{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t8rnfxus/", "data": {"id": "t8rnfxus", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t8rnfxus/", "kind": "article", "headword": "உசேன்", "romanization": "ucēṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.260542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "முகமது நபியின் மகள் பாத்திமாவிற்கும் நான்காம் கலீபா அலிக்கும் மகனாகப் பிறந்தவர்.", "body_ta": "முகமது நபியின் மகள் பாத்திமாவிற்கும் நான்காம் கலீபா அலிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் சகோதரர் அசன் கலீபா பதவியை உமயது மரபைச் சேர்ந்த முசூவியா என்பவருக்கு விட்டுக் கொடுத்தார்; பின்பு நஞ்சூட்டப்பட்டு இறந்தார்.\n\nமுசூவியா தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தம் மகன் எசீது (Yezid) என்பவரைக் கலீபாவாக அமர்த்தினார். நற்பண்புகளும் ஆட்சித்திறமையுமில்லாத எசீது கலீபாவாக ஆக்கப்பட்டதை எல்லோரும் எதிர்த்தனர். முகமது நபியின் பேரர் என்ற முறையிலும் காலஞ்சென்ற கலீபா அலியின் மகன் என்ற முறையிலும் உசேன் உரிமைக்குரல் எழுப்பினார். அப்பொழுது அவர் தம் குடும்பத்துடன் மதினாவில் வாழ்ந்துவந்தார். பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். குறிப்பாக ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba) என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் உசேனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர். அவர்களை நம்பிய உசேன் தம் உறவினர்களடங்கிய ஒரு சிறு படையுடன் ஈராக்கை நோக்கிச் சென்றார். ஆனால், உசேன் கூபாவை அடைந்தபொழுது அங்குள்ள மக்கள் தம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை; உசேனுக்கு உதவவில்லை.\n\nகூபாவின் ஆளுநராக இருந்த உபயதுல்லா (Ubaidullah) தம் பெரும்படையுடன் கர்பலா என்ற இடத்தில் கி.பி. 680–இல் உசேனைச் சந்தித்தார். உசேனின் சமாதானப் பேச்சு பயனளிக்காததால் போர் மூண்டது. போரில் உசேன் குடும்பத்தின் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். உசேனும் வீரப்போர் செய்து வீழ்ந்தார். எஞ்சியிருந்த உசேனின் குடும்பத்தினர் கலீபா எசீதிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலீபாவால் அரச மரியாதைகளுடன் நடத்தப்பட்டனர்.\n\nகர்பலாவில் நடந்த போருக்கும், உசேனின் இறப்பிற்கும் தாம் பொறுப்பல்ல என்றும் தம் படைத்தலைவர்தான் காரணமென்றும் கலீபா கூறினார். ஆனால், இசுலாமிய உலகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதுநபியின் பேரரான உசேனும் அவர் குடும்பத்தவர்களும் கொல்லப்பட்ட முறையை அறிந்த சில இசுலாமியர்கள் சினமுற்றுக் கிளர்ந்தெழுந்தனர். நாளடைவில் அவர்களே சீயர்கள் என்று பெயர் பெற்றனர். கர்பலாவில் இறந்த உசேன் சீயர்களின் இமாம் (தலைவன்) எனக் கருதப்படுகிறார். அவர் புதையுண்டிருக்கும் கர்பலா அவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது."}}