{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t7d2ux3b/", "data": {"id": "t7d2ux3b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t7d2ux3b/", "kind": "article", "headword": "இலினாய் உள மொழியியல் திறன் சோதனை", "romanization": "iliṉāy uḷa moḻiyiyal tiṟaṉ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.277272+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலினாய் உள மொழியியல் திறன் சோதனை என்பது குழந்தைகளின் மொழித் திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட உளவியல் சோதனை ஆகும்.", "body_ta": "இலினாய் உள மொழியியல் திறன் சோதனை என்பது குழந்தைகளின் மொழித் திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட உளவியல் சோதனை ஆகும். இரண்டு வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளின் மொழித் திறனை இச்சோதனை மூலம் அறிய முடியும். ஆசுகுடு (Osgood) என்பவர் அமைத்த கருத்துப்பரிமாற்றச் சோதனையின் அடிப்படையில் இலினாய் உளமொழியியல் திறன் சோதனை (Illinois Test of Psycholinguistic Abilities) அமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனை பின்வரும் பகுதிகளைக் கொண்டதாகும்.\n\nவழிகள் (Channel)\n\nகேட்டுச் சொல்லுதல், பார்த்தறிதல்.\n\nசெயல் இயங்குமுறைகள் (Processes)\n\n(பெற்றுக் கொள்ளுதல்) சொற்களையும் படங்களையும் பார்த்து அறிதல்.\n\nஒருங்கிணைத்தல்\n\nமுன்னறிந்தவற்றுடன் புதிய அறிவை இணைத்தல்.\n\nஉணர்த்துதல்\n\nகருத்துகளைச் சொற்களாலும் செய்கைகளாலும் தெரியப்படுத்துதல்.\n\nநிலைகள் (Levels)\n\nமொழிச் சின்னங்களைப் பயன்படுத்துதல், புலன்காட்சி வேகம், மனப்பாடம் செய்யும் வேகம், படித்ததை நினைவிலிருத்தல் போன்ற பழக்கமான முறைகளைப் பயன்படுத்துதல்.\n\nஇச்சோதனைக்கு எடுத்துக்காட்டாக, உணர்த்துதல் என்றும் பகுதியின் சோதனை பின்வரும் முறையில் அமைதலைக் காணலாம். குழந்தைகளுக்குப் பழக்கமான எழுதுகோல், ஊதல், கரும்பலகை, பம்பரம் போன்ற பொருள்களைக் காட்டி இவற்றை என்ன செய்யலாம், என்று கேட்கப்படுகிறது. குழந்தைகள் இக்கேள்விக்குத் தம் செய்கைகள் மூலம் விடை கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வேறொரு சோதனைப் பகுதியில் குழந்தைகளுக்கு ‘இங்கே ஒரு பையன் இருக்கிறான் அங்கே மூன்று ...’ என்பது போன்ற முடிவுறாச் சொற்றொடர்களுக்கு இயைபுள்ள படங்கள் காட்டப்படுகின்றன. குழந்தைகள் இப்படங்களைப் பார்த்துப் பொருத்தமான முழுச் சொற்றொடர்களைக் கூற வேண்டும். இத்தகைய சோதனைகளின் மூலம் பொது இயக்கத்திறன் வளர்ச்சி, புலனியக்கத்திறன் ஒருங்கிணைவு, புலன்காட்சித்திறன், மொழியறிவு, அறிதல் திறன், சமூக முதிர்ச்சி போன்ற பல திறன்களை மதிப்பீடு செய்ய முடியும். இலினாய் மொழியியல் சோதனையையொட்டி வேறு பல மொழியியல் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சோதனைகள் குழந்தைகளின் மொழி நாட்டத்தினைக் கண்டுபிடிக்க உதவி செய்வதோடு, கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் கருவிகளாகவும் பயன்படுகின்றன.\n\nஇச்சோதனைகளை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அந்த நாடுகளில் வழங்கும் மொழிகளில் அமைத்துப் பயன்படுத்துதல் வேண்டும்."}}