{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/taqcbbr8/", "data": {"id": "taqcbbr8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/taqcbbr8/", "kind": "article", "headword": "சிறு குடல் புற்று", "romanization": "ciṟu kuṭal puṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:55.943068+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிறு குடலில் காணக் கூடிய நோய்கள் அழற்சி, உணவு செரியாமை, உணவுச் சத்து நன்கு உறிஞ்சப்படாமை போன்றவையாகும்.", "body_ta": "சிறு குடலில் காணக் கூடிய நோய்கள் அழற்சி, உணவு செரியாமை, உணவுச் சத்து நன்கு உறிஞ்சப்படாமை போன்றவையாகும். ஆனால், இப்பகுதியில் கட்டிகள் மிகவும் குறைவாகவே ஏற்படும். உணவு செரிமான மண்டலம் முழுதும் ஏற்படக் கூடிய கட்டிகளில், ஏறத்தாழ 6% சிறு குடலில் ஏற்பட வாய்ப்புண்டு. கட்டிகள் அரிதாக ஏற்பட்டாலும், அவை ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கட்டிகளை தீங்கற்ற கட்டிகள், தீங்குடைய கட்டிகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\n\nநோய்க் காரணம். பாரம்பரியம், உணவுடன் கலந்து வரும் புற்று நோயூக்கும் பொருள்கள், சில தீங்கற்ற கட்டிகள் புற்று நோயாக மாறுவது என்பவை பொதுவான காரணங்களாகும்.\n\nஅறிகுறிகள். பொதுவாகவே, உடலில் புற்று நோய் ஏற்பட்டு விட்டால், சிறிது சிறிதாக உடல் நலிவடைகிறது. வலிமையின்மை, குருதிச் சோகை, தொடர் காய்ச்சல், வயிற்று வலி, குருதிப் போக்கு முதலியவை உண்டாகின்றன. அனைத்துக் குடல் புற்று நோய்களை விடச் சிறு குடல் புற்றுச் சிறிது குறைவு. இப்புற்று முன் சிறு குடல் இடைச் சிறு குடல், பின் சிறு குடல் ஆகிய மூன்று பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. முன் சிறு குடல் பகுதியில் சற்று மிகுதியாகத் தோன்றும், இப்புற்று நோயைக் கண்டு பிடிப்பது சற்றுக் கடினம் இது குடல் வழியை அடைத்துக் கொண்டு, அதற்கான அறிகுறிகளைக் காட்டும் போதோ, காரணமில்லாத இளைப்புக்காகச் சோதனை செய்து கொள்ளும் போதோ தெரிய வரும். தற்போதைய குடல் உள்நோக்கி, தட ஒலி முறை போன்றவற்றால் நோய்க் கணிப்பு எளிதாகும்.\n\nசிறு குடலின் சுவரிலிருந்து தொங்கும் புற்றைத் தவிர, முன் சிறு குடலின் சுவரில் இருக்கும் ஒரு துளை போன்ற சிறு கதவினின்று தொடங்கும் புற்று முன் சிறு குடலில் மட்டுமே காணப்படும். இந்தத் துளைக் கதவின் பெயர் ஆம்புல்லா ஆஃப் வேட்டர். இங்குதான், பித்தப் பையின் நாளமும், கணையத்தின் நாளமும் ஒன்றாகச் சேர்ந்து, முன் சிறு குடலின் சுவரில் உள்ள ஒரு துளை மூலம் குடலுக்குள் திறக்கின்றன. இதன் மூலம் வரக் கூடிய பித்த நீரும், கணைய நீரும், சிறு குடல் நீருடன் கலந்து, பல்வேறு வகை உணவு வகைகளைச் செரிக்க உதவுகின்றன. இத்துளையினின்றும் தொடங்கும் புற்று, சற்று மிகுதியாகவே காணப்படும். சில நேரங்களில், முன்னரே குடலில் காணப்படும் தீங்கற்ற கட்டிகளே புற்றாக மாறி விடக் கூடும். குறிப்பாக ஆம்புல்லா ஆஃப் வேட்டர் புற்றுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இப்புற்று ஒரு கட்டியாகவே தோன்றும்.\n\nநேரடித் தோற்றம். இரு வகையாகப் புற்றுகள் தோன்றலாம். பெரிய உருண்டையாக, ஏறத்தாழ, 1—10 செ.மீ. அளவில் கரடு முரடான வெளிப்புறத் தோற்றத்தோடோ, குடல் சுவரை விட்டு மிகுதியும் எழாமல், குடலின் சுற்றளவைச் சற்றே சுருக்கும் நிலையில் தட்டையான தடிப்பாகவோ தோன்றலாம். முதல் வகையில் மேற்புறம் புண்ணாகிக் குருதி கசியலாம்; குடல் செருகல் ஏற்படலாம்; குடலின் பாதையைப் புற்றுக் கட்டி அடைத்துக் கொள்ளவும் செய்யலாம். இதில் கோளப் புற்றுக் (adenocarcinoma) கட்டிகள் மிகவும் குழகுழப்பான நீர்மத்தைச் சுரக்க வல்லவை. இடைச் சிறு குடலில் புற்றுக் கட்டி தோன்றுவது மிகவும் அரிது. பின் சிறு குடலிலும் புற்று ஏற்படலாம்.\n\nஉடலுள் பரவும் நிலை. இப்புற்று சிறு குடலின் சுவரை முழுதுமாகப் பாதிக்கும் போதே, இவற்றின் துகள்கள் நிண நீர் நாளங்களுள் புகுந்து பரவுகின்றன. முதலில், அடுத்துள்ள நிண நீர்க் கழலைகளிலும், பிறகு, பெருந்தமனியின் இரு புறமும் அமைந்துள்ள நிண நீர்க் கழலைகளிலும் புற்று நோய்த் துகள் புகுந்து, இக்கழலைகளைப் பெரிதாக்கும். சில வேளைகளில் உதரவுறைக்குள் ஊடுருவிச் சென்று, குடலின் வெளிப் புறச் சுவரில், சிறிய உருண்டை போன்ற கட்டிகளை ஏற்படுத்தும். சிறு குடல் புற்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றி விடுவதே சிறந்தது. —ராஜலட்சுமி\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->"}}