{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/snbsf3jq/", "data": {"id": "snbsf3jq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/snbsf3jq/", "kind": "article", "headword": "உடை", "romanization": "uṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.035007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மனிதன் தோன்றிய தொடக்க காலத்தில் உடை ஒரு தேவையாகக் கருதப்படவேயில்லை.", "body_ta": "மனிதன் தோன்றிய தொடக்க காலத்தில் உடை ஒரு தேவையாகக் கருதப்படவேயில்லை. மனிதன் ஆடை இன்றியே வாழ்ந்தான். நாளடைவில் தான் உடை தோன்றி மெல்ல ஒரு தேவையாக மாறி, இன்றைக்கு உணவுக்கு அடுத்தபடியான இன்றியமையாத் தேவையாக நிலவுகிறது.\n\nகூச்ச உணர்வின் காரணமாகவே மனிதன் உடை உடுத்தத் தொடங்கியிருக்கக் கூடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்றைக்கு ஒரு சிறு மறைப்புக் கூட இல்லாமல் பொதுவாக யாரும்–ஆணோ பெண்ணோ வெளியில் வருவது கிடையாது. மேலும், உடுத்தியிருக்கும் ஆடை நழுவ முற்பட்டால், மனிதனுடைய கை விரைவாகச் செயற்பட்டு தழுவும் ஆடையைச் சரி செய்கின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் மனிதனிடம் இயல்பாய் அமைந்திருக்கிற கூச்ச உணர்வே என்பது மேற் குறித்த கருத்துடையோரின் வாதம்.\n\nஆனால், உண்மையில் கூச்சம் என்பது ஓர் இயல்புணர்ச்சியன்று. அது பயிலப்பட்டு வருவது. எங்குக் கூச்ச உணர்வு கற்பிக்கப்பட்டு, எல்லோராலும் பயிலப்பட்டு, வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதோ அங்குத் தான் கூச்ச உணர்வுக்கும் உடைக்கும் தொடர்பு இருக்கிறது. ஆடை இன்றி ஒருவன் பிறர் முன்னால் வரலாகாது என்ற நெறி ஏற்பட்டு உடையணிவது ஒரு வழக்கமான நிலையாகும்போது, அந்த வழக்கத்தின் அடிப்படையில் அவன் உடையணிகிறான். உடை இல்லாத நிலையிலும் உடை நழுவிய நிலையிலும் அவனுக்குக் கூச்சம் ஏற்படுகிறது. உடையன்றி வேறு ஒன்றை அணிய வேண்டும் என்று நெறிப்படுத்தப்பட்டு அது வழக்கமாய் ஆகும்பொழுது அந்த ஒன்றை அணியாத நிலையில் அவனுக்குக் கூச்சம் ஏற்படும். தென் அமெரிக்காவில் வாழும் போடோக்யூடோ இந்தியர்களிடையே பெண்கள் ஆடையின்றி இருப்பார்கள். ஆனால், கீழ் உதட்டில் ஒரு துளை போட்டு அதில் ஒரு தக்கையைச் சொருகியிருப்பார்கள். ஆடையில்லாமல் அவர்கள் பிறர் முன் தயக்கமின்றிச் செல்வார்கள். ஆனால், உதட்டு அணி இல்லாமல் ஒரு போதும் பிறர் முன் வரமாட்டார்கள். உதட்டு அணி இல்லாமல் போனால் கூச்சப்பட்டுக் கொண்டு, நாணிக் கோணி, ஓடி ஒளிந்து விடுவார்கள். அமேசான் (Amazan) ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் விடோடோ இந்தியர்களிடையே பெண்கள் ஆடை அணிய மாட்டார்கள். ஆண்கள் மட்டும் இடுப்பில் ஒரு மரப்பட்டையை ஆடையாகச் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்த மரவுரியில்லாமல் அவர்கள் யார் முன்னும் நிற்க மாட்டார்கள். ஆக, கூச்சம் என்பது இயல்புணர்வும் அன்று; உடையணிதலும் அந்த உணர்வின் அடிப்படையில் எழுந்ததும் அன்று என்பதை உணர முடியும்.\n\nபுறச் சூழ்நிலையின் கூறுகளான குளிர், மழை ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே மனிதன் உடையணியத் தொடங்கியிருக்கக் கூடும் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆனால், அவனிடம் இயல்பாய் அமைந்திருக்கின்ற அலங்கார உணர்வின் உந்துதலால்தான் அவன் உடையணியத் தொடங்கியிருக்கக் கூடும் என்று அமெரிக்கக் கல்விக்கலைக் களஞ்சியம் (The American Educator Encyclopaedia) கூறுகிறது. உடையைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல் (Garment) உண்மையில் அலங்காரம் (Adornment) என்பதையே குறிக்கும் என்பதை இந்நூல் தன் கருத்துக்கு ஆதரவாக எடுத்துக் காட்டுகிறது.