ரோ இனத்தவரிடையே சம அளவு வீதத்தில் காணப்படுகிறது. வில்வளைவுகள், மங்கோலியர் இனத்தவரிடையே மிகக் குறைவாகவும் காக்கேசியர் இனத்தனரிடம் சற்று மிகுதிவாகவும் நீக்கிரோ இனத்தவரிடையே மேலும் மிகுதியாகவும் காணப்படுகிறது.\n\nஉள்ளங்கை\n\nமனித உள்ளங்கை அமைப்பு. பலவாறாகப் பல இனங்களுக்கிடையில் காணப்படுகிறது. இதனடிப்படையில் தோற்கூற்றியல், ‘உள்ளங்கையின் நேர்க்கோடு வாய்பாடு’ (Palmar Mainline Formula) கொண்டு உள்ளங்கையின் அமைப்புகளை ஆராய்கிறது. கையின் கட்டைவிரல் தவிர்த்து மற்ற நான்கு விரல்களின் அடியில், மூவார வளைவுகள் (Triradii) காணப்படுகின்றன. இவை அ, ஆ, இ, ஈ என ஆர–ஓர வரிசையில் (Radio–ulnar Sequence) குறிக்கப்படும். இவ்வாறு ஆர–ஓர வரிசையிலிடப்படுவதற்கு முதன்மையான காரணம், உள்ளங்கையின் நேர்க்கோடுகளைச் (Main Line) கட்டிக்காட்டுவதற்கேயாகும். மனித உள்ளங்கை 13 பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் ஒரு குறியீடு கொண்டோ எண் கொண்டோ குறிக்கப்படும் கட்டைவிரல் தவிர்த்து ஏனைய விரல்களில் அடியிலிருந்து மூவார வளைவுகள் உள்ளங்கையை நோக்கிச் செல்கின்றன. இந்த வளைவுகளை நன்றாக உற்று நோக்குவோமானால், உள்ளங்கையில் எந்தப் பகுதியில் அது சென்று முடிகிறது என்பதனைக் கணக்கிடலாம். இந்தக் கோடே உள்ளங்கையின் நேர்கோடு (Palmar Mainline). இதைப் போன்றே நான்கு உள்ளங்கை நேர்கோடுகளையும் கண்டறிந்து\n\n% !! சுழல் வளையம் % || வில் வளைவு %\n\nஅதற்கு அ, ஆ, இ, ஈ எனப் பெயரிட வேண்டும். ஒவ்வோர் உள்ளங்கை நேர்கோடு முடியும் கடைப்பகுதிகளுக்குக் (Termination) கொடுக்கும் குறியீட்டின் (Symbol) அடிப்படையிலேயே நேர்கோடு வாய்பாடு அமைக்கப்படும்.\n\nமனிதர்களிடையே மிகுந்த அளவில் காணப்படும் வாய்பாடுகள் 11, 9, 7; 9, 7, 5; 7, 5, 5 ஆகும். வில்டா (wilder) ஆய்வுப்படி 11, 9, 7, ஐரோப்பியரின் வாய்பாடு எனவும் 9, 7, 5 மங்கோலியர் வாய்பாடு எனவும் 7, 5, 5 நீக்கிரோ வாய்பாடு எனவும் கொள்ளப்படும். காண்க: தோற்கூற்றியல்.\n\nஇரத்த வகைகள்\n\nமனித இனங்களை வகைப்படுத்துவதில் இக்கால மானிடவியலார் உடற்கூற்றுப் பண்புகள் பலவற்றைக் கையாளுகின்றனர். அவற்றுள் ஒன்று இரத்த வகையாகும். இரத்தத்தை A, B, AB, O என நான்கு வகையாகப் பிரிப்பர். இது தவிர்த்து Rh காரணி (Rh Factor) இரத்தத்தில் கலந்துள்ளதா, இல்லையா என்பதைப் பொறுத்தும் இரத்தத்தை வகைப்படுத்துவர். இரத்த வகைகள், மரபுவழிப் பண்புகளாதலால் மனித இனங்களை வகைப்படுத்துவதில் தலையான பங்கினைப் பெற்றுள்ளன. கீழ்வரும் அட்டவணை சில குறிப்பிட்ட இரத்தக் குழுக்கள், பல்வேறு இனங்களில் காணப்படும் அடுக்கு நிகழ்வினைக் (Frequency) காட்டுகின்றது.\n\nஇரத்தக் குழுக்களின் அடிப்படையில் மனிதக் குழுக்களின் வகைகளை வகைப்படுத்தும்போது பல உடற்கூற்றுப் பண்புகள் இவ்வினங்களுக்கிடையே மாறுபடுவதைக் காணலாம்.