{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t3qfjvpc/", "data": {"id": "t3qfjvpc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t3qfjvpc/", "kind": "article", "headword": "அகமுகம்–புறமுகம்", "romanization": "akamukam–puṟamukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.116850+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர்.", "body_ta": "மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்- திற்கு இடமான முறையாகும் என்று அறிவியலார் கருதுகின்றனர். ஆயினும் அகமுகம், புறமுகம் என்னும் பண்புத் தொகுதிகள் உளவியல் விளக்கங்களில் தலையாய இடத்தைப் பெற்றிருக்கின்றன.\n\nதனி மனிதனின் உள் ஊக்குத் திறன் (Libido) உள் நோக்கிச் செல்லுமாயின், அவன் அகமுக ஆளுமை கொண்டவன் என்றும், வெளியுலகை நோக்கிச் செல்லுமாயின், அவன் புறமுக ஆளுமை கொண்டவன் என்றும் உயுங் இந்த ஆளுமைப் பாகுபாட்டினை விளக்கினார். ஒவ்வொருவரிடமும் சில அகமுகப் பண்புக் கூறுகளும் சில புறமுகப் பண்புக் கூறுகளும் காணப்படுகின்றன. இப்பண்புக்கூற்றுத் தொகுதிகளில் எது வலிமையாக இருக்கிறதோ அதையொட்டியே அவருடைய ஆளுமை, அகமுகம் அல்லது புறமுகமாக அமைகிறது. ஆதலின், எவரும் முற்றிலும் அகமுக ஆளுமையினராகவோ முற்றிலும் புறமுக ஆளுமையினராகவோ இருப்பதில்லை என்று உயுங் கூறினார். இவ்விரு ஆளுமை வகையினரையும் இவர் மேலும் புலனுணர்வு, சிந்தனை, உணர்ச்சி, உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவினராகப் பிரிக்க முடியும் என்று கருதினார். பாவ்லவ்வு (Ivan Pavlov) என்னும் உளவியல் அறிஞர் அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புக் கூறுகளுக்கு இணையாகக் கிளர்ச்சி வகை (Excitory Type), உளத்தடை வகை (Inhibitory Type) என்று இரு பண்புக் கூறுகளை விளக்கினார். இவர் மனிதர்களின் ஆளுமைப் பண்புக் கூறுகளுக்கு மைய நரம்பு மண்டல அமைப்பு அடிப்படைக் காரணமாகும் என்று கூறினார். நாய்களைக் கொண்டு இவர் நடத்திய ஆக்க நிலையிருத்தப் பரிசோதனைகளால் இவருக்குக் கிடைத்த கண்டுபிடிப்புகளில் மையநரம்பு மண்டல அமைப்பு, உயிரினங்களின் நடத்தைக்குக் காரணமாக அமைகிறது என்பதும் ஒன்றாகும். பரிசோதனைக்குட்பட்ட நாய்களின் நடத்தைக் கூறுகளை ஆராய்ந்து, அவற்றில் சில கிளர்ச்சி வகைப்பட்டனவாகவும் மற்றவை உளத்தடை வகைப்பட்டனவாகவும் இருந்ததைக் கண்டார். இத்தகைய ஆளுமைப் பாகுபாடு, மனிதர்களிடம் காணப்படும் புறமுகம், அகமுகம் ஆகியவற்றிற்கு இணையானவையாக இருப்பதையும் கண்டறிந்தார். பாவ்லவின் கருத்துகளைச் சோதனை முறையில் உண்மையெனக் கண்டறிந்தவர் ஐசங்கு (H.J. Eysenk) ஆவார். இவர் மனிதர்களிடம் காணப்படும் பண்புக் கூறுகளை ஆராய்வதற்காகத் தரப்படுத்தப்பட்ட பல வினா நிரல்களை அமைத்தார். இவற்றின் உதவியினால் ஐசங்கு பலவகையான மக்களைச் சோதனை செய்தார். இச்சோதனைகளின் விளைவாக இவர் பாவ்லவு கூறிய கிளர்ச்சியுறு வகை என்னும் பண்புக்கூறு மனிதர்களிடம் புறமுக ஆளுமையாகவும், தடையுறுவகை என்னும் பண்புக்கூறு மனிதர்களிடம் அகமுக ஆளுமையாகவும் காணப்படுகின்றன என்று கண்டுபிடித்தார். இவ்விரு வகையினரின் இயல்புகள் நேர் எதிரிடையானவை எனவும் கூறினார். ஐசங்கு நிகழ்த்திய சோதனைகளின் விளைவாக இவர் அகமுக ஆளுமையின் பண்புக் கூறுகளையும் புறமுக ஆளுமையின் பண்புக் கூறுகளையும் வேறுபடுத்திக் குறிப்பிட்டார்.\n\nஅகமுக ஆளுமையினர் தாமாகச் செய்யக்கூடிய செயல்களில் மட்டுமே அக்கறை காட்டுவர்; பிறர் நட்பு விழையார்; தனிமையை நாடுவர்; தத்துவ ஆர்வமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டிருப்பார்; பகற் கனவில் ஈடுபடுவர்; மிகையான அவைக்கூச்சம் உடையவராயிருப்பர்; எளிதில் மனவெழுச்சி வயப்படுபவர்; கற்பனைத் திறன் மிக்கவராய் இருப்பர்; எச்செயலையும் திட்டமிட்டுச் செய்வர்; நம்பிக்கைக்கு உரியவராயிருப்பர். புறமுக ஆளுமையினர் சமூகவயமாதலை விரும்புபவர்; சமூக ஏற்புடைமையைப் பெரிதும் மதிப்பவர்; உரையாடுவதில் ஆர்வம் கொண்டவர்; நட்பு விழைபவர்; தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவர்; தம் குற்றம் காணாதவர்; தலைமை ஏற்க முன்வருபவர்; தனிமையை விரும்பாதவர்; எதையும் ஆழ்ந்து எண்ணாமல் உள்துடிப்புக்கு (Impulse) ஏற்ப விரைந்து செயல்படுபவர்; தேவைக்குமேல் தன்னம்பிக்கை உடையவராய் இருப்பர்.