\n\nவெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிற மக்களுக்கு உடம்பை மறைக்க வேண்டிய தேவை இல்லை. ஆகவே, அவர்கள் ஆடையின்றியோ குறைவான ஆடையை உடுத்திக் கொண்டோ இருக்கலாம். ஆயினும், அவர்கள் தாம் வாழும் புறச் சூழ்நிலைக்குத் தேவையில்லாத முறையில் உடையணிந்திருக்கின்றனர். அராபியர்கள் வெம்மையான-பாலை நிலப் பகுதியில் வாழ்கிறார்கள். அத்தகைய புறச் சூழ்நிலையில் அவர்களுக்குக் குறைவான ஆடையே போதும். ஆயினும், அவர்கள்–ஆண் பெண் இருபாலாரும் உடம்பை மறைக்கக் கூடிய கனமான, நீண்ட ஆடைகளை அணிகிறார்கள். குளிர் மிகுந்த பகுதிகளில் மிகுதியான உடைகள் தேவைப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் மிகுதியான, கனமான ஆடைகளை அணிவது தேவையாய் இருக்கலாம். ஆனால், தென் அமெரிக்காவின் தென் கொடியில் மிகக் குளிர்ந்த பகுதியில் வாழும் ஆதிக்குடிகளான இந்தியர்கள் ஆடை ஏதுமின்றி வாழ்கிறார்கள். குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள உடம்பு முழுவதும் சேற்றைப் பூசிக் கொள்கிறார்களே தவிர, ஆடை எதுவும் அணிவதில்லை. இதனால், மனிதன் குளிர், மழை ஆகியவற்றுக்காக உடையணிய முற்படவில்லை என்பதும், மனிதன் உடை உடுத்தத் தொடங்கியதற்கு இவை காரணமில்லை என்பதும் தெளிவு.\n\nவரலாற்றுக்கு முந்திய காலத்தில் மனிதன் ஆடையின்றி வாழ்ந்து வந்தான். அந்த நிலையிலும்கூட அவன் தன் உடலைப் பலவகையான இயற்கைச் சாயங்களைக் கொண்டு பூசி அலங்கரித்துக் கொண்டான். மணிகள், கிளிஞ்சல்கள், இறகுகள், மலர்கள் ஆகியவற்றை அணிந்து கொண்டான். உடல் அலங்காரத்தின் ஒரு பகுதியாக அவன் தன் இடுப்பைச் சுற்றி மலர்கள், இலைக் கொத்துகள், புல் கொத்துகள் ஆகியவற்றையும் அணிந்து கொண்டான். இதுவே உடையின் தோற்றத்து அடிக்கல்லாக அமைந்தது.\n\nநாளடைவில் இடுப்பில் மலர், இலை, புல் இவற்றுக்குப் பதிலாக மரப்பட்டையை அணிந்து கொள்ளத் தொடங்கினான். மரப்பட்டையைத் தொடர்ந்து விலங்குகளின் தோலை அணியத் தொடங்கினான். மனிதன் தொடக்கத்தில் காட்டில் விளைந்த காய், கனி, கிழங்குகளைத் தன் உணவாக அமைத்துக் கொண்டான். இந்த உணவோடு விலங்குகளின் இறைச்சியைச் சேர்த்துக் கொள்ள, அவன் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டான். அப்போது வேட்டையில் கிடைத்த விலங்குகளின் தோலை அரையில் உடுத்திக் கொண்டான். அறியின் புதிய நூல் (The New Book of Knowledge) என்னும் நூல் ‘மனிதன் விலங்குகளின் தோலை அணிந்து கொள்ள முற்பட்டது அதன் அலங்காரப் பகட்டுக்காக மட்டுமன்று, விலங்குகளின் தோலுக்கு ஒரு மாந்திரீகச் சக்தி இருக்கக் கூடும் என்று அவன் நம்பியதும் ஒரு காரணமாகும்’ எனக் கூறுகிறது. ‘ஒரு விலங்கின் தோலை அணிந்து கொண்டால் அவ்விலங்குக்குரிய வலிமையும் ஓடும் ஆற்றலும் தனக்கு அமையக் கூடும் என்று பண்டைய மனிதன் நம்பியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் காரணமாக அவன் தன் வேட்டையில் வெற்றி பெற விலங்கின் தோலை அணியத் தொடங்கியிருக்கக் கூடும்’ என்று இந்த நூல் கூறுகிறது.\n\nவிலங்குகளின் தோலை அரையில் ஆடையாக மனிதன் அணிய முற்பட்ட காலம் பழைய கற்காலமாய் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இக்காலத்தில்தான் மனிதன் வேட்டையாடும் தொழிலில் புகுந்தான்.