{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/snwmtukr/", "data": {"id": "snwmtukr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/snwmtukr/", "kind": "article", "headword": "நோய்த் தடுப்பியல்", "romanization": "nōyt taṭuppiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.367879+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விலங்குகள் நோய்வாய்ப் படாமல் இருப்பது பற்றி விளக்கும் ஒரு பகுதி, நோய்த் தடுப்பியல் ஆகும்.", "body_ta": "விலங்குகள் நோய்வாய்ப் படாமல் இருப்பது பற்றி விளக்கும் ஒரு பகுதி, நோய்த் தடுப்பியல் ஆகும். நோய் நுண்ணுயிரிகள் உலகின் அனைத்து இடங்களிலும் பரவலாக இருக்கின்றன. அதாவது, நோய் நுண்ணுயிரிகள், சுவாசிக்கும் காற்று, பருகும் நீர்,உண்ணும் உணவு முதலிய அனைத்திலும் இருக்கும். இவற்றின் மூலம் உடலினுள் சென்ற நோய் நுண்ணுயிரிகள், நோய் எதிர்ப்புத் திறனால் நோயை உருவாக்காமல் மாண்டு விடுகின்றன. உடலின் இரு வகையான செயல்பாடுகள் மூலம், நோய் எதிர்ப்புத் திறன் உண்டாகின்றது. அவை முதன்மைத் தற்காப்பு (Primary defence), இரண்டாம் தற்காப்பு (Seconary defence) என்பன.\n\nமுதன்மைத் தற்காப்பு. உடலை மூடியுள்ள தோல் மற்றும் சவ்வு மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லாமல் தடுக்கப் படுகின்றன. தோலில் சுரக்கும் வேர்வைத் துளிகள் நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டவை. கண், காது, மூக்கு, இனப் பெருக்க உறுப்பு இவற்றை மூடியுள்ள சவ்வுகளில் சளி போன்ற ஒட்டும் தன்மை கொண்ட நீர்மம் சுரக்கும். இந்த உறுப்புகள் மூலம் நோய் நுண்ணுயிரிகள் உடலில் செல்லும் போது, அவற்றில் ஒட்டிக் கொள்ளும். மூக்கு, மூச்சுக் குழல் வழியாக இவை செல்லும் போது, அங்கு சுரக்கும் சளியில், இவை ஒட்டிக் கொண்டு சளியோடு வெளியேறி விடும். கண்ணில் சுரக்கும் கண்ணீரின் மூலம், கண்ணைச் சென்றடையும் நுண்ணுயிரிகள் வெளியேற்றப் படுகின்றன. காது வழியாகச் சுரக்கும் மெழுகு போன்ற நீர்மம், காது வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகளை வெளியேற்ற உதவுகிறது. வாயின் வழியாகச் செல்லும் நுண்ணுயிரிகள் இரைப்பையைச் சென்றடைந்து, அங்கு சுரக்கும் அமிலத்தில் இறந்து விடும்.\n\nஇரண்டாம் தற்காப்பு. முதன்மைத் தற்காப்பையும் மீறி, நோய் உயிரிகள் உடலினுள் சென்று பாதிப்பை உருவாக்கும் போது, நுண்ணுயிரிகள் இரண்டாம் தற்காப்பு மூலம் கொல்லப் படுகின்றன. குருதியில் காணப் படும் வெள்ளணுக்கள், இந்த இரண்டாம் தற்காப்பில் இன்றியமையாதவை. இரண்டாம் தற்காப்பு அணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன்(cell mediated immunity) கொண்டும், தேவைக்கேற்பச் செயல் படும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டும் விளங்கும்.\n\nஅணுக்கள் மூலம் நோய் எதிர்ப்புத் திறன். கழுத்துக் கணையச் சுரப்பி நிண அணுக்கள்(Thymus Lymphocyte) இதில் குறிப்பிடத் தக்கவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று லிம்போகைன் (lymphokines) எனும் அணுக்களாக மாறி, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்லத் தவறும் போது, கழுத்துக் கணைய நிண அணுக்களை அழிக்கும் அணுக்களாக (killer cell)உருவெடுத்து, நோய் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன.\n\nதேவைக்கேற்பச் செயல்படும் நோய் எதிர்ப்புத் திறன். பர்சா நிண அணுக்கள் (bursa lymphorcyte) இதில் இன்றியமையாதவை. குருதியில் இருக்கும் உடலுறுப்புகளை, நோய் நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இவ்வணுக்கள் குருதியின் மூலம், அவ்வுறுப்புகளுக்குச் சென்று, பிளாஸ்மா அணுக்களை (plasma cells) உற்பத்தி செய்யும். பிளாஸ்மா அணுக்கள் உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப் பொருள்(antibody)நோய் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட்டு அவற்றை மாய்க்கும்.