{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/stt67ugu/", "data": {"id": "stt67ugu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/stt67ugu/", "kind": "article", "headword": "அகமணம்", "romanization": "akamaṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.995000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒருவன் தனது பண்பாட்டோடு வரையறுக்கப்பட்ட குழுவிற்குள் மணம் கொள்ளும் சமூக முறைமையே அகமணம் (Endogamy) ஆகும்.", "body_ta": "ஒருவன் தனது பண்பாட்டோடு வரையறுக்கப்பட்ட குழுவிற்குள் மணம் கொள்ளும் சமூக முறைமையே அகமணம் (Endogamy) ஆகும். அகமணத்தைப் பால்சம் என்பார் வரையறை செய்யும் போது, “தன்னுடைய சாதி அல்லது குழுவிற்குள் மட்டும் மணம் செய்து கொள்ள வேண்டும். எனினும் நேரிடையாக இரத்த உறவுடையோருடன் மணம் கொள்வதை அகமணம் தடுக்கிறது” என்கிறார். புறமணம் இதற்கு நேர்மாறானது. தன் கால்வழியினருக்கு அப்பால் மணம் கொள்ளும் முறை புறமணம் ஆகும். அகமணம், புறமணம் ஆகிய இச்சொற்கள் ஒன்றோடு ஒன்று செயல்முறைக் கருத்தளவில் சார்புடையன எனலாம்.\n\nபழங்குடிகளில் சிலர் பெருங்கால்வழியினராகவும் பலர் கால்வழிக்குழுவினராகவும், தம் முன்னோர் அல்லது கால்வழிக் குறியீட்டோடு தொடர்புற்று வேறுபடுகின்றனர். இக்குழுக்களுக்கிடையே திருமண அமைப்பில் அகமண, புறமணச் சொற்களைச் செயல்முறைக் கருத்தோடு உற்று நோக்கும்பொழுது இரண்டும் மற்றதன் பொருளை ஏற்க முடியும்.\n\nபழங்குடி மக்கள் தம் பழங்குடிக்குள் மட்டுமே மணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒழுங்கு அகமண முறையைக் காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு கால்வழியிலும் உள்ள குடிகள் இரத்த உறவுடையன என்பதால் குறிப்பிட்ட அக்குடிகளுக்குள் மண உறவு கொள்ளாமல் அப்பழங்குடியிலேயே வேறொரு கால் வழியினருடன் மணம் கொள்கின்றனர். ஆகவே, இக்கால்வழிக்கு இம்மணம் புறமணமாக அமைகிறது. ஆயினும் இவை ஒரே பழங்குடிக்குள் அமைந்த கால்வழிகளாதலின் இம்மணம் அகமணமாகவும் அமைகிறது. மாறிவரும் சமூக அமைப்பில் கலப்புச் சாதித் திருமணம் புறமணச் சாதித் திருமணமாய் இருந்தாலும் அகமண வரையறைக்குள் சொல்ல வேண்டுமாயின் அதை அவ்வினத்தின் அகமண முறை (Racial Endogamy) என்றோ அந்நாட்டின் அகமண முறை (National Endogamy) என்றோ சொல்லலாம். ஏனெனில் ஒரே இனம் அல்லது ஒரே நாட்டினரோடு மணம் கொண்டிருப்பதால் அதனை அகமண முறை என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகிறது. இதனால் ‘அகமணம்’ என்பது குழு அகமணம், சாதி அகமணம், வகுப்பு அகமணம், இன அகமணம், நாட்டு அகமணம் எனப் பல நிலைகளில் அமைகிறது.\n\nஅகமணக் காரணிகளின் அகமும் புறமும்\n\nஅகமணம் பொதுவாகப் பெருமளவில் சமூகங்களுக்கிடையே காணப்படுகிறது. புறமணக் கோட்பாட்டைப் போல் அகமண வரையறை ஓர் உலகளாவிய பொது விதியை அதன் சமூகங்களுக்கிடையே கட்டமைக்க இயலவில்லை.