\n\nமிகையான அளவில் புறமுகப் பண்புக் கூறுகளைக் கொண்டிருப்பவர்களும் மிகையான அளவில் அகமுகப் பண்புக் கூறுகளைக் கொண்டிருப்பவர்களும் இயல்பு நிலையினின்றும் பிறழ்ந்த நடத்தையினையுடையவராக இருப்பார்கள். இவ்விரு மிகை நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சில அகமுகப் பண்புக் கூறுகளையும் சில புறமுகப் பண்புக் கூறுகளையும் உடையவராக இருப்பார்கள். மனிதர்களுள் பெரும்பாலோர் இந்த இடைப்பட்ட ஆளுமை வகையினராக (Ambivert) இருக்கின்றனர். எவ்வகை ஆளுமையினையுடையவராக இருப்பினும் பெரும் இழப்புகள், உளப் போராட்டங்கள், ஏமாற்றங்கள், மனக் குலைவுகள், மன உளைச்சல்கள் ஆகியவை அவர்களுடைய ஆளுமையைச் சீர்குலையச் செய்கின்றன.\n\nஅகமுக ஆளுமையினர் இத்தகைய மன உளைச்சல்களுக்கு உள்ளாகும்போது பெரும்பாலும் கிலி, உளச்சோர்வு, பதற்றம், உளப்பீடிப்பு போன்ற உளக் கோளாறுகளுக்கு (Neuroses) உள்ளாகின்றனர். இவர்கள் கடுமையான மனப் போராட்டங்களுக்கு உட்படும் போது உளச்சிதைவு நோய் (Schizophrenia) கருத்துத்திரிபு நோய் (Paranoia) ஆகிய உளப்பிணிகளால் (Psychoses) பாதிக்கப்படுகிறார்கள்.\n\nபுறமுக ஆளுமையினர் இத்தகைய கோளாறுகளுக்கு உள்ளாவதில்லை. இவர்கள் மன உளைச்சலுக்கு உட்படும்போது உளக்கூறு மாற்றக் கோளாறு (Hysterical Conversion), உளவிரிசல் கோளாறு (Hysterical Dissociation) ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். இவர்கள் கடுமையான உளப் போராட்டங்களுக்கு உட்படும்பொழுது உளக் கிளர்ச்சிச் சோர்வு நோய்க்கு (Manic Depressive Psychosis) உள்ளாகிறார்கள்.\n\nஅகமுக, புறமுகப் பண்புக் கூறுகளை மதிப்பீடு செய்வதற்காகத் தனிப்பட்ட வினா நிரல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐசங்கினால் அமைக்கப்பட்ட வினா நிரல்களும் நீமன் கோல்சுடெட் சோதனை (Neyman Kohlstet Test) என்னும் 50 வினாக்களைக் கொண்ட வினாநிரலும் பலராலும் அறியப்பட்டனவாகும்.\n\nஅகமுக ஆளுமையினர், புறமுக ஆளுமையினர் என்று இரு தனிப்பட்ட வகையினராக மனிதர்களைப் பிரிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களுள் ஒருசிலர் மிகையான அகமுகப் பண்புடையவராகவும் வேறு சிலர் மிகையான புறமுகப் பண்புடையவராகவும் இருக்கின்றனர், மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு வகையினரின் பண்புக் கூறுகளில் பலவற்றைக் கொண்டு, இவ்விரு வகையினருக்கும் இடையே உள்ள நிலையில் காணப்படுகின்றனர். மனிதர்களுள் பெரும்பாலோரிடம் காணப்படும் பண்புக் கூறுகளை எடுத்து அகமுகம், புறமுகம் ஆகிய ஆளுமைகளுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்திலுள்ள மணி போன்ற வளைவைப் பெறுகிறோம். இதில் ‘இ’யிலிருந்து ‘அ’ வை நோக்கிச் செல்லச் செல்ல மிகையான அகமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் ‘இ’யிலிருந்து ‘பு’ நோக்கிச் செல்லச் செல்ல மிகையான புறமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.\n\nமேலும் இவ்வரைபடத்திலிருந்து மக்களுள் பெரும்பாலோர் அகமுகத்திற்கும், புறமுகத்திற்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஆளுமையினைக் கொண்டவர்களாக இருப்பதையும் காணலாம்.\n\nமேலும் சூழ்நிலை, தூண்டல் ஆகியவற்றால் ஒருவன் சில சமயங்களில் புறமுகத்தோனாகவும் வேறுசில சமயங்களில் அகமுகத்தோனாகவும் காணப்படுவான், தற்காப்புடன் முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் பொழுது புறமுகனாகச் செயல்படுவான். ஆனால், அவள் இடையூற்றிலிருக்கும் பொழுதும் புற அழுத்தங்களால் தூண்டப்படும்பொழுதும் அகமுகனாசுச் செயல்படுவான். இவ்வாறு அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புகளும் ஒரு நடத்தைக் கோலத்தின் இரு துருவங்களாக இருக்கின்றன. காண்க: ஆளுமை. கே.அர.\n\nதுணை நூல்கள்\n\n: Jung, C.G., “The Structure and Dynamics of the Psyche”, In Collected works, Vol. 18. Princeton N.J., Princeton University press, 1960.\n\n: Nicholas S. Dicaprio, “Personality Theories”, CBS College Publicity, New York, 1983."}}