\n\nதொடக்கத்தில் மனிதன் உரிக்கப்பட்ட விலங்கின் தோலை அப்படியே அணிந்து கொண்டான். அது முரடாகவும் உறுத்துவதாகவும் இருந்ததால், தனக்கு இயல்பாய் அமைந்திருந்த வலிமையான தாடைப் பற்களால் சுவைத்துத் தொய்வாக்கி அணிந்து கொண்டான். பழைய கற்காலத்தில் வாழ்ந்த ஐடல்பர்க்கு மனிதன் இந்த முறையில் தான் விலங்குகளின் தோலைத் தொய்வாக்கி ஆடையாக அணிந்து கொண்டான் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்றைக்கும் இதே முறையில்தான் எசுகிமோக்கள் (Eskimos) பற்களைக் கொண்டு தோலைத் தொய்வாக்கி ஆடையாக அணிந்து கொள்ளுகிறார்கள்.\n\nதொடக்கத்தில் மனிதன் தோலைத் தொய்வாக்கியதன்மேல் ஏதும் செய்யவில்லை. தொய்வாக்கிய தோலை அப்படியே அரையில் கட்டிக் கொண்டான் அல்லது உடம்பில் போர்த்துக் கொண்டான். புதிய கற்காலத்தில் தொடக்கத்தில்தான் தோலினால் ஆடை தைக்கக் கற்றுக் கொண்டான். கூர்மையான கற்களால் அல்லது எலும்புத் துண்டுகளால் தோல்களைக் கிழித்து, எலும்பினால் அல்லது தந்தத்தினால் அல்லது கல்லினால் ஆன ஊசிகளைக் கொண்டு, கிழிக்கப்பட்ட தோல் துண்டுகளை இணைத்துத் தைத்து ஆடையாக அணிந்தான். இவ்வாறு தோலினால் ஆடை தைத்து அணியும் வழக்கம் புதிய கற்காலத்தில்தான் ஏற்பட்டது.\n\nநாளடைவில் புதிய கற்கால மனிதன் விலங்குகளின் மயிரையும், மென்னயச் சணல் (Flax) இழைகளையும் கொண்டு நூல் நூற்கத் தொடங்கினான். அதற்காகத் தக்கிளிகளைக் (Spindles) கண்டுபிடித்து, அவற்றை நூல் நூற்கப் பயன்படுத்தினான். தென் பிரான்சில் குரோட்டு தியூ பாண்டால் (Grotte du Pontal) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த தக்கிளிகள் இக்கருத்தை உறுதி செய்கின்றன.\n\nவிலங்குகளின் மயிரையும் மென்னயச் சணல் இழைகளையும் கொண்டு நூற்ற நூல்களை முறுக்கேற்றி, அவற்றைப் பாய் பின்னுவது போல் நெய்து ஆடையாக்கினான். அப்படி நெய்யப்பட்ட ஆடைகளின் மீது மஞ்சள், சிவப்பு, நீலம் என்று பல வண்ணங்களைச் சாயம் பூசி அழகுபடுத்தினான். சுவிட்சர்வாந்தில் இராபென்காசன் என்ற இடத்தில் தோண்டப்பட்ட புதிய கற்காலப் புதையிடங்களில் இத்தகைய ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.\n\nபின்னர், நாகரிகக் காலத்தில் நார்மடியும் (Linen) பருத்தியும் பட்டும் ஆடைப் பொருள்களாக அமைந்தன. இன்றைக்குப் பருத்தி, பட்டு, கம்பளம், தோல், மென்மயிர்த்தோல், நார்மடி ஆகிய இயற்கை இழைகளுடன், ‘தெரிலின்’, ‘நைலான்’, ‘ஆர்லான்’, ‘இரேயான்’, ‘நைலக்சு’ முதலிய செயற்கை இழைகளும் உடை உருவாக்குதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர, இயற்கை இழைகளும் செயற்கை இழைகளும் கலந்த கலப்பு இழைகளும் உடை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பருத்தி நூலுடன் கம்பளியைக் கலந்து ஒருவகைத்துணி தயாரிக்கப்படுகிறது. அவ்வாறே பருத்தி நூலுடன் பட்டு இழைகளைக் கலந்தும் துணி தயாரிக்கப்படுகிறது. பருத்தி நூலோடு ‘தெரிலின்’ இழைகளைத் தகுந்த அளவில் கலந்து ‘தெரிகாட்டன்’ என்ற துணிவகை தயாரிக்கப்படுகிறது. அவ்வாறே ‘தெரிலினையும்’ கம்பளியையும் கலந்து ‘தெரிக்கம்பளி’ என்ற துணி வகையும் தயாரிக்கப்படுகிறது.\n\nநெசவுத் தொழில் ஏற்பட்ட பிறகு, தொடக்க காலத்தில் நாகரிக மக்கள் சதுர வடிவில் அல்லது நீள் சதுர வடிவில் நெய்யப்பட்ட துணிகளை அப்படியே ஆடைகளாக அணிந்து கொண்டனர். அவற்றை உடம்பின் மீது போர்த்திக் கொண்டனர். அவை ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்து இருப்பதற்கு அவற்றை இணைத்துக் கட்டினார்கள். அவை இடுப்பிலிருந்து நழுவாமல் இருப்பதற்கு அரையில் துணிப்பட்டைகளைக் கச்சைகளாகப் பயன்படுத்திக் கட்டிக் கொண்டனர்.\n\nமுற்காலத்தில் கிரேக்கர்கள் இந்த முறையில் தான் உடை அணிந்திருந்தார்கள். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இரண்டு உடைகள் உடுத்தியிருந்தார்கள். அவற்றுள் ஒன்று மெல்லிய ‘உட்சட்டை’ (Chiton) என்பது. இது உடம்பைப் பிடித்தவாறு இருந்தது; முழங்கால் வரை நீண்டிருந்தது; கை வைத்தும் கை வைக்காமலும் இருந்தது; நார்மடி அல்லது பருத்தி அல்லது கம்பளியால் நெய்யப்பட்டிருந்தது. செந்நீலம், சிவப்பு, நீலம், மஞ்சள் முதலிய வண்ணங்களில் மிளிர்ந்தது. தோள் பட்டைகள் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. பிடிமானத்திற்காக இடுப்பில் இந்த உடையைச் சுற்றி ஒரு பட்டை வளையத்தைப் பெண்கள் கட்டிக் கொண்டனர். பெண்களுடைய உட்சட்டை ஆண்களுடைய உட்சட்டைகளைக் காட்டிலும் உயரம் குறைவாக இருந்தன.\n\nஉட்சட்டைகளுக்கு மேல் ஆண்கள் நீண்ட, போர்வை போன்ற ஆடையைப் (Himation) போர்த்தியிருந்தார்கள். சதுர வடிவில் அல்லது நீள் சதுர வடிவில் அமைந்திருந்த கம்பளித் துணிகளையே போர்வை போன்ற ஆடையாகப் பயன்படுத்தினார்கள். இந்த ஆடை வெள்ளை நிறத்தில் இருந்தது. அதை வலக்கைப் பக்கம் வெறுமையாக இருக்கும்படி இடத் தோள்வழியாக உடம்பின் மீது போர்த்திக் கொண்டார்கள். பிடிப்புக்காகத் தோள்பட்டையில் கொக்கி (Hook) குத்திக் கொண்டார்கள். போர்வை போன்ற ஆடை தோளிலிருந்து கணுக்கால் வரை நீண்டிருந்தது. இந்த ஆடையினைப் பொதுமக்கள் அணிந்திருந்தார்கள். ஆனால், இராணுவ வீரர்களும் அரசாங்க அலுவலர்களும் உட்சட்டைக்கு மேல் போர்த்தியிருந்த அங்கி வேறுவிதமாக இருந்தது. அதுவும் சதுர வடிவில் அல்லது நீள் சதுர வடிவில் அமைந்திருந்தது. ஆனால், அது முழங்கால் வரை மட்டுமே நீண்டிருந்தது. அது பூ வேலைப்பாடுகள் நிறைந்து விளங்கியது.\n\nபெண்கள் உட்சட்டைக்கு மேல் ஓராடையைப் போர்த்தியிருந்தார்கள். இது கம்பளிச் சால்வை போன்ற அங்கி. இவ்வங்கியால் உடம்பு முழுவதும் போர்த்தி, தோள் பட்டைகளைக் கொக்கிகளால் இணைத்து, இடுப்பில் ஒரு கச்சையைக் கட்டி அணிந்து கொண்டார்கள். கழுத்திலிருந்து ஒரு மடிப்பு இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருந்தது.\n\nகிரேக்கர்களைப் போலவே உரோமானியரும் உடை அணிந்திருந்தனர். உரோமானிய ஆண்கள் உடம்பைப் பிடித்தவாறு அமைந்த, முழங்கால் வரை நீண்ட மேல் அங்கியை (Tunic) அணிந்திருந்தார்கள். இடுப்பில் பிடிமானத்திற்காக மேலங்கியைச் சுற்றி அரைக் கச்சையினைக் கட்டியிருந்தார்கள். ஆனால், அந்த உள்ளாடை வெறுமனே வெளுப்பாக இல்லாமல், செந்நீலப் பட்டை வரிகளைக் கொண்டிருந்தது. அணிபவருடைய தகுதிக்கேற்ப அந்தப் பட்டை வரி-\n\nஉடை வகைகள்\n\nஉடை வகைகள் களின் எண்ணிக்கையும் அகலமும் வண்ணமும் அமைந்திருந்தன.\n\nஉரோமானியப் பெண்களுடைய உள்ளாடை ‘சுடோலா’ (Stola) என்று சொல்லப்பட்டது. இது ஆண்களுடைய மேல் அங்கியைப் போலவே இருந்தது. ஆனால் இதற்குக் கை குட்டையாக இருந்தது. (ஆண்கள் கை வைத்த அங்கிகளையும், கை வைக்காத அங்கிகளையும் அணிந்திருந்தனர்).\n\nபெண்கள் ‘சுடோலா’ என்னும் உள்ளாடைக்கு மேல் ‘பால’ (Palla) என்ற ஆடையை அணிந்திருந்தனர். உரோமானியப் பெண்கள் தலையில் தொப்பி அல்லது மெல்லிய முகத்திரை அணிந்திருந்தார்கள். ‘பால’ ஆடையின் ஒரு முனையை அந்தத் தொப்பியின் மேல் அல்லது முகத்திரையின் மேல் போர்த்தியிருந்தார்கள்.\n\nகிரேக்கர்களைப் போலவே அராபியரும் உடை உடுத்தியிருந்தனர். அவர்களும் கணுக்கால் வரை நீண்ட, போர்வை போன்ற, நீளமான கைகளையுடைய ‘கைக்’ என்னும் பெயர் கொண்ட அங்கியை அணிந்திருந்தனர். அவர்களுடைய அங்கி உடம்பு முழுவதும் பரவித் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த அங்கிக்குள் ஒரு குட்டைச் சட்டையை அணிந்திருந்தனர். தலையின் மேற்பகுதியை ஒரு துணியால் மூடியிருந்தனர் பிடிப்புக்காக அதை நெற்றியில் கயிறுகளால் கட்டியிருந்தனர்.