\n\nபன்னாட்டு மக்களிடையே அகமணம் அவரவர் சமூக அமைப்பிற்கு ஏற்றவாறு பல நிலைகளை ஏற்றுள்ளது. பழங்குடி அகமணம், வகுப்பு அகமணம், சாதி அகமணம், இனக்குழு அகமணம், சமூக அகமணம் ஆகிய முதன்மையான நிலைகளுடன் அரசகுடி தகாப் புணர்ச்சி (Royal Incest), பிரேசில் நாட்டுத் தோட்டப் பண்ணைச் சமூகம், முகம்மதியர்களின் தந்தை வழிப் பெற்றோர்களின் நேர் உடன் பிறந்தோரின் சேய்களின் திருமணம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஅகமணம் பல சமூகங்களிடையே வேரூன்றியிருப்பதற்குப் பல நேரிடையான காரணிகள் புலப்படுகின்றன. தம் கால்வழியினரின் சாதி அல்லது இனக்குழுக்களைச் சாராத புதியவர்களை மணப்பதை ஆதிக்குடி அல்லது பழங்குடியினர் விரும்பவில்லை. புதியவர்களின் மந்திரம், சூனியம் முதலானவை தம்மையும் தம் இனக்குழுவினரையும் பாதிக்கும் என்ற மனப்பான்மை, அகமணத்திற்கு ஒரு காரணமாய் அமைந்தது. கொராவா ஆதிக்குடியை இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகக் கூறலாம்.\n\nகாடர், பில், ஓ (Ho), தோடர் மற்றும் இதர அகமணப் பழங்குடியினர், பிரேசில் நாட்டுத் தோட்டப்பண்ணைச் சமூகத்தினர், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க அகமணக் குடும்பங்கள், தென் அமெரிக்க வட அமெரிக்கக் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் பியூப்லோ இந்தியர்கள், வடகிழக்கு சைபீரியாவின் சுக்சி மக்கள், புது மெக்சிகோவின் சுனி பியூப்லோ இந்தியர்கள், இந்திய சாதிகள், முகம்மதியர் போன்றோர் அகமண முறையைக் கொண்டுள்ளனர். சொத்து, குடும்ப உரிமை ஆகியன தங்கள் கால்வழி அல்லது பரம்பரைக்குள்ளேயே பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கிலேயே இம்முறையை மேற்கொள்கின்றனர்.\n\nஇனக்குழுப் பண்புகள், சுற்றுப்புறம், வாழிடப் பகுதிகள் முதலானவை ஒவ்வொரு பழங்குடியினரிடையேயும் வேறுபட்டிருப்பதால் புறமண அமைப்பை ஆதிக்குடிகள் ஏற்கவில்லை. ஒவ்வொரு பழங்குடியும் தங்களின் தனித்தன்மை புறமண முறையால் குன்றிவிடும் என்று எண்ணுவதாலேயே அகமண முறை ஆழ்ந்து வேரூன்ற ஏதுவாகியது.\n\nஅகமண முறைகள்\n\nஇந்தியாவில் ஏறத்தாழ அனைத்துப் பழங்குடிகளும், சாதிகளும் அகமண உறவுத் திருமணத்தைச் சமூக முறைமைகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளனர். உலகச் சமூகங்களிடையே சற்றேறக்குறைய 10 விழுக்காட்டிற்குச் சிற்றூர் அல்லது குடியிருப்புக்குள்ளேயே அகமணம் (Village Endogamy) செய்யும் முறை காணப்படுகிறது. தென் அமெரிக்க, வட அமெரிக்க பியூப்லோ இந்தியர்களிடையே அவர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இருப்பவர்களை மட்டுமே மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சமூக வரையறை உள்ளது. இவ்விதத் திருமணங்களினால் வலையமைப்புக் குடும்ப முறை ஏற்பட்டு மிக நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்படுகிறது.