\n\nநோய் எதிர்ப் பொருள்கள். பொதுவாக ஐவகையான நோய் எதிர்ப் பொருள்கள் உடலில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை எதிர்ப் பொருள் A, எதிர்ப் பொருள் M, எதிர்ப் பொருள் G, எதிர்ப் பொருள் D, எதிர்ப் பொருள் E ஆகும்.\n\nஎதிர்ப்பொருள் G. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 75% இவ்வகையைச் சேர்ந்தது. இவை, மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை G2a, G2b, G2c, G2d எனப் படும். இந்த எதிர்ப் பொருள் மட்டுமே தாயிடமிருந்து தொப்பூழ்க் கொடி (placenta) மூலம், கருப்பையில் வளரும் குட்டிகளுக்குச் சென்று, குட்டிகளில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குகிறது.\n\nஎதிர்ப் பொருள் A. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 15% இவ்வகையைச் சேர்ந்தது. இவை சுவாச, உணவு மண்டல, புணர்ச்சி வாய்ச் சவ்வுகளில் சுரக்கும். அதன் மூலம், சுவாச உறுப்பு, குடல், புணர்ச்சி வாய் முதலியவற்றைப் பாதுகாக்கும்.\n\nஎதிர்ப் பொருள் M. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 10% இவ்வகையைச் சேர்ந்தது. உடலை நுண்ணுயிரிகள் தாக்கும் போது, இது முதன் முதலில் உற்பத்தியாகி, நோயைக் கட்டுப் படுத்தும்.\n\nஎதிர்ப் பொருள் E. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில், 0.004% இவ்வகையைச் சார்ந்தது. உடலில் ஒவ்வாமை ஏற்படும் போது, இது கூடுதலாக உற்பத்தியாகி, ஒவ்வாமையைக் கட்டுப் படுத்தும்.\n\nஎதிர்ப் பொருள் D. உடலிலுள்ள மொத்த எதிர்ப் பொருள்களில் 0. 2% இவ்வகையைச் சார்ந்தது. இவற்றைப் பற்றித் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.\n\nநோய்த் தடுப்பியல், அறிவியல் கோட்பாட்டுப்படி, நோய்த் தடுப்பியல்(Innak Immunity) பெறப் பட்ட நோய்த் தடுப்பியல் (acquired Immunity) எனப் பிரிக்கப் படும்.\n\nஇயற்கை நோய்த் தடுப்பியல். உடலிலுள்ள இயற்கையான நோய்த் தடுப்புத் திறனால், சில விலங்குகள், சில நோய்களினால் பாதிக்கப் படுவதில்லை. எடுத்துக் காட்டாக, மாடுகளைப் பாதிக்கும்கோமாரி நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மாடுகளைத் தாக்கும் வெக்கை நோயினால், மனிதர்கள் தாக்கப் படுவதில்லை. மனிதர்களைப் பாதிக்கும் காலரா நோயினால், மாடுகள் தீமையடைவதில்லை.\n\nபெறப்பட்ட நோய்த் தடுப்பியல். இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகிறது. அவை பிற வினை நோய்த் தடுப்பியல்(pssive Immunity) தன் வினை நோய்த் தடுப்பியல்(active Immunity) என்பன.\n\nபிறவினை நோய்த் தடுப்பியல். நோய் பரவலாகக் காணப் படும் நேரங்களில் அந்நோய் எதிர்ப்பு ஊனீரை(anti serum) உடலில் செலுத்தினால், எதிர்ப்பு ஊனீரிலுள்ள நோய் எதிர்ப் பொருள்கள் அவ்விலங்கை நோயிலிருந்து காக்கும்.\n\nதன் வினை நோய்த் தடுப்பியல். சில சமயம் ஒரு முறை ஒரு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அந்நோயினால் பாதிக்கப் படாது. காட்டாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட விலங்கு, மீண்டும் அம்மையினால் பாதிக்கப் படாது. இத்தகைய நோய்த் தடுப்பை விலங்குகளுக்குத் தடுப்பூசி மூலம் அளிக்கலாம். விலங்குகளின் தடுப்பூசி மருந்து, நோய் எதிர்ப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால், அந்நோயினால் விலங்குகள் பாதிப்புக்குள்ளாவதில்லை. —மு. சேகர்"}}