\n\nஆனால் அராபியருக்கு நேர் மாறாக எகிப்தியர் உடை அணிந்திருந்தனர். அவர்கள் குறைவான ஆடையையே அணிந்திருந்தனர். ஆண்கள் இடுப்பில் மட்டும் வெள்ளை நார்மடியினாலான ஒரு சிறிய துணியை அணிந்திருந்தனர். அரச குடும்பத்தினர் மட்டும் பொன்னிழை விரவிய ஆடையை அணிந்திருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் கால்களைப் பிடித்தவாறு அமைந்த ஆடைகளை அணிந்து கொண்டார்கள். அப்போதும் அதற்கு மேல் குறும்பாவாடை அணிந்து கொண்டார்கள். மேலங்கியும் குறும்பாவாடையும் பகட்டாகவும் பூ வேலைப்பாடுகள் நிறைந்தும் இருந்தன. ஆனால் சாதாரணக் குடிமக்கள் குறும்பாவாடையினையே தொடர்ந்து அணிந்து வந்தனர்.\n\nஎகிப்தியப் பெண்கன் தொடக்கத்தில் கழுத்திலிருந்து கணுக்கால் வரை நீண்டிருந்த ஓர் ஒற்றைப் பாவாடையை அணிந்திருந்தார்கள். அச்சட்டைக்குக் கைகள் இருந்தன. அது கழுத்துப் பக்கம் வெட்டப்பட்டிருந்தது. பிற்காலத்தில் மேலங்கி வந்ததும், அரச குடும்பத்துப் பெண்கள் முழங்காலை ஒட்டிய தளருடையை அணியத் தொடங்கினார்கள். ஆனால் சாதாரணப் பெண்கள் மட்டும் தொடர்ந்து பழைய உடையையே அணிந்து வந்தனர்.\n\nஇந்தியாவில் ஆண்களும் பெண்களும் இடையில் மட்டும் ஆடையை அணிந்திருந்தனர். பெண்கள் அரையில் ஆடையைச் சுற்றிலும் பிடிமானத்திற்காக ஒரு பட்டை வளையத்தைக் கட்டியிருந்தார்கள். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை மாற்றம் ஏதுமில்லாமல் இந்த உடையே இந்தியாவில் நீடித்தது.\n\nஇந்தியாவின் தென் பகுதியாகிய தமிழகத்திலும் இந்த நிலையே நிலவியது. ஆண்கள் தலையில் ஒன்றும் (தலைப்பாகை) இடுப்பில் ஒன்றுமாக (வேட்டி) இரண்டு உடைகளை அணிந்திருந்தனர். பெண்கள் இடுப்பு வரையுள்ள உடல் முற்றிலும் வெறுமையாக இருக்க, அரையிலிருந்து கணைக்கால் வரையில் மட்டுமே உடை அணிந்திருந்தனர் (ந.சி. கந்தையா பிள்ளை).\n\nசீனாவில் ஆன் (Han) அரச வமிசக் காலத்திலிருந்து (கி.மு. 206–கி.பி. 220) மிங்கு (Ming) அரச வமிசக் காலம் வரையிலும் (கி.பி. 1368–1644) ஆண்களும் பெண்களும் அகன்ற கைகளையுடைய, அளவிறந்த மடிப்புகள் கொண்ட தளர்ச்சியான, பாதம் வரை நீண்ட கிமோனோ முறை அங்கிகளை அணிந்திருந்தனர். இடையில் அங்கியை ஒரு கச்சையால் கட்டியிருந்தனர். இந்த ஆடை அணியும் முறையை அவர்கள் பாவோ (P’ao) என்று குறிப்பிட்டனர். கி.பி. 1644–இல் மிங்கு அரச வமிச ஆட்சியை முறியடித்துச் சிங்கு அரச வமிச ஆட்சி ஏற்பட்டபோது, சாவோ–பூ (Ch’ao-fu) என்ற ஆடை அணியும் முறை ஏற்பட்டது. இந்தப் புது முறையில் இடுப்புக்கு மேலே உள்ள ஆடைப் பகுதி நீண்ட பிடிப்பான கைகளை உடையதாகவும், கழுத்துப் பகுதியில் கழுத்தைப் பிடித்தவாறு அமைந்த விசிறி மடிப்புள்ள வட்டமான கழுத்துப்பட்டை உடையதாகவும் விளங்கியது. இடுப்புக்குக் கீழ்ப் பகுதி வழக்கம் போலப் பாதம் வரை நீண்டிருந்தது.\n\nசப்பானியரும் சீனரைப் போன்றே கிமோனோ பாணியில் நீண்ட பாவோ ஆடை அணிந்திருந்தனர். ஆனால் இவ்வாடை அணியும் முறையை அரச குடும்பத்தினர் மட்டுமே கடைப்பிடித்தனர். அரச குடும்பத்தினர் கிமோனோ ஆடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்திருந்தனர். அவர்களுடைய உடை மஞ்சள் நிறத்தில் இருந்தது. ஆனால் சாதாரணக் குடிமக்கள் ‘கினு’ (Kinu) என்ற பெயர் கொண்ட தொடை வரை நீண்ட சிறுசட்டையினை உடம்பின் மேற்பகுதியில் அணிந்திருந்தனர். உடம்பின் கீழ்ப்பகுதியில் ஆண்கள் கால்களைப் பிடித்தவாறு அமைந்திருந்த காற்சட்டைகளையும், பெண்கள் ‘மோ’ என்ற அரைப் பாவாடையையும் அணிந்திருந்தனர்.