{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tcbccm79/", "data": {"id": "tcbccm79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tcbccm79/", "kind": "article", "headword": "இனக்குழு மருத்துவம்", "romanization": "iṉakkuḻu maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.456616+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தொன்மைச் சமூகம், தொழில்சார்பற்ற சமூகம், மேலைநாட்டவ- ரல்லாத சமூகம் ஆகிய சமூகங்களில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களின்மீது கொண்டுள்ள நம்பிக்கைகள், அவற்றைக் குணப்படுத்தும் முறைகள் முதலானவற்றைப் பற்றி அறியும் ஒரு மானிடவியற் பிரிவே இனக்குழு மருத்துவம் (Ethnomedicine) ஆகும்.", "body_ta": "தொன்மைச் சமூகம், தொழில்சார்பற்ற சமூகம், மேலைநாட்டவ- ரல்லாத சமூகம் ஆகிய சமூகங்களில் மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களின்மீது கொண்டுள்ள நம்பிக்கைகள், அவற்றைக் குணப்படுத்தும் முறைகள் முதலானவற்றைப் பற்றி அறியும் ஒரு மானிடவியற் பிரிவே இனக்குழு மருத்துவம் (Ethnomedicine) ஆகும். மானிடவியவின் ஒவ்வொரு பிரிவும் மனித இனத்தின் வரலாற்றுக் கால நிகழ்வில் உயிர்சார் படிமலர்ச்சியையும் பண்பாட்டுப் படிமலர்ச்சியையும் அறிகிறது. அதன்வழி இனக்குழு மருத்துவம், மனித இனங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தத்தம் சுற்றுச் சூழல், தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றோடு வாழ்வின் ஒவ்வோர் அமைப்பிலும் வெவ்வேறான இனக்குழுக்கள் கொண்டிருக்கும் நோய் முறைகளைப் பல்வேறு பரிமாணங்களில் வெவ்வேறான அணுகுமுறைகளில் ஆராய்கிறது. இத்துறை ‘நாட்டுப்புற மருத்துவம்’ (Folk Medicins) எனவும் ‘தொன்மை மருத்துவம்’ (Primitive Medicine) எனவும் ஒருசில மானிடவியலாரால் கூறப்படுவதுண்டு.\n\nஇனக்குழு மருத்துவம் 20–ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே பெரிதும் வளர்ச்சி நிலையினை எட்டத் தொடங்கியது. பல்வேறு பண்பாடுகளை ஆராய்ந்த பண்பாட்டு மானிடவியலாரும், இனக்கூறுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த உடல்சார் மானிடவியலாரும் (Physical Anthropologist), மருத்துவவியலாரும், உளவியலாரும், தொன்மை மக்களின் பண்பாடு, சமூகம், உளம், நடத்தைமுறை ஆகியவை நோய்முறைகளோடு ஒன்றியுள்ள முறைகளைத் தத்தம் அணுகுமுறையில் ஆராய்ந்தனர். உலகம் முழுவதுமுள்ள தொன்மைப் பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் நோய்கள் வருவதற்குச் சூனியம், விலக்குகளை மீறுதல், நோய்ப்பொருள் உடலினுள்புகுதல், உயிர்ப்புப் பொருளை இழத்தல் ஆகிய நான்குமே காரணங்கள் என நம்புகின்றனர் எனக் கூறுவார் கிளமண்டுசு (Clements). இம்மக்கள் நோய் வருவதற்கான பல காரணங்களைக் கொண்டிருப்பது போன்றே பல வகையான சிகிச்சை முறைகளையும் கொண்டிருக்கின்றனர். தொன்மைக் குடிகளின் மருத்துவம் அடிப்படையில் இருவகையானதாகும். அவை நோயை உண்டாக்கும் இயற்கை இறந்த ஆற்றல்களைக் கட்டுப்படுத்துவதும் நோய் வாராமல் தடுக்க இயல்பிறந்த ஆற்றல்களை வழிபடுதலும் ஆம். ஆதிக்குடிகளும் பழங்குடிகளும் பிற தொன்மைச் சமூகத்தினரும் நோயைக் கட்டுப்படுத்த அல்லது மருத்துவம் செய்ய மந்திரம், சூனியம், பில்லி சூனியம், மாயவித்தை, உயிர்ப்பலியிடுதல், குலக்குறிச் சின்னங்கள், முன்னோர்கள், ஆவிகள், இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றை