{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ttgndtme/", "data": {"id": "ttgndtme", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ttgndtme/", "kind": "article", "headword": "இனக்கலப்பு", "romanization": "iṉakkalappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.358650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பல்வகைப்பட்ட இன மக்கள் தம் இனத்தாரை விடுத்து வேறோர் இனத்தாரை மணந்து கொள்வதால் இனக் கலப்படைந்து வருகின்றனர்.", "body_ta": "பல்வகைப்பட்ட இன மக்கள் தம் இனத்தாரை விடுத்து வேறோர் இனத்தாரை மணந்து கொள்வதால் இனக் கலப்படைந்து வருகின்றனர். இந்த இனக்கலப்பு (Miscegenation) வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே பல நிலைகளில் நிகழ்ந்து வருவதொன்றாகும். மனிதர்கள் புவியமைப்பாலும் பண்பாட்டாலும் உடற்கூற்றாலும் வேறுபட்டுப் பல்வேறு இனக்குழுவினராகக் (Ethnic Group) காணப்படுகின்றனர். ஒவ்வோர் இனக்குழுவிற்குள்ளும் பொருளாதாரம், தகுதி, தொழில் முதலான பல சமூகப்படிகள் எழுப்பப்பட்டு மேலும் பல உட்குழுக்கள் காணப்படுகின்றன. இக்குழுக்களே, திருமண அமைப்பில் இனப்பெருக்க மக்கள் தொகையாகவும் (Breeding Population) மாற்றம் பெறுகிறது.\n\nஎந்த ஓர் இனக்குழுவும் சிறந்த பண்புகளை மட்டும் கொண்ட மரபணுத் (Gene) தொகுதியினைப் பெற்றிருக்கவில்லை. இதைப் போன்றே எந்த ஓர் இனக்குழுவும் சிறப்பற்ற மரபணுக்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் குழுவினருமே சிறந்த மரபணுக்களையும், இயல்பான மரபணுக்களையும், சிறப்பற்ற மரபணுக்களையும் கொண்டுள்ளனர். கருவளமுற்ற வெவ்வேறு இனத்தவர்கள் கலப்புறும்போது இவ்விரண்டு இனத்தின் பண்புகளுக்கும்மேல் புதிய பண்புகளும் தோன்றுகின்றன. இனக்கலப்பில் சிறப்பற்ற பண்புகள் தோன்ற வாய்ப்புண்டானாலும், பரந்த நோக்கில் காணும்போது உயர்ந்த பண்புகளைப் பெற்ற மக்கள் குழுக்கள் பெருமளவில் தோன்றலாயினர். இனக்கலப்பு நிகழ்வினாலேயே மனித இனத்தில் வெவ்வேறான பண்புகளைக் கொண்ட பெருமளவிலான மனிதக் குழுக்கள் தோன்றியுள்ளன என எப்.ஏ. ஆன்கின்சு (F.A. Hankins) கூறுகிறார்.\n\nஇனக்கலப்பினால் உடற்கூற்றில் இணக்கமற்ற பண்புகள் தோன்றுகின்றன என்ற முற்கால அறிஞர்களின் கருத்தினை 20–ஆம் நூற்றாண்டின் மரபியலாரும் மானிடவியலாரும் உயிரியல்சார் அடிப்படையில் மறுத்துள்ளனர்.\n\nசீன–பிரெஞ்சுக் கலப்பினத்தவர்களும், சீன–செருமானியக் கலப்பினத்தவர்களும் சீன–வெள்ளையர் கலப்பினத்தவர்களும் உடல்சார் பண்புகளில் சிறப்பாகக் காணப்படுகின்றனர் என இவர்களை ஆராய்ந்த பிளெமிங்கு (Fleming) கூறுகிறார்.\n\nஇன்றுள்ள உலக மக்கள் தொகை பன்னெடுங் காலமாகத் தொடர்ந்து இனக்கலப்படைந்து வந்துள்ளது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படினும் சில பண்பாடுகளில் இனக்கலப்பு அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பல மாநிலங்களில் பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு மணத்திற்குத் தடை விதிக்கும் சட்டம் அரசியலமைப்பு முறையிலமைந்ததன்று என அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் 1967–ஆம் ஆண்டு அறிவித்தது. தென் ஆப்பிரிக்க அரசின் இன ஒதுக்கல் கொள்கை கலப்பினத் திருமணத்திற்குத் தடை விதிப்பதாகும். பி.டபிள்யு. போத்தா (P.W. Botha) அரசு இத்தடையை 36 ஆண்டுகளுக்குப் பின், 1985–ஆம் ஆண்டு விலக்கிய மறுநாள், அமெரிக்க வெள்ளைப் பெண்ணிற்கும் தென் ஆப்பிரிக்கக் கறுப்பருக்கும் திருமணம் நடைபெற்றது."}}