\n\nநாளடைவில் உலகின் பல பகுதிகளிலும் உடைகளில் மேம்பாடான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. செல்வமும் வசதிகளும் பெருகப் பெருக, ஆடைத் தொடர்பான வண்ணங்கள் விரிவாக வளரத் தொடங்கின. அரச குடும்பத்தினரும் அவர்களைப் பின்பற்றி உயர் வகுப்பினரும் பகட்டான, செழிப்பான ஆடைகளை அணியத் தொடங்கினர். தமது சமூக–பொருளாதாரத் தகுநிலைக்கேற்ப உடைகள் அமைய வேண்டும் என்பதற்காகப் பகட்டான விலையுயர்ந்த ஆடைகளையும், அவற்றுக்கேற்ப அணி அலங்காரப் பொருள்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். அலங்கார வண்ணங்களில் அவர்களுடைய ஆடைகள் ஒளிர்ந்தன. நவமணிகளும் பொன்னிழைகளும் எடுப்பான பூ வேலைப்பாடுகளும் ஆடைகளுக்கு மெருகூட்டின. இத்தகைய ஆடை அலங்காரத்துக்கேற்ப ஆடம்பரமான அணிகலன்களும் தலையணிகளும் காலணிகளும் பயன்படுத்தப்பட்டன.\n\nதங்களுடைய செல்வச் செழுமையைக் காட்டிக் கொள்ள மட்டுமன்றி, சமூகத்தில் தங்களுக்குள்ள உயர் தகுநிலையை வெளிப்படுத்தி நிலைநாட்டிக் கொள்ளவும் உயர் வகுப்பினர் பகட்டான, உயர்தரமான ஆடைகளைப் பயன்படுத்தினர். விலையுயர்ந்த மென் மயிர்த் தோலினாலான ஆடைகளை அணிந்தனர். உடையைச் சமூகத் தகுநிலையின் குறியீட்டுக் காரணியாகப் பயன்படுத்தினர்.\n\nஆயினும் அன்றைய கால கட்டத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சமயச் சீர்திருத்தவாதிகள் அலங்காரமான ஆடை அணிகளைக் கண்டித்தனர்; உடையில் எளிமை வேண்டும் என்று வற்புறுத்தினர். பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சமத்துவக் கோட்பாடுகள் எங்கும் பரவத் தொடங்கிய பிறகு, மக்களுடைய உடை அணியும் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பகட்டான உடைகள் மறைந்து, எளிமையான உடைகள் தோன்றத் தொடங்கின. செல்வர்கள், ஏழைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான உடைகள் தோன்றின. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இருபது அல்லது முப்பதுகளில் நீண்ட முழுக்காற் சட்டைகள் அணியும் போக்கு வளரத் தொடங்கியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி உடைகள் ஏற்பட்டன. ஆண்களுக்குச் சட்டை, முழுக்காற் சட்டை என்றும், பெண்களுக்கு மேற் சட்டை, அரைப் பாவாடை என்றும் உடைகள் தோன்றின. இந்தக் கால கட்டத்திலேயே இந்தியா போன்ற கீழை நாடுகளிலும் ஆண்கள் சட்டையும், பெண்கள் சோளியும் அணியும் வழக்கம் ஏற்பட்டது.\n\nதையல் பொறி கி.பி. 1850–ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆண் பெண் இருபாலார் உடைகளும் தரப்படுத்தப்பட்டன. தொடக்கத்திலிருந்து பெரியவர்களைப் போலவே சிறாரும் தத்தம் பாலினத்துக்கேற்ப உடையணிந்து வந்தனர். பெரியவர்களுடைய உடைகள் மாறியபோது சிறாருடைய உடைகளும் மாறின. சிறாருடைய உடைகளும் இந்தக் கால கட்டத்தில் தரப்படுத்தப்பட்டன. உடைகள் தரப்படுத்தப்பட்டபோது, அவற்றைப் பேரளவில் உற்பத்தி செய்வது எளிதாயிற்று. இன்றைக்கு ஆண் பெண் இருபாலாருக்கும், எல்லா வயதினருக்கும் தரப்படுத்தப்பட்ட ஆயத்த ஆடைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இது இருபதாம் நூற்றாண்டின் சாதனையாகும்.