\n\nஇனக்குழு அகமணத் திருமணம் ஐவரிக் கடற்கரை (Ivory Coast) இனக்குழுக்களிடையே காணப்படுகிறது. ஐவரிக் கடற்கரையில் அபார்ன், கொலங்கோ, அக்கினி, பொவுல், இலெபி குடியினர் அருகருகே வாழ்கின்றனர். மேல் வோல்டா (Upper Volta) பகுதியில் வாழும் மொசி குடியினர் இடம் பெயர்ந்து ஐவரிக் கடற்கரைக் குடிகளோடு ஒன்றியிருந்தாலும் கொலங்கோ, அக்கினி, மற்றும் பொவுல் குடிகளோடு மட்டுமே அகமண உறவு கொள்கின்றனர்; மொசி, இலெபி குடிகளுடன் மணம் கொள்வதில்லை.\n\nஇந்தியச் சாதிகளின் அகமணம் இந்து சமூகத்தின் சிறப்புக் கூறாக இருப்பது போலவே, பெரு, இன்கா, பண்டை எகிப்தியர், அவாய் அரச குடிகளின் ‘அரசகுடி தகாப்புணர்ச்சி’ ஆகிய மண முறைகளும் சிறப்பிடத்தைக் கொண்டுள்ளன. இவ்வரச குடிகளில் உடன்பிறந்தோரிடையே திருமணம் பண்டைக் காலந்தொட்டே வழக்கத்திலிருந்து வருகிறது.\n\nபாலினேசியா முதுகுடிகளின் வழக்குப்படி இவ்வரசகுடித் தகாப்புணர்ச்சி முறையை இருவிதக் கருத்துகளோடு தெளிவாக்குகின்றனர். தன் மனப் பார்வைக்குத் தெளிவாகத் தெரியும் செயல் முறைக் கருத்துக்கும், முழுமை பெறாத நிலைத்துள்ள கருத்திற்கும் அப்பாற்பட்ட விசைப் பொருள்களிலோ தெய்விகத் தன்மை பெற்ற சில மனிதர்களிடமோ தெய்வ ஆற்றல் சேருகிறது என்பது இவர்களுடைய சமயத் தத்துவம் ஆகும். இவ்வித தெய்விக ஆற்றல் அரச பரம்பரையினருக்கு உரித்தானதால் தம் குழந்தைகளிடையே மணம் முடிப்பதன் மூலம் இவ்வாற்றலைத் தம் கால்வழியினரிடையே கொண்டு செல்ல முடியும் என நம்புகின்றனர். பிரேசில் நாட்டுத் தோட்டப் பண்ணைச் சமூகம் சொத்துரிமை, அதிகார அமைப்பு ஆகியவற்றை நிலை நிறுத்தும் பொருட்டு அமைந்த அகமணக் குடும்ப முறை சற்று மாறுபட்ட நிலையில் காணப்படுகிறது. கரும்பு, காப்பித் தோட்ட உரிமையாளர்கள் குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தோரின் சேய்களிடையே மணம் செய்யும் முறை வழக்கத்திலுள்ளது. இந்தக் குடும்பங்களுடைய நிலம் அடிமைக் கூலியாட்கள், இதர பண்ணைப் பொருள்கள் ஆகியன சொத்துரிமை விதிப்படி மகனுக்கும் மகளுக்கும் சம அளவில் பகுக்கப்படுகிறது. ஆகவே இச்சமூகங்களில் 19–ஆம் நூற்றாண்டின் அண்மைக் காலம் வரை முதல் நேர் உடன் பிறந்தோருடன், நெருக்கமான உறவுடைய ஒரே குடும்பத்தினருடன் மணம் செய்வது வழக்கத்திலிருந்து வருகிறது.\n\nஇசுலாமியர் தந்தைவழி நேர் உடன் பிறந்தோர்களின் சேய்களின் திருமணம், செயல்முறையில் பிரேசில் நாட்டுத் தோட்டப் பண்ணைச் சமூகத்திற்கு ஒப்பானது எனலாம். இசுலாமியர் சமூகம், தந்தை கால்வழியைச் சார்ந்ததாகும். இவர்கள் ஆபிரகாம் என்று தம் மூதாதையரை இனம் காட்டுகின்றனர். உடன் பிறந்தோரின் மகளை மணம் கொள்ளும் முறை இச்சமூகத்தில் காணப்படுகிறது. இவ்வித அகமணம் பொதுவாக அனைத்துச் சமூகத்திலும் காணப்படுவது போன்று குடும்பச் சொத்தைத் தம் பரம்பரைக்குள் நிலைநிறுத்த அமைந்த திருமண அமைப்பு ஆகும். இசுலாமியப் பெண்கள், சொத்துரிமையில் ஆண்கள் பெறுவதில் பாதியைப் பெறுகின்றனர். பிரடரிக் பார்த் என்பவர், இசுலாமியரின் இவ்விதத் திருமண முறை அரசியல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், சகோதரர்களுள் சுயநலக் கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்.