வழிபடுதல், உடலில் துளையிடுதல், கீறுதல், மருந்துப் பொருள்களைத் தடவுதல் முதலிய முறைகளைக் கையாளுகின்றனர். இவ்வகையான மருத்துவத்தை ‘மாயவித்தை மருத்துவம்’ அல்லது ‘மந்திர மருத்துவம்’ எனவும் மானிடவியலார் கூறுவர். இவர்களிடையே சிகிச்சை முறைகளைச் செய்பவர்கள் பெரும்பாலும் சமயச் சார்புற்றவர்களாகவும் மந்திரம் கற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்பத் தெய்வத்தன்மையுற்றவர் (Shaman), வருவதுரைப்பவர் (Prophet), சூனியக்காரர் (Sorcerer), சமயகுரு (Priest) எனப் பல வகையினராகப் பாகுபடுத்தப்பட்டுள்ளனர். தெய்வத் தன்மையுற்றவர்கள் சமயப் பேராளர்களாவர். நோயுற்றோருக்கு மருத்துவஞ் செய்து காத்தலும், தம் சமூகத்திற்கு நோய்வராமல் தடுத்தலும், சமூகத்தின் சமய வழிபாடுகளை மேற்கொள்ளுதலும் இவர்களது பணியாகும். வருவதுரைப்பவர் இயற்கையாற்றலுடன் தொடர்புடையவராவர். தெய்வத்தன்மையுற்றவர்களைப் போன்றே இவர்களும் இயற்கையாற்றலோடு தொடர்புற்றுத் தம் சமூகத்தினருக்கு ஏற்படும் தீமைகளை முன்னறிவித்துக் காப்பர். இயற்கையில் அமையப் பெற்ற வாழ்க்கையமைப்பைக் குறை கூறுவர். செயற்கை முறைகளைக் கையாளுவதால் மட்டுமே வாழ்வில் மேம்பாடு அடைய முடியும் என்னும் கொள்கையைக் கூறிவருபவர்களாவர். சூனியக்காரர்கள் முன்னவர்களைப் போலன்றித் தம் பகைவர்களையும் விரும்பத்தகாதவர்களையும் இடையூறு செய்து கொன்றுவிடும் தன்மையர். சமயகுருமார் பெரும்பான்மையாகத் தொன்மைச் சமூகங்களில் காணப்படுவதில்லை. இக்காலச் சமூகங்களில் வளர்ச்சியடைந்த சமயக் கொள்கையை ஏற்று அவற்றை மக்களுக்குக் கற்பித்தலே முதன்மையான செயலாகக் கொண்டவராவர்.\n\nஉலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்வேறு சமூகத்தினரின் மருத்துவ முறைகள் மானிடவியலாரால் அறியப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் மானிடவியலாரிடையே இனக்குழு மருத்துவம் பற்றிய கொள்கைகளை மாற்றியமைக்கும் கருத்து எலுப்பெற்று வருகிறது. சமயம், மருத்துவம், மனப்பாங்கு ஆகிய மூன்றும் மனிதனின் ஒவ்வோர் உடல் நலன் சார்ந்த செயல்களில் பங்கேற்பதால் ‘நாட்டுப்புற மருத்துவம்’ என்னும் கூற்றை மாற்றிச் ‘சமூக மருத்துவம்’ (Social Medicine) என்னும் கருத்தோடு அறிய முற்பட வேண்டும் என்பார் ஆக்காநெக்கு (Ackerknecht), இலீபன் (Lieban), உரூபல் (Rubel), பிரைசு வில்லியம்சு (Price–Williams) ஆகியோர் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவும் மருத்துவ முறைகளை ஆராய்ந்தவர்களாவர். இவர்- கள் ஒவ்வொரு சமூகத்தினரிடையேயும் ஒவ்வொரு நோய்க்கும் அவர்கள் கொண்டிருந்த சொல்வழக்கிற்கும் பொருளுக்குமுள்ள தொடர்பினை ஆராய்ந்தனர். ஒரே வகையான நோய் வெவ்வேறான பண்பாடுகளில் அந்தந்த மக்களிடையே காணப்பட்ட முறைகள், பண்பாட்டு ஒப்பாய்வுகளுக்கும் மக்களின் அறிதிறனை ஒப்பிடுவதற்கும் வழிவகுத்தன.\n\nமாயத் தன்மை மிக்க தொன்மை மக்களின் மருத்துவத்திற்கும் அறிவியல் சார்ந்த தொழில்சார் சமூகத்தினரின் மருத்துவத்திற்குமுள்ள வேறுபாடுகளை மானிடவியலார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். தொன்மை மருத்துவக் கூறுகள் தொழில் சார்பற்ற மக்களிடையே காணப்படினும் அறிவியல் மருத்துவம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n\nதுணை நூல்\n\nClements, P.E., Primitive Concepts of Disease, University of California, California, 1932."}}