\n\nஇன்று பண்பாட்டுத் தொடர்புகளால் பல்வேறு நாடுகளில் ஐரோப்பிய நாடுகளின் உடையணி முறையின் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தம் தேசிய உடைகளை விலக்கி ஆங்கிலேயரைப்போல் உடைகளை அணிந்து வருகின்றனர். இத்தகைய போக்கு மிகுதியாக ஆண்களிடந்தான் காணப்படுகிறது. பெண்களிடம் இன்றும் மரபு வழியான உடைகளை அணியும் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவில் பெண்கள் சேலையையும், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் சாரோங்கு (Sarong) என்ற மரபு வழியான உடையையும், பாகிசுத்தானில் சால்வர்–காமீசு உடைகளையும் அணிந்து வருகின்றனர்.\n\nஉடைகளின் வகைகளும் உடை அணியும் முறைகளும் நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபட்டாலும், உடை பொதுவாக எல்லா நாடுகளிலும் எல்லாக் கால கட்டங்களிலும் சில குறிப்பிட்ட செயல்களை ஆற்றுகிறது. முதலாவதாக, உடை மனிதனை மழை, குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மழை, குளிர் இவற்றுக்கும் உடையின் தோற்றத்திற்கும் காரண – காரியத் தொடர்பு இல்லாவிடினும், செயற்பாட்டளவில் உடை மனிதனின் உடம்பை இக்கூறுகளிலிருந்து பாதுகாக்கிறது. மைய ஆசியாவின் இசுடெப்பி (Steppe) என்ற புல்வெளிப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும். கோடைக் காலத்தில் கூட இரவில் குளிர் அடிக்கும். ஆதலால் அங்குள்ள மக்கள் கதகதப்பான தோலாடைகளை அல்லது மென்மயிர்த் தோலாடைகளை அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுகின்றனர். அவ்வாறே வட துருவப் பகுதியில் வாழும் எசுகிமோக்கள் கடுங் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தோலாடைகளையும் மென் மயிர்த் தோலாடைகளையும் அணிகின்றனர். ஆனால் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிறவர்களுக்கு உடலுக்குக் காற்றோட்டம் தேவைப்படுகிறது. ஆகவே அவர்கள் குறைவான உடை அணிகிறார்கள்.\n\nஇரண்டாவதாக, உடை மானத்தைக் காப்பாற்றுகிறது. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மக்கள் உடம்பு முழுவதையும் ஆடையால் மறைத்தார்கள். மைய மேற்கு நாடுகளில் வாழும் இசுலாமியர்கள் நீண்ட அங்கிகளை அணிகின்றனர். ஆண்கள் கழுத்திலிருந்து கணுக்கால் வரையிலும் நீண்ட அங்கிகளை அணிகிறார்கள். மானத்தைப் பேண உடம்பை முழுவதும் மறைக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவ்வாறே பெண்களும் நீண்ட அங்கிகளை அணிகிறார்கள். தலையிலிருந்து கால் வரையிலும் உடம்பை மறைக்கும் அங்கிகளை அணிகிறார்கள். முகத்தை ஒரு மெல்லிய திரையால் மூடிக் கொள்ளுகிறார்கள். முகத்தை மூடுவது தான் மானத்தைக் காக்கும் என்று அப்பெண்கள் கருதுகிறார்கள். முகத்தை மூடாமல் இருப்பது நிருவாணத்துக்குச் சமம் என்றும், ஆகவே, முகத்தை மூடாமல் போனால் மானம் போகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் முகத்திரை அணியாமல் வெளியில் செல்வது கிடையாது. 1930–ஆம் ஆண்டு அளவில் ஈரானில் பெண்கள் முகத்திரை இடுவது தடை செய்யப்பட்டபோது, பல வயதான பெண்கள் வீட்டை விட்டு வெளியே வாராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். இலாவோசில் (Laos) வாழும் இலாமெட்டு (Lamet) மக்களிடையே தொடக்கத்தில் பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை எதுவும் அணியாமல் வாழ்ந்து வந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாய்லாந்துப் பெண்களைப் பார்த்து அவர்கள் மார்புச்சட்டையும், பாவாடையும் அணியும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் பிறகு அவர்கள் மார்புச் சட்டையின்றி வெளியே செல்லுவதில்லை. மார்புச்சட்டை அணியத் தொடங்கியதும், மானத்தைக் காக்க அது வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படத் தொடங்கியது. இந்த எண்ணமே இப்பொழுது இந்தியப் பெண்களுக்கு இருக்கிறது. ஆடை சற்றுக் கிழிந்திருந்தால் கூட அது அவமானமாகக் கருதப்படுகிறது.