\n\nகாக்கேசியர்கள் ஏனைய இனத்தவர்களைக் காட்டிலும் Rh எதிர்ப்பையும் (Rh—) A2 இரத்த வகையையும் மிகுதியாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க நீக்கிரோக்களிடையே Rh எதிர்ப்புக் காணப்படும் அடுக்கு நிகழ்வு, காக்கேசியர்களைக் காட்டிலும் குறைந்தும் ஆசிய மங்கோலியர்களை விட மிகுந்தும் இருக்கிறது. அமெரிக்க நீக்ரோக்களிடையே தப்பிக் காரணிகளும் குறைந்தே காணப்படுகின்றன. ஆசிய மங்கோலியர்களிடையே காரணி மிகுந்தும் A2, Rh எதிர்ப்பு இரத்த வகைகள் குறைந்தும் காணப்படுகின்றன. அமெரிக்க இந்தியர்களிடம் ‘O’ இரத்த வகை மிகுந்தும் ‘A2’ இரத்த வகை, Rh எதிர்ப்பு ஆகியவை குறைந்தும் காணப்படுகின்றன.\n\nஇனங்களை வகைப்படுத்துவதில் மேலும் சில உடற்கூற்றுப் பண்புகள் மானிடவியலாரால் கையாளப்படுகின்றன. அவை, கரியக நெய்மம் (Phenylthiocarbomide–PTC) வேதி கூட்டுப்பொருளைச் சுவைக்கும் தன்மை, காதுக் குரும்பியின் (Earwax) தன்மை முதலியனவாகும்.\n\nசுவை உணர்வோரும் உணராதோரும் (Tasters and Nontasters)\n\nமக்களுள் பெரும்பான்மையோர், கரியக நெய்மத்தின் சுவையை உணரக்கூடியவர்கள். இது பல வேதிசார் பொருள்களின் கூட்டுடன் தைராயிடு சுரப்பியின் இயக்கத்திற்கு எதிராகச் செயற்படக் கூடியது. நீர்த்த கரியக நெய்மக் கூட்டுப்பொருளை வடி தாளில் நனைத்து ஒருவரைச் சுவைக்கச் செய்யும்போது அவரால் ஒருவிதக் கசப்பான சுவையை உணர முடியும். இச்சுவையை உணருபவர்களின் அடுக்கு நிகழ்வு,\n\nஅடுக்கு நிகழ்வு (விழுக்காடுகளில்) மக்கள் தொகை\n\nபல்வேறு இனங்களுக்கிடையே வேறுபடுகிறது.\n\nஆசுத்திரேலியர் குறைந்த எண்ணிக்கையிலும் ஆசிய மங்கோலியர் மிகுதியான எண்ணிக்கையிலும் உணர்கின்றனர்.\n\n(விழுக்காடுகள்)\n\nகாதுக் குரும்பி\n\nகாதில் சுரக்கும் குரும்பியின் வகை இரண்டாகும். காதுக் குரும்பி (Earwax) ஒரு வகை வறண்டும் மற்றொரு வகை பசையுள்ளதாகவும் காணப்படுகிறது. காதுக் குரும்பியின் வறண்ட அல்லது பசையுள்ள தன்மை மரபுவழி அமையப் பெறுவதாகும். இதன் தன்மையைப் பொறுத்தும் மானிடவியலார் மக்களினங்களை வகைப்படுத்துவர். மக்களினங்களிடையே வறண்ட காதுக் குரும்பி காணப்படும் அடுக்கு நிகழ்வின் அளவினைக் கொண்டு மக்களினங்களைப் பாகுபடுத்தும்போது மங்கோலியர்கள் மிகுதியான அளவில் இத்தன்மையைப் பெற்றுள்ளனர். வறண்ட காதுக் குரும்பியை நிலைப்படுத்தும் மரபணுக்களைக் குறைந்த விழுக்காட்டளவிலேயே அமெரிக்கக் காக்கேசியர்களும், அமெரிக்க நீக்கிரோக்களும் கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.\n\nதுணை நூல்கள்\n\nAlland A., Jr. Human Diversity, Anchor- Double day, New York, 1973.\n\nBoyd, W.C., Genetics and the Races of man, Little, Brown, Boston, 1956.\n\nCoon, C.S., The Origin of Races, Knopf, NewYork, 1962.\n\nEmrys, Jones, Human Geography, Praeger, New York, 1965.\n\nGarn, S.M., Human Races, Thomas, Springfield, 1969.\n\nStern, C., Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973."}}