{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tj3x3zp7/", "data": {"id": "tj3x3zp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tj3x3zp7/", "kind": "article", "headword": "அதிகாரப் பங்கீடு", "romanization": "atikārap paṅkīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:34.087051+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அரசியல் கலையில் பயன்படும் ஒரு கோட்பாடாகும், அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி நாடுகளில் அரசாங்க அதிகாரத்தை, மத்திய அரசின் அதிகாரங்களாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களாகவும் வரையறுத்துக் கூறுகிறது.", "body_ta": "அரசியல் கலையில் பயன்படும் ஒரு கோட்பாடாகும், அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி நாடுகளில் அரசாங்க அதிகாரத்தை, மத்திய அரசின் அதிகாரங்களாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களாகவும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறுத்துப் பங்கீடு செய்வதைத்தான், அதிகாரப் பங்கீடு (Divison of Power) என்கிறோம். எடுத்துக்காட்டாக, இந்திய நாடு ஒரு கூட்டாட்சி நாடாகும். இங்கு இருவகை அரசுகளைக் காண்கிறோம். இந்தியா முழுமைக்கும் இயங்கும் அரசை மத்திய அரசு என்றும், இந்தியாவின் 22 மாநிலங்களின் அரசுகளை மாநில அரசுகள் என்றும் கூறுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்புத் திட்டம், நாடு முழுமைக்குமான அதிகாரங்கள் இவை இவை என்றும், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் இவைஇவை என்றும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் பொதுத்துறைப் பட்டியலும் (Concurrent List) வரையறுக்கப்பட்டு, அதிகாரங்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கான அதிகாரங்களை ஒன்றிய அரசாங்கப்பட்டியல் (Union List) வரையறுத்துக் கூறுகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை மாநில அரசாங்கப் பட்டியல் (State List) வரையறுக்கிறது. இரு அரசுகளிலும் தலையிடும் வாய்ப்பைப் பெற்ற துறைகளுக்கான அதிகாரங்களைப் பொதுத்துறைப் பட்டியல் வரையறுத்துள்ளது.\n\nஅதிகாரப் பங்கீடு, உலக நாடுகளில் விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது.\n\nஅ. அமெரிக்க ஐக்கிய நாட்டில்\n\nஅரசியல் அமைப்புத் திட்டம், 1. மத்திய அரசுக்கான அதிகாரங்களைத் தொகுத்துக் கூறுகிறது. 2. மத்திய அரசு சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 3. மாநில அரசுகள் சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 4. எஞ்சிய அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிக்கிறது.\n\nஆ. கானடாவின்\n\nஅரசியல் அமைப்புத் திட்டத்தின்படி அதிகாரப் பங்கீடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பங்கீட்டு முறைக்கு நேர் எதிரிடையானது. இங்கு மாநிலங்களின் அதிகாரங்கள் தொகுந்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் நடுவண் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு 29 அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டுள்ளன. கானடாவும் கூட்டாட்சி அமைப்புள்ள நாடு.\n\nஇ. ஆசுதிரேலியாவிலும்\n\nகூட்டாட்சி அமைப்பு முறையே நிலவுகிறது. மத்திய மாநில அதிகாரங்கள், சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று பங்கிடப்பட்டுள்ளன. அதன்படி 1. மத்திய அல்லது கூட்டாட்சி அரசாங்க அதிகாரங்கள் இவை இவையென வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. 2. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 3. மத்திய மாநில அரசுகள் செய்யத் தகாதனவெனச் சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.\n\nஈ. சுவிட்சர்லாந்தில்,\n\nமத்திய–மாநில அதிகாரப் பங்கீட்டு அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று அமைந்துள்ளது. மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படாத அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லையானால் அவை மாநிலங்களைச் சாரும். மத்திய அதிகாரங்கள் ஒருவகையில் மத்திய அரசுக்கே இருப்பது போலவும், ஒரு வகையில் பொதுத் துறைக்கே இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.\n\nஉ. பாகிசுதான்\n\nஅரசியல் அமைப்பு கூட்டாட்சி முறையில் அமைந்துள்ளது. இதன் அமைப்பு முறை இந்திய அரசியலமைப்புத் திட்டத்தைப் போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரங்கள் சிறப்பதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பொதுத்துறைப்பட்டியல் அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அதிகாரங்கள் இந்தியாவில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் பாகிசுதான் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.\n\nஊ. பங்களாதேசம்,\n\nஇங்கிலாந்து போன்றவை ஓருறுப்பு (Unitary) நாடுகள். எனவே இவற்றில் அதிகாரப் பங்கீடு கிடையாது.\n\nஎ. சோவியத்து உருசியா\n\nஒரு கூட்டாட்சி நாடாகும். மத்திய–மாநில அதிகாரங்கள் கொள்கையளவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசின் அதிகாரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சோவியத்து உருசியாவில் மாநிலங்களுக்குக் கூட்டாட்சியை விட்டுப் பிரிந்து செல்லும் அதிகாரம் ஏட்டளவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதை ஒரு மாநிலமும் இன்றுவரை செயல்படுத்தவில்லை; ஆதலின், செயல்படுத்த அனுமதிக்கப்படவில்லையென்பது பொருத்தமாகும்.\n\nதுணை நூல்கள்\n\nAppadorai, A., “Substance of Politics”, Oxford University Press, London, 1975.\n\nStrong. C.F., “Modern Political Constitutions”, Sidwick & Jackson, 1930."}}