\n\nமூன்றாவதாக, உடை அலங்காரத்துக்கு உதவுகிறது. அலங்காரத்துக்கு அணிகலன்கள் மட்டுமன்றி ஆடைகளும் பயன்படுகின்றன. வண்ண வண்ண வடிவங்களில் ஆண் பெண் இருபாலாரும் – குறிப்பாகப் பெண்கள் உடை அணிவது அவங்காரத்துக்கே. அலங்காரத்துக்கு மெருகு ஊட்டுவதற்காக உடைகளில் கண்ணாடிகள், பொன்விழைகள், வண்ணக் கரைகள், குஞ்சரங்கள், மடிப்புகள், பூ வேலைப்பாடுகள் வைக்கப்படுவதுமுண்டு.\n\nநான்காவதாக, உடை அணிபவரின் சமூகத் தகுதிநிலையை வெளிக்காட்டுகிறது. அணிபவருடைய தகுநிலை எப்படிப் பட்டது என்பதை உடை வெளிப்படுத்துகிறது. உரோமப் பேரரசில் (கி.மு. 207–கி.பி. 476) அரசர்களும் போர்ப்படைத் தளபதிகளும் நீதிபதிகளும் செந்நீல ‘டோகா’க்களையே அணிந்திருந்தனர். சாதாரண குடிமக்கள் வெண்ணிற ‘டோகா’ க்களையே அணிந்திருந்தனர். பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பிரான்சில் அரச குடும்பத்தினர் மட்டுமே பட்டாடைகளும் சூரியகாந்திப்பட்டு (Velvet) ஆடைகளும் அணிய உரிமை கொண்டிருந்தனர். அவ்வாறே இங்கிலாந்திலும் முதலாம் எலிசபெத்து ஆட்சிக் காலத்தின்போது (கி.பி. 1558–1603) அரச குடும்பத்தினர் மட்டுமே சூரியகாந்திப்பட்டு உடைகளை அணியும் உரிமை கொண்டிருந்தனர். சைனாவில் முன்பு மஞ்சள் நிற ஆடைகள் உயர் வருப்பினருக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. எகிப்து, பாபிலோனியா, அல்சீரியா, பாரசீகம் முதலிய நாடுகளில் அரச குடும்பத்தினரும் செல்வர்களும் விலையுயர்ந்த பகட்டான ஆடைகளை அணியும் உரிமை கொண்டிருந்தனர்.\n\nஇன்றைக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாவிடினும் அவரவர் வயதுத் தகுநிலை, திருமணத் தகுநிலை, செய்தொழில் தகுநிலை ஆகியவற்றிற்கேற்ப ஆடை அணியும் வழக்கம் இருக்கிறது. இளங்குழந்தைகளுக்கு என்று தனி உடை வகைகள் இருக்கின்றன. குழந்தைகள் பெரிய பிள்ளைகளாகும்பொழுது அப்பருவத்திற்கேற்ற ஆடைகள் அணிகின்றனர். பிறகு பெரியவர்களாகும்போது அப்பருவத்திற்கு ஏற்ப உடைகள் அணிகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒருவன் திருமண வயதை எய்தும்போது அதிக ஆடைகள் அணிவதன் மூலம் தன் வயதுத் தகுநிலையைத் தெரியப்படுத்துகிறான்.\n\nஉலகில் சில நாடுகளில் கைம்பெண்களுக்கென்று தனி உடை வகைகள் இருக்கின்றன. மேலை நாடுகளில் கறுப்பு உடையும், இந்தியாவில் வெள்ளைச் சேலையும் பெண்களின் கைம்மை நிலையை வெளிப்படுத்துகின்றன. முன் காலத்தில் சைனாவில் சிவப்பு ஆடைகள் சுமங்கிலிகளுக்கும் வெள்ளை ஆடைகள் கைம்பெண்களுக்கும் உரித்தாக இருந்தன.\n\nபல்வேறு துறைகளில் பணியாற்றுவோருக்கென்று இன்று தனித்தனி உடை வகைகள் இருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர், இராணுவத்தினர், காவலர், இரயில்வே தொழிலாளிகள் என்ற பல தரப்பட்ட செய்தொழில் வகுப்பினர் தத்தமக்கென்று ஒரு சீருடை கொண்டிருக்கின்றனர். ஒரே பிரிவில் பணியாற்றுவோரும் (எடுத்துக் காட்டாக இராணுவத்தினர்) தத்தம் படிநிலைக் கேற்ப ஒரு தனிச் சீருடை கொண்டிருக்கின்றனர். சி.என்.ந.\n\nதுணை நூல்கள்\n\nகந்தையா, ந.சி., தமிழகம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1972.\n\nமணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, உடையலங்காரமும் நகையலங்காரமும், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 1982.\n\nHoebel, E., Adamson, Man in the Primitive World: An Introduction to Anthropology, McGraw–Hill Book Company, New York, 1958."}}