{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sey89fed/", "data": {"id": "sey89fed", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sey89fed/", "kind": "article", "headword": "சாராயம், சாராய மிகைப்பு", "romanization": "cārāyam, cārāya mikaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:53.326035+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பல வகையான மது (சாராயம்) வகைகளில் எத்தில் ஆல்கஹால் (எத்தனால்) மருந்தியல் துறையில் இன்றியமையாதது.", "body_ta": "பல வகையான மது (சாராயம்) வகைகளில் எத்தில் ஆல்கஹால் (எத்தனால்) மருந்தியல் துறையில் இன்றியமையாதது. மருந்து என்ற அளவில் எத்தனால் மிகக் குறைவாகவே பயன்பட்டாலும், வேறு எந்த மருந்தையும் விட, இதை மக்கள் அருந்தி மருந்தடிமையாகின்றனர். மேலும் பல மருந்துகளுடன் வினை புரிந்து தீய விளைவுகளையும் எத்தனால் உண்டாக்குகிறது.\n\nஎத்தனால் ஓர் எளிய வேதி மூலக் கூறாகும். ஈஸ்ட்டால் சர்க்கரை நொதித்தல் அடையும் போது, அதன் விளை பொருளாக எத்தனால் உண்டாகிறது. மிகையாக மது அருந்தும் போது நரம்பு மண்டலத் தளர்வு ஏற்படுவதற்கு எத்தனாலே காரணமாகும்.\n\nநாளும் இரவு உணவுடன் 2 அவுன்ஸ் மது அருந்துபவரை ஓரளவான குடிகாரர் என்றும், நாளும் 6 அவுன்ஸ் அருந்துபவரை நடுத்தரக் குடிகாரர் என்றும், 10 அவுன்சுக்கு மேல் மது அருந்துபவரைப் பெருங்குடிகாரர் என்றும் மூவகையாகப் பிரிக்கலாம்.\n\nஎத்தனால் மைய நரம்பு மண்டலத்தைத் தளரச் செய்கிறது. தளரும் அளவு, அருந்திய மதுவின் அளவைப் பொறுத்தது. நரம்பு மண்டலத் தளர்வுக்கு முன்பு முரட்டுத் தனம், தவறான நடத்தை, உள வய மாற்றங்கள், தொடர்ந்து பேசுதல் (பிதற்றல்) ஆகியவை தோன்றுகின்றன. விஞ்சிய அளவால் ஏற்படும் மரணத்திற்கு, மூச்சு மண்டலத் தளர்வே காரணமாகும். பெரும்பாலான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. குருதி நாள விரிவு, உமிழ் நீர், இரைப்பை நீர்ச் சுரப்பு அதிகரிப்பு, கடும் பசி, நாட்பட்ட இரைப்பை அழற்சி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்குத் தோன்றலாம். கல்லீரல் பாதிக்கப்படும். இதய வீக்கம், இதயத் தளர்வு, குருதி உறை கட்டி, அடைப்பு ஆகியவையும் தோன்றலாம்.\n\nஎத்தனால், முழுமையாக இரைப்பை—குடல் பாதையில் உறிஞ்சப்படுகிறது. மிகவும் கொழுப்புக் கொண்ட பால் போன்ற உணவுகள், மது உறிஞ்சலைக் குறைக்கும். குருதியில் இதன் அளவைக் கொண்டு மனிதனின் நிலையை அறுதியிடலாம். எத்தில் ஆல்கஹால் மிகவும் எளிதில் தாய் சேய் இணைப்பு மூலம் சூல் சிசுவை அடைகிறது. இதன் விளைவாகச் சிசு மது நோயியம் (foetal alcohol syndrome) என்ற நிலையில் மிகச் சிறிய தலை (microcephaly), குன்றிய வளர்ச்சி, அரை குறையாக மூடிய கண்கள், இதயக் குறைபாடு, பிறப்புறுப்பு ஊனம், காது கேளாமை போன்றவை உண்டாகின்றன.\n\nஅருந்தப்பட்ட 90—98% எத்தனால் வளர்சிதை மாற்றமடைகிறது. 2—10% எம்மாற்றமும் அடையாமல் சிறுநீரிலோ, வெளி மூச்சுக் காற்றிலோ வெளிப்படுகிறது. மது மிகையாக அருந்தப்படும் போது, மது அருந்தியவருக்கு மட்டுமல்லாமல், அருகில் உள்ளவர்களுக்கும் தீமையேற்படும்.\n\nமேலே குறிப்பிடப்பட்ட அட்டவணையின் மூலம் குடிகாரரின் நிலையையும், குருதி அளவையும், குடித்த மதுவின் அளவையும் தெரிந்து கொள்ளலாம். மிகை மது நிலைக்குச் சிரை வழியாக மானிட்டால் நீர்மத்தைச் செலுத்தலாம். குருதி ஊடு பிரிவு முறையையும் கையாளலாம்.\n\nஎத்தனால் உணவுப் பற்றாக்குறை, ஊட்டமின்மை, நோய் அறிகுறிகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது. கணைய அழற்சி, நாட்பட்ட இதயத் தசைத் தளர்வு, புற நரம்பழற்சி, மனத் தளர்ச்சியால் தற்கொலை மனப்பான்மை, நினைவாற்றல் குறைவு, உளறல், தடுமாற்ற நடை, வெர்னிக்—கார்சகோஃப் நோயியம் (syndrome) போன்ற மீள முடியா நரம்பு நிலைகள் சாராய மிகைப்பின் அறிகுறிகளாகும். —அ. கதிரேசன்"}}