\n\nஅகமணமும் இன்றைய குடும்ப அமைப்பும்\n\nதிருமணம், மனிதனின் மணம், உயிர், பால் உணர்வுகளை நிறைவு செய்வதற்காக மட்டும் அமையாமல் சமய, பண்பாட்டு உறுப்பினராக அச்சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலையினையும் அமைத்துத் தருகிறது.\n\nஇருவர் இணைந்து மேற்கொள்ளும் வரையறுக்கப்பட்ட சமூகச் செயல்கள், அவர்களது வாழிடம், பொருள், அதிகாரம், சமயம், சடங்கு ஆகிய சமூக நெறிகளைத் தனித்தன்மை கொண்ட நிலையில் ஏற்றுக்கொண்டு அவற்றை வழிவழியாகத் தம் கால்வழியினருக்கும் பயிற்றுவிக்கும் கூடமாகவும் குடும்பம் அமைகிறது. திருமணமும் குடும்பமும் இருவித சமூகக் கட்டமைப்புகளாக இருப்பினும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை.\n\nஅகமணத் திருமணம் பல கூறுகளில் ஏற்புடையதாகவும், ஏற்பற்றதாகவும் காணப்படுகிறது. இதன் சிறப்புக் கூறுகளை நோக்கும்போது, அகமணம், அகமணக் குடும்பங்கள் அக்குழுவினரிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் நிலை நாட்டுகின்றன. பெண்கள் சுதந்திரமாகத் தம் பங்கினைப் பெற இவ்வமைப்பு வழிகோலுகிறது. சொத்து, அதிகார அமைப்பில் வேற்றுக் குழுவினரின் ஆதிக்கம் தடுக்கப்படுகிறது. இனக் கலப்பும் தடுக்கப்படுகிறது.\n\nஇம்மணமுறையின் சிறப்பற்ற குணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடும்பொழுது, ஒரு நாட்டின் ஒற்றுமையை, குறிப்பாகச் சமூகங்களிடையே ஒற்றுமையைப் பெருமளவில் அகமண முறையும் அகமணக் குடும்ப அமைப்பும் பாதிக்கின்றன. மணமகனையும் மணமகளையும் குறுகிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால் மரபுவழியில் சில பண்புகள் மங்கிக் காணப்படுவதாகவும் மரபியலார் கருத்துத் தெரிவிக்கின்றனர். சீ.ப.\n\nதுணை நூல்கள்\n\nBobannan, E.P.J., and J. Middleton,eds., “Marriage, Family and Residence”, Natural History Press, New York, 1968.\n\nFirth, R., “The Analysis of mana: An Emprical Approach, “Journal of the Polynesian Society”, 49:1940.\n\nHutton, J.M., “Caste in India: Its nature, function and origins”, Oxford University Press, London, 1951.\n\nKapadia, K.M., “Marriage and family in India”, Oxford University Press, Bombay. 1955.\n\nMurphy, R.F., and Kasdan,L., “The structure of parallel cousin Marriage, “American Anthropologist”, 61:1959.\n\nStephen, W.N., “The family in Cross-Cultural perspective”, Hrt. Rinehart and Winston, New York, 1963.\n\nWastermark, E., “The history of human marriage”, Macmillan, New York, 1921."}}